அரசியலுக்குள் இருக்கும் அரசியலை விட சினிமாவுக்குள் இருக்கும் அரசியல் அதிகம் . அதனால்தானோ என்னவோ அந்த சினிமா விழாவில் வில் வெள்ளை சட்டை வேட்டிகளின் அணிவகுப்பை பார்த்தபோது…. தவறிப் போய் நாம் ஏதாவது ஒரு சாதிக் கட்சியின் ரகிசய ஆலோசனைக் குழு கூட்டத்தில் நுழைந்து விட்டோமோ என்ற ஐயம் எழுந்தது.
”பணம் இருந்தா என்ன வேணும்னாலும் பண்ணலாம்னா அந்த பணத்தை சம்பாதிப்பதற்காக என்ன வேண்ணாலும் பண்ணலாம் இல்லையா?”‘ என்ற கேள்வியின் அடிப்படையில் உருவாகி இருக்கும் இந்தப் படம், தவறான வழிகளில் பணம் சம்பாதிப்பதை சுவாரஸ்யமாக சொல்லி… கடைசியில் ”அப்படி தப்பான வழியில் பணம் சம்பாதித்தால் பணம் வந்து விடும் . ஆனால் பின்னல் என்னென்ன வரும் தெரியுமா ?” என்று கூறி நேர்மைக்கு நெத்திச் சுட்டி கட்டி முடியுமாம் .
சூது கவ்வும் படத்தின் இயக்குனர் நலன் குமாரசாமி, தன்னிடம் உதவியாளராக இருந்த வினோத் என்பவர் சொன்ன கதை பிடித்துப் போய் , படம் தயாரிக்கும் எண்ணத்தில் இருந்த மனோபாலாவிடம் அனுப்பி வைக்க , பல கதைகளை கேட்டு சலித்துப் புளித்துப் போய் இருந்த மனோபாலா இந்த காராசாரமான கதையை சப்புக் கொட்டி ரசிக்க.. படம் உருவாகி விட்டது .
இந்தியில் பல படா படா மகா மெகா தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் கொண்டாடும் நம்ம ஊர் கேமரா மேனும் முத்துக்கு முத்தாக படத்தில் கதாநாயகனாக நடித்தவருமான நட்டி என்கிற நட்ராஜ்தான் இந்தப் படத்தின் நாயகன்.
வெண்மேகம் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான இஷாராதான் படத்தின் நாயகி (தமிழில் இவர் வாயசைத்து நடித்த முதல் பாடலை எழுதியது — வெண் மேகம் படத்துக்காக — நான்தான் . வண்ணங்கள் நீயானால் என்று துவங்கும் பாடல் அது !) .
இவர்களோடு இளவரசு உள்ளிட்ட ஒரு சிலரை தவிர படத்தில் எல்லோரும் புதுமுகங்கள்.
படம் எடுத்தாச்சு . நல்லா வந்திருக்குன்னு பேரும் வாங்கியாச்சு. ஆனா நல்ல கடையில் விற்பனைக்கு வைக்கணுமே …!
மனோபாலா லிங்குசாமியை அணுக , அஞ்சான் பட பரபரப்பில் எந்த விசயத்தையும் இழுத்துப் போட்டுக் கொள்ள வேண்டாம் என்ற நினைப்பில் இருந்த லிங்குசாமி மனோபாலாவின் வற்புறுத்தலுக்காக சபடம் பார்க்க, படம் பிடித்துப் போய் தானே வாங்கி வெளியிடுகிறார் .
வரும் பதினெட்டாம் தேதி படத்தை வெளியிட உள்ள நிலையில் பத்திர்க்கையாளர்களை அனைவரும் சந்தித்தபோதுதான் ……
படத்தின் முக்கிய காஸ்டியூமான வெள்ளை வேட்டி சட்டையில் எல்லோரும் வந்து இருந்தார்கள் .
”மணிவண்ணனுக்குப் பிறகு அற்புதமான வசனத் திறமை இவருக்கு இருக்கிறது” என்று இயக்குனர் வினோத் பாராட்டப்பட்டார். ”முதல் டீசரை ஃபேஸ்புக்கில் போட்டபோது கிடைத்த வரவேற்பு எங்களை உற்சாகமாக வேலை பார்க்க வைத்தது. அந்த பேஸ்புக் நண்பர்களுக்கு நன்றி ”என்றார் படத்தின் எடிட்டர் .
சசி, பாலாஜி சக்திவேல், கார்த்திக் சுப்புராஜ், பாலாஜி தரணிதரன், நவீன்,என்று நமக்கு பிடித்த படங்களை கொடுத்த பல இயக்குனர்களும் ”நேற்றுதான் இந்தப் படம் பார்த்தோம் . அட்டகாசமான படம் ” என்றார்கள் .
சந்தோசம் … சந்தோசம்… சந்தோசம் …! ஆனால் கடைசியாக அந்த உறுத்தல் … ”வெள்ளை வேட்டி சட்டை போட்ட உடன் யாரையாவது ஏமாத்தணும்னு தோணுது இல்ல..” என்ற ரீதியில் ஒரு வசனம் படத்தில் இருக்கிறதாம்.
வேட்டி என்பது நமது கலாச்சார உடை. அந்த உடை போட்டவன் எல்லாம் அயோக்கியன் . பேன்ட் போட்டவன்தான் யோக்கியன் என்று சொன்ன மணிரத்னத்தின் இருவர் படத்துக்குப் பிறகு இந்தப் படம் அந்த வேலையை செய்யும் போல் இருக்கிறது .
அரசியல் ரீதியாக தவறு செய்கிறவர்கள் வேட்டி கட்டுகிறார்கள் என்ற காரணத்துக்காக நமது கலாச்சார உடையை நாமே அசிங்கப் படுத்துவது என்பது .. ம்ஹும் !
இப்போதே…. ஒரு மாபெரும் நீதிபதியையே… வேட்டி கட்டி வந்தார் என்ற காரணத்துக்காக ஒரு கிளப்புக்குள் கூட விட மறுக்கும் நிலைமை தமிழகத்தில் !.
அப்படி இருக்க ஒரு படம் முழுக்க வேட்டி கட்டியவன் அயோக்கியன் என்ற உருவகம் இன்னும் என்ன விளைவுகளை கொண்டு வருமோ ? (படத்தின் கடைசியில் இந்த விசயத்தையும் சரி செய்யும் விதத்தில் இயக்குனர் காட்சி வைத்து இருந்தால்.. ஹாட்ஸ் ஆஃப்!)