விஜய் சேதுபதி , ரம்யா நம்பீசன், வேல ராமமூர்த்தி ஆகியோர் நடிப்பில் பண்ணையாரும் பத்மினியும் படத்தை இயக்கிய சு.அருண்குமார் இயக்கி இருக்கும் படம் சேதுபதி . படம் அதிபதியா இல்லை சீதபேதியா ? பார்க்கலாம் .
போலீஸ்காரர்கள் எல்லாம் லஞ்ச ஊழல், அதிகார துஷ்பிரயோகப் பேர்வழிகளாக சித்தரிக்கப்படும் சூழலில் ,
இன்னொரு கோணத்தில் அவர்கள் எப்படி எல்லாம் பொண்டாட்டி பிள்ளைகளை பண்டிகை நல்ல நாட்கள் பெரிய நாட்களை மறந்து மழையிலும் வெயிலிலும் புயலிலும்,
நல்ல சோறு தண்ணி இல்லாமல் ஓய்வில்லாமல் உழைக்கிறார்கள் என்பதைச் சொல்லி படம் துவங்குகிறது .
அதன் தொடர்சியாக ஒரு போலீஸ் அதிகாரி தனது கடமையை செய்யப் போக , அதை வைத்து நள்ளிரவில் நயவஞ்சகமாக வலை விரிக்கப்பட்டு அநியாயமாக குத்தி சாய்க்கப்பட்டு உயிரோடு எரித்துக் கொல்லப் படுகிறார் .
அதை விசாரிக்கும் பணியில் ஈடுபடுகிறார், பதவி உயர்வுப் பட்டியலில் முக்கிய இடத்தில் இருக்கும், நேர்மையும் வீரமும் அதிரடியும் நிறைந்த போலீஸ் அதிகாரியான சேதுபதி (விஜய் சேதுபதி)
கல்யாணம் ஆகி இரண்டு குழந்தைகள் பிறந்து பள்ளி செல்லும் அளவுக்கு வளந்த பின்னும் (மாஸ்டர் ராகவன் , பேபி தனுஸ்ரா ) கொஞ்சமும் காதல் குறையாத மனைவி (ரம்யா நம்பீசன் ) என்று,
சேதுபதியின் குடும்ப வாழ்க்கை ஓர் அழகியல் கவிதையாக ஜொலிக்கிறது .
நகரின் பெரும் தாதாவான வாத்தியார் ( வேல ராமமூர்த்தி) என்பவரின் மகளுக்கு திருமணம் ஆகி , அந்த கணவன் மனைவிக்குள் ஒத்துப் போகாத நிலை!
விஷயம் விவாகரத்து வரை போக , மகளின் சம்மதத்தோடு மருமகனை போட்டுத் தள்ள முடிவு செய்கிறார் வாத்தியார். அந்த மருமகனும் ஒரு போலீஸ் அதிகாரி.
தன் ஆட்களை அனுப்பி மருமகனை கொலை செய்யச் சொல்ல , தவறுதலாக அன்று டியூட்டியில் இருந்த வேறொரு போலீஸ் அதிகாரியை கொன்று விடுகிறார்கள் அடியாட்கள் .
இந்த உண்மையை கண்டுபிடிக்கும் சேதுபதி, பண பலம் , அதிகார பலம் , அடியாள் பலம் , போலீஸ் துறையிலேயே ஆதரவு பலம் நிறைந்த வாத்தியாரை , அடித்து கைது செய்து அவமானப் படுத்துகிறார் .
கொந்தளிக்கும் வாத்தியார் சேதுபதிக்குக் குறி வைக்கிறார் .
செயின் திருட்டு வழக்கு ஒன்றில் சிக்கும் மாணவர்களை சேதுபதி விசாரிக்கும் போது , கறுப்பாடு போலீஸ் அதிகாரிகள் மூலம் சேதுபதியின் துப்பாகிக் குண்டை வெடிக்க வைத்து,
மாணவனை கொலை செய்யவே சேதுபதி சுட்டார் என்ற சூழலை உருவாக்கி, அதன் மூலம் சேதுபதியை முடக்குகிறார் வாத்தியார் .
விசாரணை கமிஷனில் சேதுபதியின் தரப்பு ஜெயிக்கவில்லை என்றால், வேலை பறிபோவதுடன் சேதுபதி ஜெயிலுக்கு போக வேண்டி வரலாம் என்ற நிலைமை .
இதனால் சேதுபதியின் ரம்மியமான குடும்ப வாழ்விலும் வேதனைகள் ஏற்படுகின்றன.
தன்னை நிரூபிக்க சேதுபதி போராட , சகல அதிகாரங்களையும் பயன்படுத்தி சேதுபத்தியை வீழ்த்த வாத்தியார் சதிராட, நடந்தது என்ன என்பதுதான் இந்தப் படம் .
போலீஸ் அதிகாரிகளின் கஷ்டங்களை உழைப்பை இழப்பை தியாகத்தை சொல்லும் அந்த மழை தூறலாம் பாடலும் அதை இயக்குனர் அருண்குமார் படமாக்கி இருக்கும் விதமும் அருமை .
நேர்மையான போலீஸ் அதிகாரிகளுக்கான சமர்ப்பணமாகவே சிறக்கிறது அந்தப் பாடல். சபாஷ் .
பண்ணையாரும் பத்மினியும் படத்தில் முதியோர் காதலை கையில் எடுத்த அருண்குமார் இந்தப் படத்தில் கணவன் மனைவியின் ஹோம்லி காதலி கையில் எடுத்து இருக்கிறார் .
சின்ன சின்ன காட்சிகளை கூட ரசித்து ருசித்து கொண்டாடி சிறப்பாக படமாக்கி இருக்கிறார் . உதாரணமாக விஜய் சேதுபதியின் அறிமுகக் காட்சி .
சாமி படத்துக்கு பூஜை செய்யும் போலீஸ், கையெழுத்து போடாமல் வாக்கி டாக்கி எடுப்பது , சென்ட்ரி புக்கோடு போலீஸ்காரர் அலைவது , சப் இன்ஸ்பெக்டர் – ஹெட் கான்ஸ்டபிள் உரையாடல், என்று,
ஒரு போலீஸ் ஸ்டேஷனின் யதார்த்த நிகழ்வுகளை மிக சிறப்பாக அப்சர்வ் செய்து , சிறு சிறு காட்சிகளாக இயக்குனர் அவற்றை விரிக்கும் விதம் கிளாஸ் !
சேதுபதியாக மீசை முறுக்கு , அலட்சிய நடை, கம்பீர சிரிப்பு என்று கெத்து காட்டுகிறார் விஜய் சேதுபதி .
”அவனை முறைக்க சொல்லாத ,சிரிப்பு வருது ..” டயலாக்கை பேசும் விதம் செம செம … ! சில பஞ்ச டயலாக்குகளும் அடடே என்று பாராட்ட வைக்கின்றன.
குழந்தைகள் தனுஸ்ராவும் ராகவனும் உள்ளம் கொள்ளை கொள்கிறார்கள் . தனுஸ்ரா செல்லத்தின் முக பாவனைகள் ஒரு படி மேலே போய் , நம்மையும் குழந்தைகளாக்கி விடுகின்றன .
அவர்களை சிறப்பாக நடிக்க வைத்துள்ளார் அருண்குமார் .
‘ரம்ய’ம் குறைந்திருந்தாலும் கொஞ்சம் செயற்கையாக நடித்து இருந்தாலும், ‘ஈசா’ என்று சொல்ல வைக்காமல், ‘நம்பி’ பார்க்கும்படிதான் நடித்துள்ளார் ரம்யா நம்பீசன் .
( உடம்பைக் கொஞ்சம் குறைம்மா. அலேக்கா தூக்கறதுக்குள்ள விஜய் சேதுபதிக்கு மூச்சு முட்டுது பாரு. )
வாத்தியாராக வேல ராமமூர்த்தி வழக்கமான சிலுப்பல்களோடு நடித்து பாராட்டுப் பெறுகிறார் வேல ராமமூர்த்தி . சப் இன்ஸ்பெக்டர் மூர்த்தியாக நடித்துள்ள அந்த தம்பியும் நன்றாக நடித்துள்ளார் . வாழ்த்துகள் !
போலீஸ் அடியின் லாவகதத்தை காட்டும்படியான சண்டைக் காட்சிகள் சண்டை இயக்குனர் ராஜசேகருக்கு சபாஷ் போட வைக்கின்றன .
நிவாஸ் பிரசன்னாவின் இசையில் பாடல்கள் மெல்லிசை இனிமை . தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவும் சிறப்பு. போலீஸ் ஸ்டேஷன் செட்டில் பாராட்டுப் பெறுகிறார் கலை இயக்குனர் பாலச்சந்தர் .
இன்ஸ்பெக்டர் வீட்டில் நடு கூடததில் உருவாகும் தண்ணீர்க் குளத்தில் இருந்து கிளைமாக்சுக்கு முன்னெடுப்பு எடுக்கும் போது மட்டும் சபாஷ் போட வைக்கிறது திரைக்கதை .
சேதுபதி வீட்டில் இல்லாத போது மனைவியையும் குழந்தைகளையும் ரவுடிகள் உள்ளே நுழைந்து சூழ , அந்தக் காட்சியில் லாஜிக் ‘லகலக’வானாலும்,
போலீஸ்காரர்களின் குடும்பங்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் கருத்து ரீதியாக பாராட்டுக்குரியதே.
எடுத்துக் கொண்ட விசயத்தை சிறப்பாகப் படமாகும் கலை அருமையாகக் கை வருகிறது இயக்குனர் சு.அருண்குமாருக்கு .
ஆனால் எடுத்துக் கொண்ட விஷயம் என்ன என்பதில்தான் சிக்கல் .
முகாந்திரமே இல்லாமல் அநியாயமாக ஆள் மாறாட்டமாக எரித்துக் கொல்லப்படும் பரிதாபம் கூட போலீஸ் அதிகாரிகளுக்கு நிகழ்வது உண்டு என்ற விசயத்தை,
மழை தூறலாம் பாடல் காட்சியின் உச்சமாக அமைத்து விட்டு , அதில் இருந்து விலகி முற்றிலும் வேறு ஒரு விவகாரத்தில் திரைக்கதை இறங்கி இருந்தால் துவக்கமே இன்னும் தூக்கலாக இருந்திருக்கும் .
அந்தக் கொலை குறித்த விசாரணையாக படம் தொடரும்போதே ஒரு தொய்வு ஏற்பட ஆரம்பித்து விடுகிறது.
அந்த போலீஸ் அதிகாரியின் மரணம் குறித்த விசாரணைதான் படத்தின் மெயின் கதை என்னும்போது அதை முதலில் காட்டி விட்டு,
அதற்குப் பிறகு ஒரு கனமான இடத்தில் மழை தூறலாம் பாடலும் காட்சிகளும் வந்திருக்க வேண்டும் .
பல காட்சிகளில் முழுமைத் தன்மை குறைகிறது . உதாரணமாக சேதுபதியின் பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்ல ஆட்டோக்காரர் வர, அந்த ஆட்டோவை தானே ஒட்டிக் கொண்டு போகிறார் சேதுபதி . ஒகே .
ஆனால் சம்மந்தப்பட்ட ஆட்டோ டிரைவர் காலியாக இருக்கும் ஆட்டோவின் பின் சீட்டில் புன்னகையோடு கை கட்டி பவ்யமாக உட்கார்ந்து இருப்பது போல சேர்த்திருக்க வேண்டாமா ?
போலீஸ் அதிகாரியின் குடும்ப வாழ்க்கைக்கு ஒரு டடிராக்கில் தரும் முக்கியத்துவம் என்பது ஓகேதான் .ஆனால் அதற்கான காட்சிகள் எழுதப்பட்ட வகையில்,
பக்குவமும் ஈர்ப்பும் சுவாரஸ்யமும் போதவில்லை .
தங்கப் பதக்கம் , இதயக் கனி, வால்ட்டர் வெற்றி வேல் என்று இதை விட அட்டகாசமான போலீஸ் அதிகாரியின் குடும்பக் காட்சிகளை எல்லாம் தமிழ் சினிமா எப்பவோ பாத்திருச்சே .
எனவே அந்த ஏரியாவில் இன்னும் நல்ல காட்சிகள் தேவைப்படுகிறது . அதுதான் படத்தின் முக்கிய பலவீனம் .
மாணவன் சமாச்சாரம் முடிந்த உடனேயே படம் முடிந்து விட்ட உணர்வு . . அதன்பிறகு வரும் வாத்தியார் சமாச்சாரம் தேவை இல்லாத வாலாகவே நீள்கிறது.
மாறாக , வாத்தியார் சமாச்சாரத்தை முடித்து வைத்து அதில் இருந்து திகீர் முன்னெடுப்பு எடுத்து மாணவன் சமாச்சாரத்துக்கு வந்து இன்னும் பரபரப்பாக படமாக்கி இருந்தால் அந்த தொய்வு ஏற்பட்டு இருக்காது .
இல்லையா? மாணவன் சம்மந்தப்பட்ட அந்த கிளைமாக்ஸ் விசயத்துக்குள் திரைக்கதை நுழைந்து இருக்கவே கூடாது .
அதிரடியான ஆக்ஷ்ன கதை அல்லது மிக வித்தியாசமான – ஏற்றுக்கொள்ளக் கூடிய குடும்பக் கதை , இப்படி எதாவது ஒரு ஒற்றைக் குதிரை சவாரியில் படம் பண்ணுங்க அருண்குமார் .
அது உங்களுக்கு நல்லா செட் ஆகும்
மொத்தத்தில் ,
சேதுபதி …. விறைப்பு கம்மி !
மகுடம் சூடும் கலைஞர்கள்
————————————————
விஜய் சேதுபதி, தனுஸ்ரா , ராகவன் . ‘இயக்குனர்’ அருண்குமார் .