சூப்பர் டாக்கீஸ் சார்பில் சமீர் பரத் ராம் தயாரிக்க, பிரேம்ஜி அமரன், சித்தன் மோகன்,செல்வமுருகன் , ஸ்வயம் சித்தா , ஞானசம்மந்தன் , லட்சுமிப் பாட்டி நடிப்பில் சுரேஷ் சங்கையா இயக்கி இருக்கும் படம்.
நடமாடும் நகைக்கடை போல இருக்கும் ஒரு கிராமத்து நபர் நான்கு பேரால் வெட்டிக் கொல்லப்படுகிறார் . மறுநாள் அந்தப் பிணத்தைப் பார்க்கும் ஒரு வெள்ளந்தி நபர் (பிரேம்ஜி ) பிணத்தின் விலை உயர்ந்த வாட்ச் , செல்போன் , மற்றும் தடிமனான சங்கிலி போன்ற நகைகளை யாரும் திருடி விடுவார்கள் என்று போலீஸ் ஸ்டேஷனில் கொடுக்க எடுத்துக் கொண்டு போகிறார் .

தவிர பிணம் வெயிலில் காய்வது பொறுக்காமல் கொஞ்ச தூரம் இழுத்து மாற நிழலில் விட்டு விட்டுப் போகிறார் . போகும் வழியில் ஒரு வயசான பாட்டிக்கு தனது இருசக்கர வாகனத்தில் லிஃப்ட் கொடுக்கிறார்.
ஸ்டேஷனில் பொருட்களை ஒப்படைக்கும்போது கொலையாளி அணிந்து இருந்த சுமார் அம்பது பவுன் நகைகள் காணாமல் போயிருப்பது தெரிகிறது . கொலை செய்யப்பட்ட இடம் வேறொரு போலீஸ் ஸ்டேஷன் எல்லை , பிணத்தை நிழலில் இழுத்துப் போட்ட இடம் தான் இந்த ஸ்டேஷன் எல்லை என்ற நிலையில் இரண்டு ஸ்டேஷன்களும் இதில் சம்மந்தப்படுகிறது .
கொலையாளிகள் அந்த ஸ்டேசனில் சரண்டர் ஆக, அவர்கள் கொலையாளிகளையும் இங்கே கொண்டு வந்து ஒப்படைக்கின்றனர் . நகை தொலைந்து விட்டதாக சொல்லி விட்டு , கொலை கேசை முடித்து விட்டு , அப்பாவி இளைஞனை அடித்து உதைத்து நகையை பிரித்துக் கொள்ள இரு ஸ்டேசன் காவலர்களும் திட்டமிட நடந்தது என்ன என்பதே படம்.

கிராமத்து போலீஸ் ஸ்டேசன்கள், அங்கு பணியாற்றும் காவலர்கள் என்ன லட்சணத்தில் கடமைக்கு வேலை செய்கிறார்கள்; அதே நேரம் பொய் சாட்சிகளையும் சம்பவங்களையும் எப்படி தங்களுக்கு சாதகமாக மாற்றுகிறார்கள்; கீழ் நீதிமன்றங்கள் எப்படி இயங்குகின்றன போன்றவற்றை யதார்த்தமாக காட்டுகிறார் சுரேஷ் சங்கையா .
அதில் ஆங்காங் சில காமெடிகள் வருகின்றன .
போலீசாராக சித்தன் மோகன், செல்வமுருகன், முத்துப்பாண்டி, காதல் ஜோடியாக பிரேம்ஜி – ஸ்வயம் சித்தா , நீதிபதியாக ஞானசம்மந்தன் எல்லோரும் பேசிக் கொண்டே இருப்பதுதான் நடிப்பு என்று முடிவு செய்து விட்டார்கள்.
எந்த இலக்கணத்திலும் அடங்காமல் இருக்கிறது பிரேம்ஜி அமரன் நடிப்பு .

இந்தக் கதை மூலம் சொல்ல வரும் விசயம் என்ன ? அதற்கு பொருத்தமான முடீவு படத்தில் இருக்கிறதா? சொல்ல வேண்டிய விஷயங்கள் அழுத்தமாக சொல்லப்பட்டு உள்ளனவா என்ற கவனம் இல்லாமல் எடுக்கப்பட்டு இருக்கும் படம்.
உள்ளே ஒரு நல்ல கதை இருந்தும் பலகீனமான திரைக்கதை காரணமாக சோதனையே மிஞ்சுகிறது
,