மகாராஷ்ட்ராவில் புனேவுக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் வாழும் சிறுவனான தானுஷ் ஒரு வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி. அப்பா இல்லாத நிலையில், அந்த ஊரில் உள்ள சின்ன பஸ் ஸ்டாண்டில் பலகாரம் சுட்டு விற்று பிழைக்கும் அம்மாவை மட்டுமே துணையாகக் கொண்ட அவனுக்கு, இந்தி சினிமாவில் பெரிய சூப்பர் ஸ்டாராக, ஆக்ஷன் ஹீரோவாக வரவேண்டும் என்பதே லட்சியம் . அதை அறிந்த பள்ளிக்கூட வாத்தியார் அவனை கிண்டல் செய்ய, நடிப்பால் அவரை துவம்சம் செய்கிறான்
இளைஞனாக வளர்ந்த தானுஷ் (தனுஷ்) எப்படியாவது மும்பைக்கு போய் பெரிய ஹீரோவாக துடிக்கிறான் . லோக்கல் சிடி கடைக்காரருக்கு அம்மா சமைக்கும் சுவையான பலகாரங்களைக் கொடுத்து நட்பை ஏற்படுத்திக் கொண்டு அவரிடம் இருக்கும் கலெக்ஷனில் இருந்து எல்லா இந்தி மற்றும் இங்க்லீஷ் படங்களைப் பார்த்துத் தள்ளுகிறான்.
லோக்கல் பஸ் டிரைவரை சிநேகம் பிடித்து கண்டக்டர வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படுகிறான் . கண்டக்டர் வேலையையும் பார்த்துக் கொண்டு பஸ்ஸில் வரும் பயணிகளிடம் நடித்துக் காட்டி கைதட்டல்களை அள்ளுகிறான்.
நடிப்பு வெறியில் இருக்கும் தானுஷ் தன்னை விட்டுப் போய் விடுவான் என்ற பயத்தில் , ஒரு டாக்டரின் உதவியோடு நோயாளி போல நடிக்கிறாள் தானுஷின் அம்மா. ஒரு நிலையில் நோய் உண்மையாக , அம்மா இறந்தும் விடுகிறாள் .
அம்மா சேர்த்து வைத்திருந்த கொஞ்ச பணம் , ஒரு டிரங்குப் பெட்டி , பித்தளை டிபன் கேரியர் இவற்றோடும் கண்ணீரோடும் சொந்த ஊரைப் பிரிந்து சினிமாக் கனவுகளோடு மும்பைக்கு வருகிறான் , வாய் பேச முடியாத தானுஷ் .
மும்பை பிலிம் சிட்டியில் காவலர்கள் அவனை வெளியே தள்ள, அவர்களை சமாளித்து உள்ளே போய் , ஒரு கேரவான் வண்டியில் ஒளிந்து கொள்கிறான். யாருக்கும் தெரியாமல் கேரவான் வண்டியிலேயே ஒளிந்து தங்கியபடி ஸ்டுடியோவுக்குள் வாய்ப்புத் தேடும் முயற்சிகள் பலன் தராத நிலையில் , கேரவான் திருட்டுத்தனம் கண்டு பிடிக்கப்பட்டு, தாக்கப்படுகிறான். அப்போது அங்கு வரும் உதவி இயக்குனர் அக்ஷரா (அக்ஷரா ஹாசன்) அவனுக்கு உதவுகிறாள். அவனது நடிப்புத் திறமை அவளை ஈர்க்கிறது .
அக்ஷராவின் தந்தை ஒரு டாக்டர் . அவரது நண்பர் ஒருவர் பின்லாந்தில் உள்ள ஒரு உலகின் மிகச் சிறந்த குரல் மருத்துவமனையின் புதிய டெக்னிக்கல் கண்டுபிடிப்பு பற்றி அக்ஷராவின் தந்தையிடம் சொல்கிறார்.
அதன்படி பேச முடியாதவர்களின் குரல்வளையில் ஒரு மைக்ரோ சவுண்ட் புராசசர் என்ற கருவி பொருத்தப்படும். இன்னொருவரின் காதில் ஹெட் போன் போன்ற ஒரு கருவி பொருத்தப்படும் . ஹெட் போன்ற அந்தக் கருவியைப் பொருத்தி இருப்பவர் பேசும்போது, அது பேச முடியாதவரின் காதிலும் விழும்.
அதே நேரம் பேச முடியாத நபரின் குரல்வளையில் பொருத்தப்பட்டுள்ள கருவி பேசுபவரிடம் இருந்து பெற்ற சிக்னல்களை பெற்று அதை மீண்டும் அதே வார்த்தைகளாக்கி வைத்திருக்கும் . பேச முடியாதவர வாய் திறந்தால் போதும் அந்த வார்த்தைகள் மீண்டும் அவரின் வாயில் இருந்து ஒலிக்கும் . தனது வாயில் இருந்து வரும் வார்த்தைகளுக்கு ஏற்ப அந்த மாற்றுத் திறனாளி வாயசைக்க வேண்டும் . இப்போது பார்த்தால் , பேச முடியாத மாற்றுத் திறனாளியே பேசுவது போல இருக்கும்.
நிஜமாகப் பேசும் நபர் நானூறு மீட்டர் சுற்றளவுக்குள் எங்கே இருந்து பேசினாலும் அது பேச வேண்டிய மாற்றுத் திறனாளிக்குள் சிக்னலாக வந்து மீண்டும் அதே வார்த்தைகளாக மாறி விடும் .
ஒரு வேலை குரல் கொடுப்பவர் சொன்ன வார்த்தைகளை பேசுவதற்கு மாற்றுத் திறனாளி விரும்பவில்லை என்றால் அமைதியாக இருந்தால் போதும் . நாற்பது நொடிகளில் அந்த வார்த்தைகள் அழிந்து விடும் .
இந்த டெக்னாலஜியின்படி தானுஷுக்கு ஏற்ற ஒரு குரலைக் கண்டு பிடித்து மேட்ச் செய்து தானுஷை ஹீரோவாக்க முயல்கிறாள் அக்ஷரா .
எந்த குரலால் நாற்பது ஆண்டுகளுக்கு முன் தன்னை பாலிவுட் புறக்கணித்ததோ , இன்று அதே குரலை வைத்து ஜெயிப்பதற்கு வரும் வாய்ப்பு என்பதால், அவரும் ஒத்துக் கொள்கிறார்கள் .
தானுஷின் பெயர் மாற்றப்பட வேண்டும் என்று வாய்ப்புத் தரும் இயக்குனர் விரும்ப , தானுஷ் அமிதாப் இரண்டு பெயர்களையும் வைத்து ‘ஷமிதாப்’ என்ற பெயரை தானுஷே சொல்கிறான் . ”உன் பேரில் இருந்து sh மட்டும்தான் வருது . ஏன்னா நீ ஊமை” என்கிறார் அமிதாப். இப்படியாக ஒவ்வொரு கட்டத்திலும் தானுஷை அமிதாப் கிண்டல் செய்தாலும் , தனது லட்சியக் கனவின்படி பெரிய ஹீரோவாக வருவதற்காக, எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்கிறான் தானுஷ்.
அமிதாப்பின் குரலில் ஷமிதாப் என்ற பெயர் மாற்றத்துடன் தானுஷ் நடித்த லைஃப்பாய் படம் பெரும் வெற்றி பெறுகிறது. தானுஷின் நடிப்பும் அமிதாப்பின் குரலும் சூப்பராக மேட்ச் ஆகிறது . சூப்பர் ஸ்டாராக உயர்வதோடு , முதல் படத்திலேயே சிறந்த நடிகருக்கான விருதும் பெறுகிறான் ‘ஷமிதாப்’ தானிஷ். நமக்கு வரவேண்டிய விருதை, நமது முகம் கூட யாருக்கும் தெரியாமல், தானுஷ் மட்டும் வாங்குகிறான் என்ற பொறாமை அமிதாப் மனதில் எழுகிறது. ஆனால் அமிதாப் யார் என்பதையும் , தான் ஒரு ஊமை என்பதையும் சொல்ல முடியாத காரணம் தவிர , அமிதாப் சின்ஹாவை தானுஷ் எந்த விதத்திலும் புறக்கணிக்கவில்லை.
எப்போதும் தானுஷுடன் அமிதாப் இருக்க வேண்டிய கட்டாயத்தில், ராபர்ட் என்ற பெயரோடு தானுஷின் காஸ்டியூம் அசிஸ்டன்ட் ஆக அமிதாப் நடிக்க வேண்டி வருகிறது. தனிமையில் தானுஷ் முன்னிலையில் சகஜமாக இருக்கும் அமிதாப், யாராவது வந்தால் சாப்பிடும்போது கூட பாதியிலேயே எழுந்து தானுஷ் முன்னால் அடிமை வேலைக்காரன் பவ்யமாக நிற்கவேண்டி இருக்கிறது . இதை எல்லாம் அவரால் ஜீரணிக்க முடியவில்லை .
ஒரு நிலையில் அமிதாப் சின்ஹாவின் முரட்டு முரண்டுகள் விஸ்வரூபம் எடுக்கின்றன. கதை தனக்கு பிடிக்க வேண்டும் , வசனம் தனக்கு பிடிக்க வேண்டும் என்று பல கண்டிஷன்கள் போடுகிறார் . அது ஷமிதாப் தானுஷின் வளர்ச்சியை பாதிக்கிறது.
சில இடங்களில் அமிதாப் சின்ஹாவின் சிடு சிடு பேச்சு காரணமாக , வேறு வழியின்றி தானுஷும் அதையே பேச, அது அவனது இமேஜை பாதிக்கிறது. தானுஷ், அமிதாப் சின்ஹா இருவருக்கும் உள்ளுக்குள் யுத்தம் வெடிக்கிறது.
மக்கள் விரும்பும் ஷமிதாப் யார் ? தானுஷா இல்லை அமிதாப் சின்ஹாவா என்பதில் இருவருக்குமிடையே பகை உருவாகிறது. நான்தான் ஷமிதாப் என்கிறார் அமிதாப் சின்ஹா.
அதன் உச்சகட்டமாக லண்டனுக்கு விருது வாங்க போன இடத்தில் அமிதாப் சின்ஹா குடித்து விட்டு ரகளை செய்ய போலீஸ் அவரை கைது செய்கிறது . ஜெயிலுக்கும் கோர்ட்டுக்கும் போய் அவரை மீட்கிறான் தானுஷ். மும்பை திரும்பும்போது ஷமிதாப் தானுஷை பேட்டி எடுக்க மீடியாக்கள் நெருங்க , “ராபர்ட்டின் செயல் படு கேவலமானது . அதற்காக நான் வருத்தப்படுகிறேன் ” என்று வாய்ஸ் கொடுக்கும்படி அமிதாப்பிடம் தானுஷ் சொல்ல , அவரோ வேண்டும் என்றே “ராபர்ட் என்ன பெரிய தப்பு செய்து விட்டார். அதற்காக நான் வருத்தப்படவில்லை ” என்று கூற, அவசரப்பட்டு தானுஷ் வாய் திறக்க, வார்த்தைகள் அப்படியே தானுஷ் வாயில் இருந்தும் வந்து விழ, அநாகரிகமான பதில் என்று கூறி மீடியாக்கள் ஷமிதாப்பை விமர்சித்துக் கிழித்து விடுகின்றன.
பொங்கி எழும் தானுஷ் அமிதாப்பை அடி பின்னி எடுத்து விட, இருவரும் பிரிகிறார்கள் .
தபட் படத்தில் இன்னொரு நடிகனுக்கு சூப்பர் ஸ்டார் ஷமிதாப் குரல் கொடுத்து இருப்பது செட் ஆகவில்லை என்று ரசிகர்கள் நினைக்க அந்தப் படம் தோல்வியடைகிறது . இஷ்க் படம் நன்றாக இருந்தாலும் தனது கம்பீரக் குரல் இல்லாத ஷமிதாபின் நடிப்பு நிறைவைத் தரவில்லை என்று ரசிகர்கள் நினைக்க , அதுவும் வெற்றி பெறவில்லை .
மீண்டும் இருவரும் இணைந்தால்தான் வெற்றி என்ற நிலைமை . அந்த குடிகார அயோக்கியனிடம் நான் கெஞ்ச மாட்டேன் என்று தானிஷ் மறுக்கிறான்.
ஆனால் …. தன்னை உருவாக்கிய அக்ஷராவுக்கு தயாரிப்பாளர் கிடைத்து இருக்கும் நிலையில், அவளது படத்தில் நடித்துக் கொடுத்து அவளது நல்வாழ்வுக்காக உதவ வேண்டும் என்று அக்ஷரா கேட்டுக்கொள்ள , அதற்காக அமிதாப்பை தேடிப் போகிறான் தானுஷ் .
பெரும் சண்டைக்கு பிறகு சமாதானமாகி இருவரும் சேர்ந்து அக்ஷரா இயக்கும் சாரி என்ற படத்தில் பணியாற்ற முடிவு செய்கிறார்கள்.
இந்த நிலையில் விமான நிலையத்தில் “ராபர்ட் செய்ததற்காக நான் வருத்தப்படவில்லை ” என்று பேசிவிட்டு தானுஷ் காட்டிய அதிர்ச்சியை பார்த்து குழம்பும் ஒரு பத்திரிகை நிருபர் , தானுஷின் சொந்த ஊருக்கு போய் , தனுஷ் வாய் பேச முடியாதவன் என்ற உண்மையைக் கண்டு பிடிக்க ,
அதற்கு பதில் என்ன செய்வது என்று தானுஷ் அமிதாப் அக்ஷரா கூட்டணி அழகாக திட்டமிட, அப்போதும் அமிதாப்பின் ஈகோ குறையாமல் இருக்க , அடுத்து என்ன நடக்கிறது என்பதே … ஷமிதாப்.
வாய்ப்புத் தேடும் அலையும் தீவிரம் , சட்டென்று நொறுங்கி அழும் கழிவிரக்கம் , அமிதாப்பின் குரலுக்கு ஏற்ப தனது முக பாவனைகளை மாற்றிக் கொள்ளும் விதம் , அமிதாப்பை கலாய்க்கும் சில்லுண்டி அழகு, சமயத்தில் காட்ட வேண்டிய அமைதிப் பக்குவம் , என்று அமிதாப்புடன் போட்டி போட்டு நடித்து ஜெயித்து, புதிய உயரங்களை தொட்டிருக்கிறார் தனுஷ் .
அமிதாப் … பாரட்ட வார்த்தைகளே இல்லை . ஒரு வில்லன் கதாபாத்திரத்தை தனது அட்டகாசமான நடிப்பால் காதலிக்க வைக்கிறார். படத்தின் ஆரம்பத்தில் அவரது குரல் முதன் முதலில் ஒலிக்கும்போது ஏற்படும் சிலிர்ப்பு கடைசிவரை அடங்கவே இல்லை.
தனுஷிடம் அடி வாங்கிக் கொண்டு நக்கலாக சிரிப்பது, தனுஷோடு கட்டி உருள்வது என்று கேரக்டரின் கையில் தன்னை அவர் கொடுக்கும் விதம்தான் , ரசிகர்கள் தங்கள் இதயங்களை அவரிடம் கொடுப்பதற்கு காரணம் ஆகிறது.
நடிப்பு என்பது சும்மா கை கால் ஆட்டுவது இல்லை . குரலால் வெளிப்படுத்துவது என்பதை , ஹாலிவுட் நடிகர் ராபர்ட் டி நீரோ போட்டோ முன்பு அவர் நடித்துக் காட்டும் விதம், அவரது வரலாற்றில் இன்னொரு மகுடம் !
காட்சிக்கேற்ற வசனங்கள் எழுதி, அந்த வசனங்களில் இருந்தும் சில சமயம் வார்த்தைகளில் இருந்தும் காட்சிகளை கருத்தரித்து, திரைக்கதையில் முடிந்த வரை முழுமையைத் தொட்டு, அதை ஜஸ்ட் படித்தாலே, பிரம்மித்து விடுவோம் என்ற நிலை வந்த பிறகுதான் ஷூட்டிங் போயிருப்பார் போல.
தனுஷ் பஸ் கண்டக்டராக ஆனார் என்று சொல்லி ரஜினி ரசிகர்களை டச் பண்ணுவது .. அதே நேரம் பஸ்ஸில் அவர் கமல் நடித்த மூன்றாம் பிறை படக் காட்சியை (சரி.. சத்மா ) நடித்துக் காட்டுவதாக காட்சி வைத்து இருப்பது ….. டைரக்டோரியல் குறும்பு. அதிலும் ஷமிதாப் தனுஷ் பேசும் அமிதாப்பின் குரலை நடிகை ரேகா கேட்டு மென்மையாய் சிலிர்ப்பது போலவும் , கடவுள் கொடுத்த இந்த குரலை பத்திரமா வச்சுக்கோ என்று ரேகா சொல்வதாகவும் வசனம் வைத்து இருப்பது ராட்சஷக் குறும்பு
கிளைமாக்ஸ் நம்மை கல்லாய்ச் சமைக்கிறது .
தனுஷ் பாணியில் அமிதாப் நடிக்கும் காட்சி இயக்கத்தின் சிகரம்.
ஆணவத்தில் ஆடும் மனிதன், வாழும்போதே பிணமாவான் என்ற பாடத்தை சொல்கிறது படம் .
ஷமிதாப் … ஷப்பாஆஆஆஆஷ்ஷ்ஷ்ஷ்!
———————————————–