
உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் மூவீஸ் சார்பில் தயாரித்து ஹீரோவாக நடிக்க, சந்தானம் நயன்தாரா ஆகியோர் உடன் நடிக்க, ஜெகதீஷ் என்ற அறிமுக இயக்குனர் இயக்கி இருக்கும் படம் நண்பேன்டா.
பாஸ் என்கிற பாஸ்கரன் மற்றும் ஒரு கல் ஒரு கண்ணாடி முதலிய வெற்றிகரமான காமெடி படங்களை இயக்கிய எம் ராஜேஷிடம் உதவி இயக்குனராக இருந்தவர் இவர். குருநாதர் படத்தில் இடம் பெற்ற நண்பேன்டா என்ற வசனத்தையே படத்தின் தலைப்பாக்கி விட்டார்.
படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டத்தை நடிகர்கள் சூர்யாவும் ஆர்யாவும் வந்து ‘வீர்ய’மாக வெளியிட்டார்கள் .
முன்னோட்டத்தையும் இரண்டு பாடல்களையும் திரையிட்டார்கள். ராஜேஷின் காமெடி படத்தை பார்ப்பது போல காமெடியும் கவர்ச்சியுமாக இருக்கிறது முன்னோட்டம்.
பாலசுப்ரமணி’யெம்’ ஒளிப்பதிவில் வண்ணமயமான லொக்கேஷன்கள் மற்றும் உடைகளில் நயன்தாராவும் உதயநிதியும் ஆடி இருக்கிறார்கள் .
முகத்தில் சற்று ‘ பக்குவம்’ தெரிந்தாலும் உடம்பு என்னவோ இன்னும் உருவி விட்டது போலதான் இருக்கிறது நயன்தாராவுக்கு. உதயநிதியின் நடன ஸ்டெப்களில் மேலும் முன்னேற்றம் . சபாஷ் .
பாடல் வரிகளில் ”வியந்தாரா .. ‘நயந்தாரா” என்றெல்லாம் போட்டு நயன்தாரா பேரை கொண்டு வந்திருக்கிறார் வைரமுத்து .
“உதயநிதியை பார்த்த போது பிறக்கும்போதே ஹீரோவா பிறந்தவர் நீங்க . சினிமாவுல நடிச்சு ஏன் கஷ்டப்படணும்னு கேட்டேன் . ஆனா அவர் நடிப்பின் மேல கொண்ட ஆர்வத்தால் ரொம்ப சிறப்பா நடிச்சு இருக்கார்” என்றார் எஸ் ஜே சூர்யா
” பாட்டும் டிரைலரும் பிரம்மாதம் ” என்றார் ஆர்யா .
நயன்தாராவை நயந்தும் வியந்தும் பாராட்டினார் சீனு ராமசாமி .
” உதயநிதியின் முந்தின படத்துக்கு மியூசிக் போட்ட போது அட கஷ்டப்படுவாருன்னு கவனத்தோட மியூசிக் போட்டேன் . ஆனா இந்தப் படத்தில் அவர் ஆடி இருப்பதை பார்க்கும்போது பிரபுதேவாவுக்கு போட வேண்டிய பாட்டை இவருக்கு போடலாம்னதோணுது ” என்றார் இசை அமைத்த ஹாரீஸ் ஜெயராஜ்
“உதயநிதிக்கும் சந்தானத்துக்கும் இடையில ஒரு கெமிஸ்ட்ரி எப்பவும் நல்லா இருக்கும் . அது இந்தப் படத்துலயும் தெரியுது ” என்று ….மேடையில் இல்லாத நயன்தாராவை மறைமுகமாக கலாய்த்தார் சூர்யா.
உதயநிதியின் பேச்சில்தான் ஆர்னால்டு சுவாஷ்நெகர் வந்தார் . “இந்த நிகழ்ச்சிக்கு சந்தானம் வந்து இருக்கார். அவரு ஹீரோவா நடிக்கிற படத்தோட ஆடியோ விழாவுக்குக் கூட அவரு போக மாட்டார். அப்படிதான் ஐ படத்தோட ஆடியோ விழா நடந்த போது ‘என்ன சந்தானம் விழாவுக்கு போகலையா/’ன்னு கேட்டேன் . அதுக்கு அவர் ‘அதான் எனக்கு பதிலா ஆர்னால்டு ஷ்வாஸ்நெகர் போயிருக்காரே…. . அப்புறம் என்ன?’னு கேட்டார் . நான் இந்த படத்தோட ஆடியோ விழாவுக்கு கூப்பிடும்போது ‘ நான் ஆர்னால்டை எல்லாம் கூப்பிடல’ன்னு சொன்னேன் . சந்தானம் வந்துட்டாரு . நன்றி ” என்றார்.
பை தி பை .. இது கலாய்ப்புதானே ?