செம்பி@ விமர்சனம்

டிரைடன்ட் ஆர்ட்ஸ் சார்பில் ஆர். ரவீந்திரன் மற்றும் ஏ ஆர் என்டர்டைன்மென்ட் சார்பில் அஜ்மல்கான், ரேயா தயாரிப்பில் கோவை சரளா, நிலா, தம்பி ராமையா , அஷ்வின் குமார் நடிப்பில் பிரபு சாலமன் எழுதி இயக்கி இருக்கும் படம்.

மிருகங்கள் மனிதனாகிக் கொண்டு இருக்கும் போது மனிதன் மிருகமாகிக் கொண்டு இருக்கிறான். இந்த சூழலின் எளிய மனிதர்களின் கண்ணீரைத் துடைக்க , கவலைக்கு ஆறுதல் தர, கதறல்களுக்கு செவி மடுக்க நீளும் கரங்களைக் கொண்ட மனிதர்கள் கடவுளுக்கு இணையானவர்கள். அல்லது அவர்கள்தான் கடவுள் என்பதே படம் சொல்லும் சேதி.

பனித்துளியும் மழைத் துளியும் மாறி மாறிப் பெய்யும் கொடைக்கானல் மலைமாதாவின் தாய்மடிக்குள் இயற்கை என்ற சொல்லுக்கு இலக்கணம் வகுத்து விட்டுக் கிடக்கும் ஒரு பூமியில் தன் அம்மாச்சியுடன், அதாவது அம்மாவின் அம்மாவுடன் ( கோவை சரளா)  வாழும் சின்னஞ்சிறுமி செம்பி (நிலா) .

அம்மா அப்பா இறந்து விட்ட நிலையில் அம்மாச்சி வீரத்தாய்தான் உலகம் என்று செம்பியும் இந்த உலகமே பேத்திதான் என்று அம்மாச்சியும்.

தேனெடுத்தல், கிழங்கு எடுத்தல், காடை முதலிய பறவை முட்டைகள் எடுத்தல் இவற்றின் மூலம் கிடைக்கும் எளிய வருமானத்தில் நிறைவாக வாழும் வாழ்க்கை. படித்து மருத்துவர் ஆக வேண்டும் என்பது செம்பியின் லட்சியக் கனவு .

இயற்கையின் மாபெரும் முகடுகளைக் கூட மதுப்புட்டியின் வழியே பார்க்கிற குணம் கொண்ட – சிறுமிகளைப் பாலியல் சிதைப்பு செய்வதை பொழுதுபோக்காகக் கொண்ட –  ஒரு பண மதர்ப்பு மிருகத்திடமும் அவனது இரண்டு நண்பர்களிடமும்  ஒரு கொடிய நேரத்தில் செம்பி சிக்க அவளை  சிதைக்கின்றனர் .

சிறு குச்சி மூலம் செந்நாய்களை வெல்லும் வித்தையை அம்மாச்சி மூலம் அறிந்த செம்பி,  இந்த மனித ஓநாய்களிடம் இருந்து தப்பிக்க முடியாமல் தகர்க்கப்படுகிறாள்

அம்மாவின் நினைவாக இருந்த ஒற்றைப் பொருளான தேன்குடுவை உடையும் அதே நேரம்  இன்னும் முழுமையடையாத அவளது கருப்பைக் குடுவையும் – வளர்ந்த பின்னும் அவள் ஒரு குழந்தைக்கு தாயாக முடியாது. வீரத்தாயின் வம்சமே முடிந்தது என்ற நிலையில் – சிதைகிறது . சிறுநீர் கழிக்கவே சித்திரவதை அனுபவிக்கும் கொடிய நிலைக்குப் போகிறாள் செம்பி

தினமும் நாலு கொலை செய்தாலும் ரொம்ப நல்ல மன நிலையில் இருக்கும்போது கடிக்கிற கொசுவைக் கூட அடிக்காமல் தட்டி விடும் கொலைகாரன் போல , எப்போதாவது ஏழைக்கு இரங்குபவர்களாக காட்டிக் கொண்டு அந்த மாதக் கணக்கு முடிக்கும் காவல்துறையும்  ஆரம்பத்தில் செம்பிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று வீரத்தாய்க்கு ஆதரவாக சற்றே செயல்பட்டாலும், 

செம்பியைச் சீரழித்தவன், மேடைகளில் நேர்மை பேசி வாழ்வில் நேர்மாறாக இருக்கிற – வரும் தேர்தலின் முதல்வராக வாய்ப்புள்ள  – ஒரு அயோக்கிய எதிர்க்கட்சி அரசியல்வாதியின்( நாஞ்சில் சம்பத்) மகன் என்று தெரிந்ததும் மூன்று கோடிக்கு தன்னை விற்றுக் கொண்டு , வீரத்தாயிடம் கோர முகம் காட்டுகிறது .

பதிலுக்கு வீரத்தாய் காட்டும் தீர முகத்தில் உயிராபத்துக்குப் போகிறது . வீரத்தாய் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட, தப்பிப் பிழைக்க போராடும் வீரத்தாய்க்கும் செம்பிக்கும் என்ன நடந்தது என்பதே செம்பி.

கடைசி பந்தில் சிக்சர் அடித்து அணியை வெற்றி பெற வைக்கும் ஆட்டக்காரனைப் போல வருடத்தின் கடைசி மாதம் கடைசி வாரத்தில் இந்த ஆண்டின் சிறந்த படத்தைக் கொடுத்து இருக்கிறார் பிரபு சாலமன் .

பாலியல் வற்புறுத்தலே குற்றம் . வன்கொடுமை இன்னும் குற்றம் . அதுவும் சிறுமிகளுக்கு அது நிகழ்வது பெரும் கொடுமை. அதுவே ஒரு பாமர பழங்குடிச் சிறுமிக்கு நிகழ்வது இன்னும் அநியாயம் . அதுவும் இயற்கையை பறவைகளை பூக்களை சிற்றுயிர்களைக் கூட நேசித்து வாழ்கிற ஒரு குழந்தமை நிறைந்த ச பழங்குடிச் சிறுமிக்கு நிகழ்வது இன்னும் அக்கிரமம்.

இந்த புரிதலோடு பார்த்தால் இந்தக் கதையை இந்தப் பின்னணியில் பிரபு சாலமன் சொல்லி இருப்பதன் ஆழஅகல உயர  பரிமாணங்கள் விளங்கும் .

இயற்கையின் காதலன் என்ற நிலையில் இருந்த பிரபு சாலமன் இந்தப் படத்தில் இயற்கையின் பக்தன், தொண்டன் என்ற நிலைக்கு இன்னும் உயர்ந்து இருக்கிறார் .

அப்படி ஒரு மலை முகடுகள், காடுகள்,அடர் புதர்கள், ஓடைகள், அருவிகள் , இரை உண்ட கர்ப்பிணி மலைப்பாம்பின் ஆயிரம் மடங்கு தடிமனில் படுத்து இருக்கும் மரங்கள் , பனித் துளியும் மழைத் துளியும் கட்டிப் படித்துக் கானம் பாடும் சாரல்கள்…

இவற்றை எல்லாம் ஒளிப்பதிவாளர் ஜீவனின் துணையோடு திரைக்குள் செதுக்கி இருக்கும் பிரபு சாலமனின் ரசனைக்குரிய உழைப்பை சொல்ல முடியாமல் சொல்லி முடியாமல் சொல்லில் முடியாமல் தவிப்பே ஏற்படுகிறது.

குறைந்தது இருபது இயல்பான படங்களுக்குப் போட வேண்டிய உழைப்பை இந்தப் படத்தில் இயக்குனர் மட்டுமல்ல எல்லோரும் போட்டு இருக்கிறார்கள். பிரம்மாண்ட படங்களில் அந்த உழைப்பு தெரியும் . ஆனால் இதில் ரசிகன் உணரவேண்டும் .

இது இப்படி என்றால் திரைக்கதையில் இந்த கதையை பிரபு சாலமன்  சொல்லி இருக்கும் விதம் அபாரம்.

எளிய வாழ்க்கை, உரிமையும் கோபமுமான பாசம், எதிர்பாராத கோரம், ஏழ்மை கொண்ட அறியாமையின் தவிப்பு, , உண்மை அறிந்து துடிப்பு, ஆதரவே ஆபத்தாக மாறும்போது அதிர்ச்சி, உடனே தெளிவு , அதன் பின்னர் நடக்கும் சம்பவங்கள் என்று மிக சிறப்பான திரைக்கதை .

சிறுமிகளுக்கு பாலியல் பலாத்காரம் நடந்தால் அதன் பாதிப்புகள் என்ன என்பதை இந்த அளவு இதயம் நொறுக்கும்படி எந்தப் படமும் இதுவரை சொல்லவில்லை . அதே போல போக்சோ சட்டத்தின்  வீரியத்தை சொல்லும் விதம் சபாஷ் போட வைக்கிறது.

தனக்கு நடந்த கொடுமையின் வலியை விட அம்மா நினைவாக இருந்தே ஒரே பொருளான குடுவை உடைந்ததற்காக செம்பி  நொறுங்கி அழும் காட்சியில்  பார்வையாளன் மனசும் உடைந்து நொறுங்கும், மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு படம் பார்க்கவும் .

பேருந்துப் பயணத்தில் பயணிக்கும்போது யாரோ ஒரு சக பயணியின் குழந்தை அல்லது சிறுவன் சிறுமியோடு பார்வையால் புன்னகையால் சைகைககளால் உணர்வுக் கவிதைகளைப் பரிமாறிக் கொண்ட அனுபவம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் மீண்டும் சிலிர்க்க இந்தப் படத்திலும் காட்சிகள் உண்டு.

இப்படி படத்தில் பல இடங்களில் சோக அழகியல் கவிதைப்பூர்வ ஷாட்களால் நெகிழ்ந்து உருக மருக வைக்கிறார் பிரபு சாலமன் .

ஒரு கேரக்டருக்கு ஒரு கொடுமை நடந்த பிறகு அந்த கதாபாத்திரத்தை மேலும் மேலும் உயர்த்தி சொல்வதன் மூலம் அந்தக் கொடுமையின் வலியை மேலும் உயர்த்தி உணர்த்துவது ஒரு சிறப்பான திரைக்கதை உத்தி . அதை இந்தப் படத்தில் சிறப்பாக கையாண்டு இருக்கிறார் பிரபு சாலமன்.

பேருந்தில் சக சிறுமி செம்பிக்கு மிகவும் பிடித்த ஒரு பொம்மையைக் கொடுக்க , அதை மறுக்கும் செம்பி தன் அம்மாச்சி வாங்கிக் கொள்ளச் சொன்ன பிறகு அதை வாங்கிக் கொள்ளும் காட்சி ஒரு உதாரணம்

செம்பியின் அம்மா அப்பா எப்படி யாருக்காக இறந்தார்கள் என்று பின்னால் சொல்வது இன்னொரு உதாரணம் வீரத்தாய் தன் பேத்தியோடு வீறு கொண்டு கிளம்பிய பிறகு ஒரு வழக்கமான ஆக்ஷன் படமாக அவர் இதைக் கொண்டு போயிருந்தால் கூட நம்பகத்தன்மை கிடைத்து இது நல்ல படமாகவே வந்திருக்கும் .

ஆனால் அந்த சலுகையை அவர் எடுத்துக் ‘ கொல்லாமல்’ ( எழுத்துப் பிழை அல்ல)  ஒரு பேருந்து அதில் பல்வேறு வித மனிதர்கள் , அவர்களின் மனசாட்சி இல்லாத – வக்கிரமான – தான் தோன்றித்தனமான குணங்கள் – அவர்களோடு நல்ல மனிதர்கள் , எளிமையின் கனிவு,  அன்பு , எழுச்சி , தார்மீக கோபம் என்று ஒரு ஏரியாவில் திரைக்கதை வசனத்தில்  வீடு கட்டி விளையாடி இருக்கிறார் பிரபு சாலமன். பாராட்டுவதற்காக அவற்றை விளக்கினால் கூட ஸ்பாய்லர் ஆகும் என்பதால் சொல்லாமல் விட்டு விடத் தோன்றுகிறது . படம் பார்க்கும்போது  அப்படி கொண்டாடுவீர்கள் . அருமை இயக்குனரே.

முற்றிலும் புதிய தோற்றத்தில் கோவை சரளா . சற்றே அதீத மேக்கப், ஆரம்ப காட்சிகளில் அவரது அசைவுகளில் , நம் மனதுக்குள் இருக்கும் அவரது காமெடி பாணியின் நினைவுகள்  காரணமாக சற்றே ஒவ்வாமை இருந்தாலும் போகப் போக  நம்மை நடிப்பில் நெகிழ வைக்கிறார் கோவை சரளா . காலத்துக்கும் பேர் சொல்லும் பங்களிப்பு.

செம்பியாக நடித்திருக்கும் நிலா !

ஒரு காட்சி இரண்டு காட்சி என்றால் பரவாயில்லை . அடிப்படைக் கதையே சிறுமிக்கு நடக்கும் பாலியல் பலாத்காரமும் அதன் விளைவுகளும்தான். புரிய வைக்கவே கடினமான இந்தக் கதாபாத்திரத்தைப் புரிந்து கொண்டு அந்த சிறுமி நடித்திருக்கும் விதம், காட்டி இருக்கும் துல்லிய,  மெல்லிய மற்றும் பூகம்ப அதிர்வான உணர்வுகள் முக பாவனைகள் … நியாயமான  விருதுகளுக்கு தகுதியான நடிப்பு . நிலா… பவுர்ணமி .

தனிப்பட்ட வகையில் தனக்கு ஏற்பட்ட இமேஜ் பாதிப்புகளைக் கூட சரி செய்து கொள்ளும் ஒரு கதாபாத்திரத்தில் ஜொலிக்கிறார் அஷ்வின்

நடிக நடிகையரை வேலை வாங்குவதில் பிரபு சாலமன் சமர்த்தர் என்பதால் எல்லோருமே சிறப்பான பங்களிப்பைத் தந்திருக்கிறார்கள்.

தம்பி  ராமையா கதாபாத்திரத்துக்குப் பொருத்தமாக இருந்தாலும் , மைனா பாணியிலான அவரது காமெடி இந்தப் படத்தில் பெரிதாக சோபிக்கவில்லை.

தேவையில்லாத சில இடங்களில் ராக ஆலாபனை வருவதை தவிர்த்திருக்கலாம் நிவாஸ் பிரசன்னா. குறிப்பாக பேத்திக்கு அந்தக் கொடுமை நடந்த பிறகு,  ஒரு காட்சியில் பின்னணியில் முழுக்க பச்சைப் புல்வெளிகள் அசைய ஒரு குளோசப்பில் சரளா மருகும் காட்சியை அவரது குரலோடு காற்றின் ஒலியோடு மட்டும் சைலன்ட்டாக விட்டு இருந்தால் எப்படி இருந்திருக்கும் தெரியுமா? எனினும் சிறப்பான பின்னணி இசை

பிரபு சாலமனின் இயக்கத்தையும் ஜீவனின் ஒளிப்பதிவையும் புவனின் படத் தொகுப்பையும் பிரித்துப் பார்க்க முடியவில்லை . அந்த அளவுக்கு உருகி ஓடி உறைந்து இறுகி கலந்து இருக்கிறது ஒளிப்பதிவும் படத் தொகுப்பும் .

அந்த அற்புத இயற்கையில் எங்கே கேமரா வைத்தாலும் அழகாக இருக்கும் . எனினும் அந்த சலுகையை எடுத்துக் கொள்ளாமல் ஜீவனும் பிரபு சாலமனோடு உழைத்து இருக்கிறார் .

தரணிபதியின் ஒலிக்கலவை அபாரம்.

காசை விட கடவுளே பெரிது என்று படம் சொல்வது எப்படி ஒரு படைப்பளியின் உரிமையோ…  அதற்காக நாத்திகர்கள்  கடவுளை எப்படி சொல்லலாம் என்று கோபப்பட முடியாதோ…  அதே போல எந்த மதத்துக் கடவுளை சொல்வது என்பதும் படைப்பாளியின் உரிமை. அவர் இயேசுவை சொல்கிறார் . அது பிரபு சாலமனின் உரிமை . அந்த இடத்தில் ஏசுவையும் வைத்துக் கொண்டு வள்ளலாரை,  புத்தரை, சிவனை, அல்லாவை , மகாவீரரை , திருவள்ளுவரை வைத்துப் பார்க்க என்னால் முடிந்தது.  நம்மால் முடியவேண்டும் . அவ்வளவுதான்

இப்படி ஒரு அற்புதமான படத்தை எடுத்த தயாரிப்பாளர்கள் டிரைடன்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரன் மற்றும் ஏ ஆர் என்டர்டைன்மென்ட் அஜ்மல்கான், ரேயா ஆகியோர் பாராட்டுக்குரியவர்கள் .

செம்பி என்ற பெயர் இந்தப் படத்தின் தீவிரத்தன்மைக்கு ஏற்றார் போல இல்லை . காரணம் இது feel good படம் அல்ல.

கோவை சரளாவின் ஒப்பனையில் இவ்வளவு அதீதம் தேவை இல்லை

ஒரு பேருந்தில் இருந்தபடியே டெக்னாலஜியின் உதவியோடு எல்லாமும் முடிகிறது என்பது ஏற்க முடிந்தாலும் பொருத்தமாக இல்லை நிகழ்தகவின் நூறு சதவீத வாய்ப்பையும் எடுத்துக் கொள்வது ஒரு பாண்டசி கதைக்கு ஒகே, ஆனால் எளிய மனிதர்களின் கதைக்கு இப்படி ஒரு சூப்பர் லாஜிக்  ஏற்புடையது அல்ல.

நாஞ்சில் சம்பத்தின் பொது இமேஜ் அந்த கேரக்டருக்குப் பொருத்தமாக இருக்கலாம் . ஆனால் அவர் நடிகராக பலன் தரவில்லை.ஆளுங்கட்சி தரப்பில் சும்மா இருந்தே ஜெயிக்கிறார்கள் என்பது நிஜத்துக்கு ஒகே . ஆனால் ஒரு திரைக்கதையில் அது தேவையில்லாத ஆணி

திரைக்கு வரும் முன்பு  படம் இன்னும் வேறு விதமாக அறிமுகப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும். முக்கியமாக வருடக் கடைசி நேரப் பேருந்தில் செம்பி ஏறி இருக்கவே கூடாது

இப்படி சில குறைகள் இருந்தாலும் செம்பி ஒரு மாபெரும் படைப்பு 

மகுடம் சூடும் கலைஞர்கள்

———————————-

பிரபு சாலமன், நிலா, ஜீவன், கோவை சரளா, டிரைடன்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் , நிவாஸ் பிரசன்னா, ஏ ஆர் என்டர்டைன்மென்ட்,  அஜ்மல்கான், ரேயா

 

 

 

 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →