செல்ஃபி @ விமர்சனம்

வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ் தாணு வழங்க, DG ஃபிலிம் கம்பெனி சார்பில் சபரீஷ் தயாரிக்க, ஜி வி பிரகாஷ் குமார், கவுதம் வாசுதேவ்  மேனன், குணாநிதி, வர்ஷா பொல்லம்மா, சங்கிலி முருகன், வாகை சந்திரசேகர் நடிப்பில்,  மதிமாறன் எழுதி இயக்கி இருக்கும் படம் செல்ஃபி 

மகனின் விருப்பம் அறியாமல் வலுக்கட்டாயமாக இளைஞன் ஒருவனை ( ஜி வி பிரகாஷ் குமார்) அவனது அப்பா (வாகை சந்திரசேகர்)  என்ஜினீயரிங் கல்லூரியில் காசு செலவழித்து சீட் வாங்கிச் சேர்த்து விட , 

படிப்பும் பிடிக்காமல் அப்பா கொடுக்கும் பணமும் பத்தாமல் தவிக்கும் இளைஞன் பணத்துக்காக ஒரு வேலையைச் செய்யத் துவங்குகிறான். தந்தையைப் போலவே பணம் கொடுத்தாவது தன் மகனை எஞ்சினியர், டாக்டர் என்று படிக்க வைக்க ஆசைப்படும் அப்பாக்களை கண்டு பிடித்து வளைத்து கல்லூரியில் பணம் கட்டி .. இல்லை இல்லை கொட்டி ,சேர வைத்து , அதன் மூலம் பணக்காரனாகும் வேலை . 

ஆரம்பத்தில் பணம் கொட்டினாலும் முன்னும் பின்னுமாக  நடக்கும் செயல்களால் நண்பன் ஒருவனின் (குணாநிதி) மரணம் ,  இந்த வேலையை பல காலமாக செய்யும் தாதா ஒருவன்( கவுதம் வாசுதேவ் மேனன்), அவனைப் பிடிக்காத – கல்லூரியின் தாளாளரின் மருமகன் (சாம்பால்) , மற்றொரு கல்லூரித் தாளாளர் ( சுப்ரமணிய சிவா) இவர்களின் பகை, நட்பு, கோபம் , பாசம் ஆகியவற்றின் அதிரடிச் சூழல்களின் சிக்குகிறான் நாயகன். 

விளைவு என்ன என்பதே இந்த செல்ஃபி. அருமையான கதை . 

கல்வி சிறந்த தமிழ்நாடு என்றான் பாரதி. அவன் சொன்னது  என்ஜினீயரிங் , மருத்துவக் கல்விக்கும் ஒரு காலம் வரை பொருந்தியது . அதற்கு தாமும் ஒரு காரணமாக இருந்த திராவிட இயக்க அரசுகளே பின்னாளில் அந்தக் கல்வியை காசுக்கு கிடைக்கும் கடைச்   சரக்காக மாற்றின. 

அறிவும் சேவை மனப்பான்மையும் இருந்தால் மட்டுமே கிடைக்க வேண்டிய இந்த கல்வி, காசு இருந்தால் போதும் என்ற நிலைக்கு வந்தது.  பெட்ரோல் பங்குகளிலும்  காய்கறி மண்டிகளிலும் லட்சம் கோடி என்று பணம் மூட்டைகளில் கொண்டு போய்  கொட்டப்பட்டு துண்டு சீட்டில்  டிக் அடிக்கப்பட்ட அடையாளத்தைக்  கொண்டு போய் கல்லூரிகளில் காட்டி அட்மிஷன் போட்ட கதை எல்லாம் நடந்தது . 

இப்போது தொழில் நுட்ப ரீதியாக   இன்னும் அதிகரித்து இருக்கும் இந்த அநியாய அவலத்தை ஒரு படம் பேசுகிறது என்பதே சிறப்புதானே . 

அதே நேரம் பரபரப்பாக விறுவிறுப்பாக திரைக்கதை அமைத்து அதிரடி கமர்ஷியல் படமாக செல்ஃபியை  எடுத்து இருக்கிறார் மதிமாறன் . சுறுசுறுவென்று போகிறது காட்சிகள். பாராட்டுகள் . 

பாதிக்கப்பட்ட, தவறு செய்கிற  , எனினும் மன சாட்சி உள்ள , ஆக்ரோஷமான புத்திசாலி இளைஞன் பாத்திரத்தை மிகச் சிறப்பாகச் செய்து இருக்கிறார் ஜி வி பிரகாஷ் குமார்  . சகல உணர்ச்சிகளையும் வெளிப்படுத்த வாய்ப்புள்ள திரைக்கதையில் சிரத்தையோடு நடித்து உள்ளார் . பாராட்டுகள். 

முக்கிய நண்பனாக வந்து அநியாயமாக பாதிக்கப்படும் நண்பன் கதாபாத்திரத்தில் மிக இயல்பாக  அழகாக சிறப்பாக ஈர்க்கும்படி நடித்துள்ளார் குணாநிதி .  விரைவில் நாயகனாக நடிக்க  எல்லா தகுதியும் அவரிடம் இருக்கிறது . வாழ்த்துகள் . மிரட்டி இருக்கிறார் கவுதம் வாசுதேவ்  மேனன் . சிறப்பு .

மற்ற நடிக நடிகையர் அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர் என்று சொல்லும் அளவுக்கு அவர்களைப் பயன்படுத்தி இருக்கிறார் மதிமாறன் . வித்யா பிரதீப் நடித்து இருக்கும் கதாபாத்திரம் அருமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது . 

அயோக்கிய உலகில் பகை நட்பு எல்லாம் பணத்துக்காக நொடிக்கு நொடி மாறும் என்று  காட்டிய விதம் அருமை 

ஜி வி பிரகாஷின் இசையில் பாடல்கள் அருமை. பின்னணி இசை வெகு சிறப்பு . டைட்டில் துவங்கி சரியான இடங்களில் வரும் நாக மகுடி போன்ற தீம் மியூசிக் அட்டகாசம். 

விஷ்ணு ரங்கசாமியின் ஒளிப்பதிவு,  சூழலுக்கான உணர்வை தரக் கூட்டல் செய்து கொடுக்கிறது . கதாநாயகி சம்மந்தப்பட்ட காட்சிகளில் இன்னும் கொஞ்சம் இறுக்கிப் பிடித்து இருக்கலாம் இளையராஜாவின் படத் தொகுப்பு . அந்த கதாபாத்திரம் திரைக்கதைக்குக் கூட பெரிதாகப் பலன் தரவில்லை .

மக்களிடம் பணத்தை ஏமாற்றுபவர்கள் எப்படி தங்களுக்குள் அடித்துக் கொள்கிறார்கள் என்பதற்கு மிக  அதிக முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதை பயணிக்கிறது . மாறாக கல்விக் கொள்ளையால் பாதிக்கப்படும் மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் என்ற கதைப் போக்குக்கும் கனமான முக்கியத்துவம் கொடுத்து  இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் . பெரும்பாலும் படத்தில் வரும் அந்தக் கதாபாத்திரங்கள் ஒன்று அடாவடி ஆளாக  இருக்கிறார்கள் அல்லது ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் லெவலில் நின்று விடுகிறார்கள் .

கடலூர் வட்டார வழக்கு சிறப்பு. ஆனால் யதார்த்தம் என்ற பெயரில் இவ்வளவு கெட்ட வார்த்தைகள் (ஒலி நீக்கப்பட்டாலும் கூட )தேவை இல்லை.  இப்படி ஒரு சில குறைகள்  இருந்தாலும் சொல்ல வேண்டிய கதையை சொல்லி பரபரப்பாக காட்சிகள் அமைத்து சிறப்பாக இயக்கி படத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள் . 

பாராட்டுகள் . சரியான சமயத்தில் சரியான படம் செல்ஃபி 

பின்குறிப்பு :- 

படத்தின் இறுதியில் ‘சமூக நீதியாலும் இரு மொழிக் கொள்கையாலும் சிறப்பான இடத்தை அடைந்த  தமிழகத்தின் உயர் கல்வியை மீண்டும் மீட்டெடுப்போம்’ என்ற ரீதியில்  ஒரு வாக்கியம் போட்டு இருக்கிறார் இயக்குனர் . 

                                                                                         மதி மாறன்- ஜி வி பிரகாஷ்- குணாநிதி

அதில் இரு மொழிக் கொள்கை என்ற வார்த்தைகளை ஆட்சேபித்த சென்சார் போர்டு மும்மொழிக் கொள்கை என்று மாற்றிப் போடச் சொல்லி இருக்கிறது . மறுத்துவிட்ட இயக்குனர் அந்த இடத்தை கருப்புப் பூசி அழித்து விட்டார் .

அடப் பக்கிகளா !

தமிழ் நாட்டில் உயர்கல்வி வளர்ந்ததற்கும் மும்மொழிக் கொள்கைக்கும் என்னப்பா  சம்மந்தம் ? உங்க அறிவில் தீயை வைக்க !

 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *