செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக இந்தியா அனுப்பிய மங்கள்யான் பயணத்திற்கு பெரும் பங்காற்றிய விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, ‘எனக்கு திரைப்படம் பார்க்கும் பழக்கும் இல்லை : அதற்கு நேரமும் இல்லை” என்று கூறிவந்த நிலையில், நாஞ்சில் பி.சி.அன்பழகன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நதிகள் நனைவதில்லை’ படத்தை பார்த்தார் .
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற ‘நதிகள் நனைவதில்லை’ பாடல்கள் வெளியீட்டு விழாவிலும் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை அவர்கள், சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு, பாடல்களை வெளியிட்டார். சினிமா நிகழ்சிகளில் கலந்துக்கொள்வதை தவிர்த்து வரும் மயில்சாமி அண்ணாதுரை, கலந்துகொண்ட முதல் சினிமா நிகழ்ச்சி அதுதான்
பெற்றொர்கள், தங்கள் கனவுகளை பிள்ளைகளின் தலையில் போட்டு உடைக்ககூடாது…. அவரவர் கால்களில் தான்…அவரவர் பயணங்கள் அமையவேண்டும்…. நம்பிக்கையில்லாத மனிதனுக்கு இதயமும் சுமைதான்…..குறுக்கு வழியின் துணை கொண்டு, மஹால்களை கட்டுவதை விட, நேர்வழியின் கரம் பற்றி குடிசையில் தூங்குவதே ஆத்ம செல்வமாகும்… என்பது போன்ற கருத்துக்களை மையமாக வைத்து உருவாகும் படம் ‘நதிகள் நனைவதில்லை’.
இதில் பிரணவ், மோனிகா, நிசா, காயத்திரி, கல்யாணி, சரிதா, செந்தில், பாலாசிங், மதுரை முத்து, சிங்கமுத்து, குண்டுகல்யாணம் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு வாழ்த்தியதன் தொடர்ச்சியாக படத்தைப் பார்க்கவும் மயில்சாமி அண்ணாதுரை சம்மதிக்க, சமீபத்தில் சென்னை இசைக் கல்லூரியில், உள்ள தாகூர் பிலிம் செண்டர் பிரிவியூ தியேட்டரில் அவருக்காக படம் திரையிடப்பட்டது. தனது மனைவியுடன் வந்து படம் பார்த்தார்.மயில்சாமி அண்ணாதுரை .
படம் முடிந்த பிறகு, படத்தில் நடித்த ஹீரோ ப்ரணாவையும், இயக்குனர் நாஞ்சில் பி.சி.அன்பழகனையும் நன்றாக பணியாற்றி இருப்பதாக வாழ்த்திய மயில்சாமி அண்ணாதுரை , படத்தின் கதையும், வசனங்களும், பாடல்களும், படமாக்கப்பட்ட விதமும் தம்மை மிகவும் கவர்ந்ததாக கூறினார்.
மேலும் “உச்ச கட்டமாக படத்தில் நடக்கும் கிளைமேக்ஸ் காட்சிகளும், அணை சம்மந்தப்பட்ட காட்சிகளும் பார்ப்பதற்கு பரபரப்பாக இருக்கின்றன.
கன்னியாகுமரியின் ஒட்டுமொத்த அழகையும் வெண்திரை இல்லாமல் நேரில் பார்ப்பது போல் இருக்கிறது. படத்தில் சண்டைக் காட்சிகளையும் ரசிக்கும்படியாக படமாக்கியுள்ளதோடு குடும்பத்தோடு பார்க்ககூடிய உயர்ந்த கருத்துக்கள் கொண்ட காட்சிகளை வைத்து, இது ஒரு முக்கியமான படம், என்று சொல்லும்படியாக படத்தை இயக்கியிருக்கிறீர்கள் . படம் முடிந்த பிறகும், படத்தின் அநேக காட்சிகள் மனசை விட்டு அகல மறுக்கின்றன. இயக்குனர் நாஞ்சில் பி.சி.அன்பழகனுக்கு இந்த படம் திருப்பத்தை தரும், படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்.” என்று பாராட்டினார்.