இயக்குனர் பாலா தனது பி ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிக்க அதர்வா, கயல் பட நாயகி ஆனந்தி ஆகியோர் நடிக்க, நையாண்டி படத்துக்கு பிறகு சற்குணம் இயக்கும் படம் சண்டி வீரன் . வரும் ஏழாம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தை சலீம் படத்தின் புரடியூசரும் இப்போது ஜாக்சன் துரை படத்தை தயாரித்து வருபவருமான ஸ்ரீ கிரீன் புரடக்ஷன்ஸ் சரவணன் வெளியிடுகிறார் .
இந்த நிலையில் படம் பற்றிப் பேச பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர் , ஸ்ரீ கிரீன் புரடக்ஷன்ஸ் சரவணன், இயக்குனர் சற்குணம், நாயகன் அதர்வா நாயகி ஆனந்தி நால்வரும் .
மிக இயல்பாக படம் பற்றி விவரித்த இயக்குனர் சற்குணம் “ஓர் இயல்பான கதையை காதல் , குடும்பம் சமூகம் என்று சொல்லி இருக்கிறேன் . படத்தை தஞ்சை மாவட்டம் , மற்றும ராமநாதபுரம் பகுதிகளில் எடுத்துள்ளேன். அதர்வா , ஆனந்தியை அடுத்து மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார் லால். எல்லோருக்கும் பிடிக்கும் படமாக இது இருக்கும் .“என்ற சற்குணத்திடம்
“வாகை சூடவா படத்தில் கொட்டும் மழையில் ஒரு மீன் பனை மரத்தில் இருந்து வழியும் நீரின் வழியே மரம் ஏறுவதைக் காட்டி இருப்பீர்கள்? அது போல இந்தப் படத்தில் என்ன ஸ்பெஷல்? ” என்று கேட்டேன்.
பொதுவாக படப்பிடிப்பு சமயத்தில் கண்ணுக்கு படும் வித்தியாசமான அபூர்வமான நிகழ்வுகளை- காட்சிகளை எடுத்து வைத்துக் கொண்டு படத்தில் சரியான இடத்தில் பயன்படுத்துவேன். இந்தப் படத்திலும் அது போன்ற சில இயற்கை நிகழ்வுகளை படமாக்கி வைத்திருக்கிறேன். பாம்புகள் பின்னிப் பிணையும் காட்சி, இரண்டு தட்டான்கள் ஒன்றின் மீது ஒன்று அமர்ந்து பறக்கும் காட்சி இது போல சில காட்சிகள் உண்டு”
இந்தப் படத்தின் கதை ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது . திரைக்கதை முழுக்க முழுக்க கற்பனை”என்றார்
நிதானமாக பேச ஆரம்பித்த அதர்வா “பரதேசி படம் முடிஞ்ச உடனேயே , பாலா அண்ணன் என் கிட்ட ‘நாம இன்னொரு படம் பண்ணுவோம்’ன்னு சொன்னார் . ஒரு நாள் என்னை போன் . என்னை போன் பண்ணி வரச் சொல்லி “சற்குணம் சொன்ன கதை ஒண்ணு ரொம்ப நல்லா இருக்கு. நான் தயாரிக்கறேன்.நீ நடின்னு சொன்னார்
பரதேசி படத்தில் நடிக்கும்போது தேசிய விருது பெற்ற ஒரு இயக்குனர் (பாலா) படத்தில் நடிக்கிற பெருமை இருந்தது . இந்த சண்டி வீரன் படம் மூலமா தேசிய விருது பெற்ற இரண்டு டைரக்டர்கள் (பாலா, சற்குணம்) உருவாக்கும் படத்தில் நடிக்கிற பெருமை கிடைச்சு இருக்கு.
இந்தப் படத்துல , இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்குப் போய் சம்பாதித்து மீண்டும் சொந்த ஊருக்கு வந்து சில சமூகக் கடமைகளை செய்கிற சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறேன்” என்றார்
“காலேஜ் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்ட ஒரு பெண்ணின் கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறேன். ரொம்ப நேட்டிவிட்டியான சிறப்பான கேரக்டர் இது . சூப்பரான கதை . நிச்சயமா ஒரு நல்ல படம் உங்களுக்காக காத்து இருக்கு ” என்றார் கயல் ஆனந்தி .
”வாங்கி வெளியிடும் அளவுக்கு இந்தப் படத்தில் உங்களைக் கவர்ந்த விஷயம் எது ?” என்று ஸ்ரீ கிரீன் அதிபர் சரவணனிடம் கேட்டேன்.
பாலா தயாரிக்கும் படம். சற்குணம் நல்ல இயக்குனர் . கதை நன்றாக இருந்தது . படம் நன்றாக வந்து கொண்டிருந்தது . அதனால் வாங்கி வெளியிடுகிறேன்” என்றார் சரவணன் .
அருமை .