முண்டாசுப் பட்டி மூலம் முண்டா தட்டி முடித்த கையோடு பரிவட்டம் கட்டிக் கொண்டு தனது திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட் சார்பில் அடுத்து சி.வி.குமார் சந்தைக்கு கொண்டு வரும் படம்… சரபம் !
நவீன் சந்திரா சலோனி உத்ரா இணையராக நடிக்க, நரேன் காதல் கண்ணன் போன்ற பல ‘டைப்பிக்கல்’ முகங்கள் நடிக்கும் இந்தப் படத்தை அருண் மோகன் என்ற புதியவர் (ஒரே ஆளுதான்!) இயக்குகிறார்.
“அது என்ன சரபம்?” என்றால் “இது சம்ஸ்கிருத வார்த்தை . சிங்க முகம் கொண்ட பறவையின் பெயர்தான் சரபம். தமிழில் அதுக்கு யாளின்னு ஒரு சொல் இருக்கு. ஆனா அந்தப் பேரை வேற ஒருத்தர் பதிவு செஞ்சு வச்சிருக்கறதால நாங்க வேற வழியில்லாம இந்த பேரை வச்சோம் .” என்கிறார் தயாரிப்பாளர் .
மூன்று மனிதர்கள்… அவர்களுக்குள் நடக்கும் நெறி முறைகள் இல்லாத விளையாட்டுதான் படம் . அதுக்கு மேல எல்லாமே சஸ்பென்ஸ் . மேற்கொண்டு கதை கேட்காதீங்க ” என்கிறார் இயக்குனர் ( சரி விடுங்க . கேக்கல )
“மாட்டிக்காம தப்பு செஞ்சா பணம் கிடைக்கும்னா தாரளமா தப்பு செய்யலாம்” என்ற வசனத்தோடு (சினிமா எடுக்கறதச் சொல்றாகளோ?) ஆரம்பிக்கும் டிரைலர் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கிறது . குறிப்பாக கிருஷ்ணன் வசந்தின் ஒளிப்பதிவு ஈர்க்கிறது அந்த மூன்று கதாபாத்திரங்களில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வண்ணத்தில் லைட்டிங் செய்து கவனம் கவர்கிறார்கள்
இப்படியாக பீட்சா , சூது கவ்வும், தெகிடி .முண்டாசுப்பட்டி , சரபம் ஆகிய படங்களை தயாரித்த சி வி குமார் அடுத்து தானே இயக்குனராகவும் களம் இறங்குகிறார். (அந்த படத்தை உங்க டைரக்டர்கள் எல்லாம் சேர்ந்து தயாரிச்சா எப்படி இருக்கும் குமார் சார் ?)