ராசா ஸ்டுடியோஸ் சார்பில் கே ஜே ரமேஷ் ஆர் சஞ்சீவ் குமார் தயாரிக்க, மதிவாணன் இயக்கத்தில் அர்ஜெய், சிவ ஷாரா, ஆஷிக் ஹுசைன் , ராஜ்குமார், சுரேஷ் சக்ரவர்த்தி நடிப்பில் மதிவாணன் இயக்கத்தில் ஷார்ட் பிலிக்ஸ் யூ டியூப் சேனலில் வெளிவந்திருக்கும் படம்
அமைச்சர்களையே சர்வ சாதாரணமாக சுட்டுத் தள்ளும் குருவி ராஜன் என்ற தாதாவின் அடியாளாக இருக்கும் ஒரு நபரின் சொந்த ஊரான ஈரோட்டில் இருந்து வெள்ளந்தி இளைஞன் ஒருவன் வேலை தேடி வருகிறான் . ஊர் நண்பனுக்கு கெட்ட வேலை எல்லாம் வேண்டாம் என்று நினைக்கும் அடியாள், தான் தங்கி இருக்கும் அறையில் இருக்கும் ரூம் மேட்டிடம் ஊர் நண்பனை ஒப்படைத்து விட்டு , தாதா சொல்லும் வேலையைப் பார்க்க போகிறான் .
ஊரில் இருந்து வந்தவனுக்கு ஆரம்பத்தில் ரூம் மேட்டோடு வெறுப்பும் அப்புறம் பாசமும் ஏற்படுகிறது
ஒரு சண்டைக்குப் பிறகு தாதா களைப்பாக வரும் வேளையில் தாதாவின் செய்கை பிடிக்காமல் பொது இடத்தில் வெள்ளந்தி இளைஞன் யார் என்று தெரியாமலே தாதாவை அடித்து விடுகிறான் . அப்போது தாதாவால் ஒன்றும் செய்ய முடியாத நிலை என்றாலும் அவனை படம் எடுத்து ஆட்களை விட்டுத் தேடுகிறான் .
முகலாய அரசர் அக்பர் பயன்படுத்திய த- இன்று பல கோடி ரூபாய் மதிப்பு மிக்க- உயர் தரத் தங்கச் சரிகை மற்றும் யானைத் தந்த இழைகளால் உருவாக்கப்பட்ட சீட்டுக்கட்டு குறித்த தேடலில் இருக்கும் தாதா, எதிர்பாராத விதமாக அடியாள் தங்கி இருக்கும் ரூமுக்கு வர , அவனை அடித்த வெள்ளந்தி இளைஞனை அங்கே பார்த்துக் கொல்லப் போக,
அந்த இளைஞனிடம் மேற்படி சீட்டுக்கட்டு இருப்பதும் , அது போல நிறைய தயாரிக்கும் தொழில் நுட்பம் வெள்ளந்தி இளைஞனுக்கு தெரியும் என்பதும் தாதாவுக்கு தெரியவர, நடந்தது என்ன என்பதே இந்த படம் .
சித்தார்த் நடித்த ஜில் ஜங் ஜக் என்ற மொக்கைப் படத்தில் ஷூட் த குருவி என்பது ஆபாச நகைச்சுவையாகப் பயன்படுத்தப்பட்ட நிலையில், படத்துக்கு அதே பெயரை வைத்து குருவி ராஜன் என்பது ஒரு தாதாவின் பெயர்; அவனை சுடுவதே கதை என்று மாற்றிய வகையில் கவர்கிறார் இயக்குனர் மதிவாணன் .
பேச்சுதான் நடிப்பு என்பதால் எல்லோரும் நன்றாகப் பேசி இருக்கிறார்கள் . வெட்டி பேச்சு வீண் பேச்சு, ஆபாச பேச்சு இவற்றுக்கு இடையே கதைக்கு தேவைப்படும்படியாகவும் கொஞ்சம் கருணையோடு பேசுகிறார்கள் . சிலர் மட்டும் சில சமயம் நடிக்க முயன்று இருக்கிறார்கள்.
ஒலிக்கலவையில் பல இடங்களில் வசனம் புரியாத அளவுக்கு அலட்சியம் . குருவி ராஜனாக வருபவர் கமறலாக பேசுவதாக எண்ணி யாருக்கும் புரியாத வகையில் பேசி வைத்துள்ளார்.
மூங்கில் மர வசனம் அருமை
கலை இயக்குனர் சரவணன் பிரான்மலை, இசை அமைப்பாளர் மூன் ராக்ஸ், ஒளிப்பதிவாளர் பிரண்டன் சுஷாந்த் ஆகியோரின் பங்களிப்பு சிறப்பு. பாராட்டுகள் .
கடைசியில் குருவி ராஜன் தனி ஒரு மனிதன் அல்ல . மாறாக…..
என்று ஒரு விஷயம் சொல்லும் இடத்தில் கவர்கிறார் இயக்குனர் .
மொத்தத்தில் ஷூட் த குருவி … பாய்ன்ட் பிளாங்க்டு !