“சொன்னால் கேட்பார்கள் ” – சொல்கிறார் சீமான்

seeman
புலிப் பார்வை படக் குழுவினர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அடுத்த ஒரு மணிநேரத்தில் சீமான் தனது வீட்டில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.எடுத்த எடுப்பில் நேரடியாக விசயத்துக்கு வந்த சீமான் ” புலிப் பார்வை மற்றும் கத்தி படங்களை முன்வைத்து என்னை தேவை இல்லாமல் தவறாக சித்தரிக்க பலர் முயல்கிறார்கள் . அது வீண் பழி .
seeman
அது அவர்கள் செய்த தவறுதான்

புலிப் பார்வை படத்தை என்னிடம் காட்டினார்கள் . நான் அதில் பாலாவின் சீருடை விசயத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று சொன்னேன். சில வசனங்களையும் காட்சிகளையும் நீக்க சொன்னேன் . உடனே நீக்கி விடுவதாக சொல்லி விட்டார்கள். நீக்க முடியாது என்று சொல்லி  இருந்தால் அந்தப் படம் வெளிவர நானே விட்டிருக்க மாட்டேன்.

ஆனால் அவர்கள் எடுத்த காட்சிகளால் வெளியிட்ட புகைப் படங்களால் சில தவறுகள் நடந்து விட்டது. உதாரணமாக ராணுவ சீருடையோடு பாலா இருக்கும்படியும் தலைவர் அந்தப் பிள்ளைக்கு ஆயுதப் பயிற்சி தருவது போலவும் எடுத்த காட்சிகளின் புகைப்படங்களை வைத்து சிங்களவன் இப்போதே “பார்த்தீர்களா ? பாலச் சந்திரனும் தீவிரவாதிதான் என்று பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விட்டான் .

அது இந்த படக் குழுவினர் அறியாமல் செய்த தவறு . இந்த போட்டோக்களால் உண்மை அழிந்து விடாது .ஆக, நான் சொன்ன மாற்றங்களை செய்வதாக அவர்கள் சம்மதித்த பிறகுதான் நான் புலிப் பார்வை படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு போனேன் . அங்கே மாணவர்கள் குரல் எழுப்பிய உடனே அவர்களை வெளியே கொண்டு வந்து விட்டார்கள் .  வெளியே என்ன நடந்தது என்று உள்ளே இருந்த எனக்கு தெரியாது .உடனே மாணவர்களை தாக்கியது நாம் தமிழர் கட்சியினர் என்று தவறாக பழி சுமத்துகிறார்கள். அதை நிரூபிக்க முடியுமா? எனது கட்சியை சேர்ந்த இந்த தம்பி தாக்கினார் என்று பெயர் குறிப்பிட்டு சொல்ல முடியுமா ? அன்று போராடிய செம்பியனே நாம் தமிழர் கட்சியில் இருந்தவர்தான் .

கத்தி படத்தை பொறுத்தவரை ஏ ஆர் முருகதாஸ் தமிழன். நடிக்கும் விஜய் தமிழன் . ஐங்கரன் கருணாஸ் தமிழன் . லைகா அதிபர் அல்லிராஜனும் தமிழன்.

seeman
நடந்து கொள்கிறோமா?

அல்லி ராஜன் ஒன்று சாதரணமாக இந்த நிலைக்கு வந்து விடவில்லை. இலங்கையில் இருந்து கஷ்டப்பட்டு தூர தேசம் சென்று வீடு வீடாக கார்டு கொடுத்து உழைத்து முன்னேறியவர்.

அவர் ராஜபக்சேவுக்கு காசு கொடுக்கிறார் என்று சொல்லுங்கள் . நம்புவேன். ஆனால் ராஜபக்சே அவருக்கு காசு கொடுத்து தமிழ்ப் படம் எடுத்து கோடம்பாக்கத்தை ஆக்கிரமிக்கிறார் என்று பொய்யாக அட்டைப் படக் கட்டுரை எழுதாதீர்கள். அது அநியாயம்

கத்தி படத்தில் தமிழர்களுக்கு எதிராக ஏதாவது காட்சி இருந்தால் சொல்லுங்கள் . அந்தப் படத்தை தடுப்போம் . அதை விட்டுவிட்டு லைக்கா தயாரிப்பதால் எதிர்ப்போம் என்றால் .. அந்த மாதிரியே எல்லோரிடமும் நடந்து கொள்கிறோமா ?

விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயல்பட்டது…. ஆயுத வியாபாரம் செய்தது…புலிகளுக்கும் ஆயுத விற்பனை செய்தது…. அந்த ஆயுதக் கப்பல் வருவதை போட்டுக் கொடுத்து அந்தக் கப்பலை மூழ்கடித்து புலிகளை பலவீனப்படுத்தியது… இது  எல்லாமே அமெரிக்காதான் . எனவே அந்த அமெரிக்காவில் இருந்து வந்து  இங்கு மொழி மாற்றியும் மாற்றமலும் வெளியிடப்படும் ஹாலிவுட் படங்களை தடை செய்ய முடியுமா ?சந்தோஷ் சிவன் தமிழர்களுக்கு எதிராக எடுத்த மல்லி , டெர்ரரிஸ்ட், இனம் படங்களை எதிர்த்தோம் . அதற்காக அவர் ஒளிப்பதிவு செய்த ராவணன் , அஞ்சான் போன்ற படங்களை தடுக்க வேண்டும் என்று சொன்னோமா ?  சந்தோஷ் சிவன் என்ற கலைஞன் மேல் நமக்கு எதிர்ப்பு இல்லை . நமது இனத்துக்கு எதிராக அவர் எடுத்த படங்களைதான் எதிக்கிறோம் .லைக்காவை தடுக்க வேண்டும் என்றால் இத்தனை ஆண்டுகளாக அவர்கள் செயல்பட்டபோது ஏன் யாரும் எதிர்க்கவில்லை . ஒரு தமிழ்ப் படம் எடுக்க வரும்போதுதான எதிர்க்க வேண்டுமா ?

seeman
சொன்னால் கேட்பார்கள்

மெட்ராஸ் கபே எடுத்தவன் தமிழன் அல்ல .. அவனை நம்மால் கேட்க முடியாது . அதனால் படத்தை தடுத்தோம் .

ஆனால் புலிப் பார்வை எடுக்கும் பாரி வேந்தர் , பிரவீன் காந்த், கத்தி படத்தை எடுக்கும் முருகதாஸ், விஜய் , லைக்கா அல்லிராஜன் எல்லாரும் நம்மவர்கள் . தமிழர்கள் . நம் சொந்தங்கள்.

நாம் கேள்வி கேட்டால் விளக்கம் தருவார்கள். தவறுகளை திருத்திக் கொள்ளுங்கள் என்றால் திருத்திக் கொள்வார்கள் சரியானதை சொன்னால் கேட்பார்கள் .
கத்தி பட பாடல் வெளியீட்டு விழாவுக்கு லைக்கா அல்லிராஜனே வருவார் . அப்போது அவரிடம் உங்கள் கேள்விகளை கேளுங்கள் . அவர் பதில் சொல்லுவார். பதில்கள் சரியாக இல்லை என்றால் அப்புறம் பேசிக் கொள்வோம்.

எல்லோரையும் பகைத்துக் கொண்டு அப்புறம் யாருடன் சேர்ந்து தமிழ் தேசியத்துக்காக போராடுவது ?

ஐம்பது வருடம் எம் ஜிஆரை தூக்கி வைத்துக் கொண்டு ஆடினோம் . அப்புறம் முப்பது வருடம் ரஜினிகாந்தை தூக்கி வைத்துக் கொண்டு ஆடினோம் . இப்போதுதான் அந்த இடத்துக்கு முதன் முதலாக  ஒரு தமிழன் (விஜய்யை சொல்கிறார்) வந்து கொண்டு இருக்கிறார். அவரை உடைத்துப் போட்டுவிட்டு என்ன சாதிக்கப் போகிறோம் ?

நாம் தமிழர் இயக்கத்தை கட்டிக் காக்கிற எங்களுக்கு எந்த விசயத்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும என்பது தெரியாதா ?

கடைசியாக ஒன்று .

seemaan
தெரிந்து கொண்டு படம் எடுங்கப்பா

புலிப் பார்வை படத்திலேயே நிறைய காட்சிகளில் பாலச் சந்திரனுக்கு ராணுவ சீருடை அணிவித்து எடுத்து விட்டார்கள் . இப்படி எடுத்து முடித்து விட்டு அப்புறம் வந்து போட்டுக் காட்டி சரி செய்து.. சிக்கல்களை உருவாக்கி இதெல்லாம் தேவை இல்லாத விஷயம்.

எனவே இனிமேல் படைப்பாளிகளில் தமிழ் இனம் மொழி, களப்  போராட்டம் ஆகியவை பற்றி படம் எடுக்க விரும்புபவர்கள் முறையான ஆராய்ச்சி , அறிவு வழிகாட்டுதல்களோடு ஆலோசனைகளையும் பெற்று படம் எடுக்க வேண்டும் . இந்த சந்திப்பின் மூலம் நான் கேட்டுக் கொள்வது அதுதான் ” என்றார் .

நீங்க என்ன சொல்றீங்க ?

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →