டிரம்ஸ்டிக் புரடக்ஷன்ஸ் சார்பில் (அடுத்து ஏதும் அந்த மாதிரி படம் எடுப்பாங்களோ ?) எஸ் . சக்திவேல் தயாரிக்க,
தமிழ் என்கிற பக்கோடா பாண்டி, ஆனந்தி, யோகி பாபு, பால சரவணன் , கே எஸ் ரவிகுமார், லிவிங்ஸ்டன், நடிப்பில்,
ஜெகன்நாத் எழுதி இயக்கி இருக்கும் படம் என் ஆளோட செருப்பைக் காணோம் . ரசனை கிடைக்குமா ? பார்க்கலாம் .
பல பெண்களுக்கு ரூட் போடும் மைனர் ஒருவனுக்கு (யோகி பாபு) அல்லக்கையாக இருக்கும் கிருஷ்ணன் (தமிழ் என்கிற பக்கோடா பாண்டி) ,
மைனர் ரூட் விடும் பல பெண்களில் ஒருத்தியான சந்தியா மீது (ஆனந்தி), காதல் கொள்கிறான் .
எனினும் காதலை சொல்லத் தயங்குவதில் இவனும் ஓர் இதயம் முரளி . .
இந்த நிலையில் சந்தியாவின் தந்தையான இஞ்சினீயர் மோக்டன் ராஜ் (ஜெயப்பிரகாஷ்), அவர் பணி புரியும் சிரியாவில் தீவிரவாதிகளால் கடத்தப்படுகிறார் . 
புகழ் பெற்ற குறிசொல்லும் பெண் மணியும் கிருஷ்ணனின் அம்மாவுமான வெற்றிலை சாமியிடம் (டான்ஸ் மாஸ்டர் சுஜாதா ) சந்தியாவும்,
அவள் அம்மாவும் (ரேகா) குறி கேட்க வருகிறார்கள் .
என்ஜினீயர் கடத்தப்பட்ட அன்று சந்தியா தவற விட்ட — என்ஜினியர் வாங்கிக் கொடுத்து விட்டுப் போன- செருப்பு ‘திரும்பவும் சந்தியாவிடம் வந்தால் ,
எஞ்சினியர் உயிரோடு வருவார்’ என்று வெற்றிலை சாமி குறி சொல்கிறது . 
சந்தியா செருப்பை தொலைத்த அன்று அதே பஸ்ஸில் கிருஷ்ணனும் இருந்தான் . ஒரு கால் செருப்பு நாடு ரோட்டிலும் இன்னொரு செருப்பு பேருந்திலும் இருந்ததை அவன் அறிவான் .
காதலியின் நம்பிக்கையைக் காப்பாற்ற அவளது – பிரிந்து தொலைந்த – செருப்புகளை தேடி அலைகிறான் கிருஷ்ணன் .
அந்த செருப்பின் பயணம் , அவனது பயணம் எப்படி இருந்தது ? செருப்பு கிடைத்ததா ? அவளது அப்பா விடுவிக்கப்பட்டாரா ? கிருஷ்ணனின் காதல் என்ன ஆனது ?
– என்பதே இந்த ‘என் ஆளோட செருப்பக் காணோம்’ படம் .
வித்தியாசமான கதை.
படத்தில் முதலில் கவனம் கவரும் விஷயம் இயக்குனரும் ஒளிப்பதிவாளரும் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களும் சேர்ந்து கொண்டு வந்திருக்கும்,
அந்த அடைமழை நேர எஃபக்ட்தான் . கண்ணனுக்கும் மனசுக்கும் அவ்வளவு இதம் .
இஷான் தேவின் பாடல்கள் பரவாயில்லை ரகம் . ஆனால் தீபன் சக்கரவர்த்தியின் பின்னணி இசை படத்துக்கு மதிப்புக் கூட்டல் செய்கிறது .
நாயகியின் அர்த்தமுள்ள அழகான செருப்பு தொலைந்த நிலையில் செருப்பணிந்த கால்களுக்கு இடையே அவளது செருப்பணியாத கால்களை …
கும்பல் கும்பலாக இருக்கும் செருப்புகளை …
பிஞ்ச , நல்ல செருப்புகளை …. செருப்பணிந்த கால்களை மட்டும் , .. செருப்பு படம் போட்ட பனியன் என்று காட்டும் வகையில் அழகியல் வெளிப்பாட்டில் பாராட்ட வைக்கிறார் இயக்குனர் ஜெகன் நாத் .
மணிகண்டன் சிவகுமாரின் சிறப்பான படத் தொகுப்பு படத்தை ஜாக்கி போட்டு தூக்க முயல்கிறது . 
தமிழ் என்கிற பக்கோடா பாண்டி, ஆனந்தி , லிவிங்ஸ்டன், டான்ஸ் மாஸ்டர் சுஜாதா ஆகியோர் நடிக்கிறார்கள் . மற்றவர்கள் வந்து போகிறார்கள்
செருப்புக்கடை முசல்மான் ஆக வரும் லிவிங்ஸ்டன் பேசும் மத நல்லிணக்க வசனங்கள் அருமை . பாராட்டுகள் ஜெகன் நாத் .
ஒரு காட்சியில் வந்தாலும் நறுக்குத் தெறித்த மாதிரி பேசி நடித்து விட்டுப் போகிறார் பத்திரிகையாளர் ‘கயல்’ தேவராஜ் 
ஆனால் திரைக்கதைதான் பெரிய பிரச்னை . சுவராஸ்யமாக துவங்கும் படம் போகப் போக டல் அடிக்கிறது .
படத்தின் சில இடங்களை சீரியசாக சொல்வதா காமெடியாக சொல்வதா என்பதில் இயக்குனருக்கு மகா குழப்பம் .
படத்தின் இரண்டாம் பாதியும் ஹீரோவைப் போலவே கையொடிந்து தடுமாறுகிறது.
அப்பா மீது அன்பு , அவர் வாங்கிக் கொடுத்த செருப்பு மீது பிரியம் , குறி சொல்லிய பெண் சொன்ன வார்த்தைகளுக்கு ஏற்ப செருப்புக்கு காத்திருத்தல்,

அது கிடைத்தது போலவே அப்பா உயிரோடு திரும்ப வருவதில் சந்தியாவுக்கு மகிழ்ச்சி…. எல்லாம் ஒகே இயக்குனரே !
ஆனா அதற்காகவே அந்த செருப்பைக் கண்டு பிடித்துக் கொடுத்தவன் யார் என்று தெரியாமலே அவன் யாராக இருந்தாலும் —
பெண் பித்தனான மைனராக இருந்தாலும் – சரி என்று , சந்தியா குளித்து முடித்து லவ் பண்ண , தோழியோடு கிளம்புவது எல்லாம் ரொம்ப ஓவர்
இதுக்கு நக்மா நடித்த அந்த பழைய– பாரகன் செருப்பு விளம்பரமே எவ்வளவோ மேல் . அது செருப்புக்கான விளம்பரப் படம் . ஆனால் இது கதை சொல்லும் படம் இல்லையா ?

யோகிபாபு காமெடி என்ற நினைத்துக் கொண்டு கேப் இல்லாமல் அர்த்தமும் இல்லாமல் என்னென்னவோ பேசிக் ‘கொல்’கிறார் .கவனம் புரோ .
கே எஸ் ரவிக்குமார் கேரக்டர் பக்கா நாடகத்தனம் .
முப்பது , இருபது வருஷத்துக்கு முன்பு வந்த படத்தை பார்ப்பது போல ஓர் உணர்வு
வலிந்து திணிக்கப்பட்ட கிளைமாக்ஸ் .

வித்தியாசமான கதை பிடித்த இயக்குனர் அதை விஞ்சும் திரைக்கதை பண்ணத் தவறி இருக்கிறார் .
விளைவு….. ?
என் ஆளோட செருப்பக் காணோம் .. போனா போகட்டும் ; புதுசு வாங்கிக்கலாம் !