முன்பொரு பத்திரிகை சந்திப்பில் விஜய் சேதுபதியும் இயக்குனர் அருண் குமாரும் சொன்னது போல , திரையிடப்பட்ட பாடல், அவ்வளவு சிறப்பான ‘போலீஸ்கார ஹோம்லி’யாக இருந்தது .
அதே நேரம் முன்னோட்டம் அட்டகாசமான கமர்ஷியல் மாஸ் கெத்தாக இருந்தது . போலீஸ்தான் ஹீரோ ; போலீஸ்தான் கெத்து என்று இரண்டு வார்த்தைகள் வேறு.
படத்தின் எல்லா பாடல்களையும் மேடையில் ஆர்கெஸ்ட்ரா மூலம் கொடுத்தார் இசையமைப்பாளர் நிவாஸ் பிரசன்னா . தெகிடி படத்தின் மூலம் வெளிச்சம் பெற்றவர் இவர் .
ஸ்டுடியோ 9 சுரேஷ்
” பண்ணையாரும் பத்மினியும் படத்தைக் கொடுத்த நல்ல டீம் சேர்ந்து கொடுத்துள்ள இந்தப் படத்தில் விஜய் சேதுபதி பட்டையைக் கிளப்பி இருக்கிறார் என்பது படத்தின் பாடல் மற்றும் முன்னோட்டத்திலேயே தெரிகிறது ” என்றார்
நிவாஸ் பிரசன்னாவை வெகுவாக — ஆனால் நியாயமாக பாரட்டித் தள்ளிய பாலாஜி “நிவாஸ் பிரசன்னா , அருண்குமார் , விஜய் சேதுபதி ஆகிய இந்த மூன்று நல்லவர்களுக்காக இந்தப் படம் நன்றாக ஓடவேண்டும்” என்றார் .
வில்லனாக ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கும் வேல.ராமமூர்த்தி “இந்தப் படத்தில் நான் இதுவரை போடாத அளவுக்கு ஒரு மேக்கப்பை போட்டு விட்டு நடிக்க வச்சிருக்காங்க . ” என்றார்
சக்தி பேசுகையில் “போலீஸ்காரனாக கமல் சார் உட்பட யார் வேண்டுமானாலும் சிறப்பாக நடிக்கலாம் . ஆனா போலீஸ் உடையில் கேப்டன் விஜயகாந்த் சாரை பார்த்தால் இவருதாண்டா நம்ம ஊரு போலீஸ் என்ற உணர்வு வரும். கேப்டனுக்கு அப்புறம் அந்த அடையாளம் விஜய் சேதுபதிக்குதான் இருக்கிறது என்பது இந்தப் படத்தின் மூலம் தெரிகிறது ” என்றார் .
கார்த்திக் சுப்புராஜ் பேசும்போது ” பிஸ்ஸா படத்தில் அயோக்கியத்தனம் பண்ணிவிட்டு ஓடிய ஜோடி, வேறு ஊருக்குப் போய் கல்யாணம் செய்து கொண்டு ரெண்டு பிள்ளைகளையும் பெற்றுக் கொண்டு , அவன் போலீசாக ஆனதைப் பார்ப்பது போன்ற உணர்வு, இந்தப் படத்தில் எனக்கு விஜய் சேதுபதியையும் ரம்யா நம்பீசனையும் பார்க்கும் போது தோன்றுகிறது ” என்று கலகலக்க வைத்து விட்டு படத்தைப் பாராட்டி வாழ்த்தினார் .
கரு பழனியப்பன் பேசும்போது
” ஒரு காலத்தில் கமல், ரஜினி, பிரபு, கார்த்திக் போன்ற பெரிய ஹீரோக்கள் தங்கள் டைரக்டர்களுக்கு அடுத்தடுத்து படம் கொடுத்து இறுகப் பிடித்து வைத்துக் கொள்வார்கள். அப்படிதான் பி வாசு , ஆர்.வி.உதயகுமார் எல்லாம் இருந்தார்கள் . இப்போது பல ஹீரோக்கள் கதாநாயகிகளை அடுத்தடுத்த படங்களில் இறுக்கிப் பிடிப்பதில் மட்டும் குறியாக இருக்கிறார்கள் .
ஆனால் விஜய் சேதுபதியோ ரஜினி, கமல், பிரபு , கார்த்திக் போல தங்கள் இயக்குனர்களை இறுக்கிப் பிடிக்கும் நல்ல குணத்தோடு உள்ளார். அதனால் அவர் ஜெயிக்க வேண்டும் ” என்றவர் ” இவ்வளவு நல்ல தமிழில் அழகாக பேசும் ஒரு தயாரிப்பாளரை தமிழ் சினிமா பார்த்து ரொம்ப நாள் ஆச்சு . அந்த தமிழுக்காகவே அவர் ஜெயிக்க வேண்டும் ” என்றார் .
கருபழனியப்பன் கருத்தை ஓட்டிப் பேசிய சித்தார்த்
” ஜிகிர்தண்டா எடுத்த கார்த்திக் சுப்புராஜ் சார் கிட்ட அடுத்த படத்துல நடிக்கக் கேட்டா, ‘அவரு என்னோட முதல் படமான பிஸ்ஸா ஹீரோவான விஜய் சேதுபதி கூட படம் பண்றேன்’னு சொல்றார் . நலன் குமாரசாமி கிட்ட போனால் அவரும் ‘என்னோட முதல் படமான சூது கவ்வும் ஹீரோவான விஜய் சேதுபதி கூட படம் பண்றேன்’னு சொல்றாரு .
பண்ணையாரும் பத்மினியும் பண்ணின அருண்குமார் கிட்ட பேசினா , ”என்னோட முதல் பட ஹீரோவான விஜய் சேதுபதி கூடதான் அடுத்த படமும் பண்றேன்’னு சொல்லி இந்த சேதுபதி படத்தை முடிச்சிட்டு, இப்போ பாருங்க ஆடியோ ரிலீஸ் வரை வந்துட்டாரு…..பேசாம விஜய் சேதுபதிக்கு மட்டும் ஒரு தனி நடிகர் சங்கம் ஆரம்பிச்சு விட்டுடலாம் ” என்றார் .
இயக்குனர் அருண்குமார் தன் பேச்சில் ”
விஜய் சேதுபதி இல்லாவிட்டால் இந்த படம் அமைந்திருக்காது . எனக்கு எல்லா விதத்திலும் ஒத்துழைப்பு தந்த தயாரிப்பாளர் ஷன் சுதர்சனுக்கு நன்றி” என்றார்
விஜய் சேதுபதி தனது ஏற்புரையில் “இவ்வளவு நடிகர்கள் இங்கே வந்து கொஞ்சம் கூட சுய கவுரவம் பார்க்காமல் என்னைப் பாராட்டுவதைப் பார்க்கும்போது அவர்கள் எல்லாம் எவ்வளவு உயர்ந்த மனசுக்கு சொந்தக்காரர்கள் என்பது தெரிகிறது .அவர்களுக்கு நன்றி .
இந்தப் படத்தின் கதையை நான் ஐம்பது சதவீதம் நம்பினேன் என்றால் அருண்குமாரின் டைரக்ஷன் திறமையை நூறு சதவீதம் நம்பினேன் . அந்த நம்பிக்கை நீங்கள் எல்லாரும் பாராட்டும் அளவுக்கு சிறப்பாக வந்துள்ளது சந்தோஷமா இருக்கு ” என்றார் .
பிப்ரவரி மாதம் திரை தொடுகிறது சேதுபதி .