அபி &அபி என்டர்டைன்மெட் பிரைவேட் லிமிடெட் சார்பில் அபினேஷ் இளங்கோவன் தயாரிக்க, இர்பான் மாலிக் இணை தயாரிப்பில் கலையரசன், வாணி போஜன், வேல ராம மூர்த்தி, சரத் லோகித்சவா, ஷாலு, மானசா , மற்றும் பலர் நடிப்பில் எஸ் ஆர் பிரபாகரன் இயக்கி , zee 5 தளத்தில் வெளியாகி இருக்கும் ஒன்பது எபிசோடுகள் கொண்ட வலைத் தொடர் .
விருது நகர் சேர்மன் பதவியை முப்பது வருடங்களாக தக்க வைத்துக் கொண்டு இருக்கும் குடும்பத்தின் தலைவர் சிவஞானம் ( சரத்). நடப்பு சேர்மனாக இருக்கும் அவரது மூத்த மகன் ராஜ மாணிக்கத்துக்கு ஒரு பிசினஸ் குடும்பத்தில் இருந்து அரசியல் ஆர்வமே இல்லாத ஒரு பெண்ணை (வாணி போஜன்) திருமணம் செய்து வைக்கின்றனர் . சில மாதங்களில் கணவன் விபத்தில் இறந்து விட , அந்தப் பெண்ணுக்கு மக்கள் மற்றும் கட்சியினர் மத்தியில் அனுதாபம் ஏற்படுகிறது . அவளுக்கும் அரசியல் ஆசை வருகிறது.
நாச்சிக்கு உதவியாக அவளது சகோதரர்கள் ( கலையரசன், ஆன்னி போப், லகுபரன் )மூவரும் இருக்கிறார்கள். அவர்களது தாய் வேலாயி ( விஜி சந்திரசேகர்). மூத்த சகோதரன் மனைவி ( மானசா) கணவனுக்கும் சேர்மன் வீட்டு மருமகளுக்கும் உறவு என்று எண்ணி கோபத்தில் கணவரைப் பிரிந்து வாழ்கிறாள்
சிவஞானம் என்ற பெயர், அவரது அப்பாவாக லட்சிய நடிகர் எஸ் எஸ் ராஜேந்திரன் போட்டோ, வீல் சேரில் இயங்கும் சிவஞானம், ராஜா மாணிக்கம் இறந்ததும் பதவிக்கு வரும் மனைவி, அவளுக்குத் தோழியாக உடன்பிறவா சகோதரியாக வந்து, பதவியில் இருக்கும் பவர்ஃபுல் பெண் மணியை ஆட்டிப் படைக்கும் தோழி, எதிர்ப்பு அரசியல் செய்பவரின் ( வேல ராம மூர்த்தி ) வீட்டில் வில்லன் நடிகர் எஸ் ஏ அசோகன் புகைப்படம் இவை எல்லாம் ரசிகர்களுக்கு நிஜ அரசியல் நிகழ்வுகளை அவரவர் பார்வையில் நினைவுக்குக் கொண்டு வந்து சுவாரஸ்யப்படுத்தும் .
வெற்றி வேல் மகேந்திரனின் ஒளிப்பதிவு கானல் நீர் காட்டும் கந்தகக் காடுகளை, முள் மறக் கூட்டங்களை , மலைப்பாறைகளை சூடு குறையாமல் படம் பிடித்துக் காட்டி இருக்கிறது . மிகச் சிறந்த பங்களிப்பு.
சாதிப்பற்று எப்படி துரோகத்துக்கு துணை போகிறது என்று சொன்ன விதம் , மருமகளை என் சாமி என்று கூப்பிடும் பாசமுள்ள மாமியார் என்று பிரபாகரனைப் பாரட்ட பல இடங்கள் உண்டு . 