கன்னடத்தில் பவன் குமார் என்ற படைப்பாளி ‘கிரவுட் ஃபண்டிங்’ என்ற முறையில் ஆயிரக்கணக்கானவர்களிடம் கொஞ்சம் கொஞ்சமாக பணம் வாங்கி அறுபத்தைந்து லட்ச ரூபாய் திரட்டி தயாரித்து இயக்கிய லூசியா என்ற கன்னடப்படம் வசூலில் சக்கைப்போடு போட்டதோடு தரத்தின் அடிப்படையிலும் கொண்டாடப்பட்டது .
அந்தப் படத்துக்கு பெரும்பகுதி பின்னணி இசை அமைத்த நம்ம ஊரு இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்,
படத்தைப் பற்றி திருக்குமரன் என்டர் பிரைசஸ் நிறுவனத்தின் உரிமையாளரான பிரபல தயாரிப்பாளர் சி.வி.குமாரிடம் சொல்ல ,
படத்தின் தமிழ் மறுஉருவாக்க உரிமையை வாங்கிய சி.வி. குமார்….
பீட்சா படத்தில் இணை இயக்குனராக பணி புரிந்து மனம் கவர்ந்த பிரசாத் ராமர் என்பவரை அழைத்து,
படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்தார்.
கமல் நடித்த எனக்குள் ஒருவன் பெயர்,
முறைப்படி அனுமதி பெற்று இந்தப் படத்துக்கு வைக்கப்பட்டது.
அபி டி சி எஸ் நிறுவனம் சார்பில் அபினேஷ் இளங்கோவன் வழங்க , திருக்குமரன் என்டர்பிரைசஸ் சி.வி.குமார் தயாரிப்பில் சித்தார்த் படத்துக்கு ஹீரோவாக , கதா நாயகியாக வந்தார் தீபா சன்னிதி . (பிரசாத் ‘ராமர்; என்ற பெயருக்கு பொருத்தமான கதாநாயகி பெயர் !) இவர் கன்னடத்தில் பல படங்களில் கதாநாயகியாக நடித்து இருப்பவர் . (கதாநாயகி வாங்கினால்தான் கதை வாங்கலாம்னு சொல்லிட்டாய்ங்களோ?)
பீட்சா படத்துக்கு ஒளிப்பதிவு செய்த கோபி அமர்நாத் ஒளிப்பதிவில் கன்னட லூசியாவுக்கு பெரும்பகுதி பின்னணி இசை அமைத்த சந்தோஷ் நாராயணனே இதற்கும் இசை அமைக்க…..
லூசியா படத்தை அப்படியே காப்பி அடிக்காமல் கருவை மட்டும் எடுத்துக் கொண்டு ஒரிஜினலை விட சிறப்பாக பிரசாத் ராமர் திரைக்கதை அமைக்க, வெற்றிகரமாக பாடல் வெளியீட்டு விழா நடந்து பின்னணி இசை சேர்ப்பு வேலைகள் வரை வளர்ந்திருக்கிறது எனக்குள் ஒருவன். ஒய்நாட் ஸ்டுடியோ சஷிகாந்தும் ரேடியன்ஸ் மீடியா வருண் மணியனும் படத்தை வாங்கி வெளியிடுகிறார்கள்.
குஷ்பூ, விஜய் சேதுபதி, இயக்குனர் சீனு ராமசாமி , சமந்தா , அருண்பாண்டியன் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா ஆகியோர் கலந்து கொள்ள நடைபெற்ற பாடல் வெளியீட்டு விழாவை ஒட்டி நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் இரண்டிரண்டு முறை முன்னோட்டத்தையும் ஒரே முறை இரண்டு பாடல்களையும் திரையிட்டார்கள்.
ஒரு எளிய ஏழை மனிதன், தனது சக்திக்கு மீறிய கற்பனைக் கனவுகளுக்கு உள்ளே நுழைந்து வாழ்ந்து பார்க்கும் விஷயங்களை காட்சிப் படுத்தும் கதையில், அந்த எளிய மனிதனின் இயல்பான வாழ்க்கையை வண்ணத்திலும் , கலர்புல்லான கனவு வாழ்க்கையை கருப்பு வெள்ளையிலும் காட்டுகிறார்கள் .
நடிகனாகக் கனவு காணும் அந்த எளிய மனிதனின் கனவில், அவன் ஒரு பெரிய சினிமா ஹீரோவாக ஆடிப் பாடும் காட்சிகள் கருப்பு வெள்ளையில் வர, அவற்றை மிக அருமையாக படமாக்கி இருந்தார் ஒளிப்பதிவாளர் கோபி அமர்நாத்.
சந்தோஷ் நாராயணன் இதுவரை கொடுத்த பாடல்களை விட இந்த படத்துப் பாடல்கள்தான் பெஸ்ட் என்ற அளவுக்கு ஈர்ப்பாக இருந்தன பாடல்கள் .
முற்றிலும் பாமரத்தனமான கெட்டப்பில் கவனம் கவர்கிறார் சித்தார்த் .
“எனது சாக்லேட் பாய் இமேஜை மாற்ற ஜிகிர்தண்டா , காவியத் தலைவன் மற்றும் இந்த எனக்குள் ஒருவன் படங்கள் உதவும் .
அந்த வகையில் இந்த 2014 எனக்கு ரொம்ப சிறப்பான வருஷம்.
இந்தப் படத்தை கன்னடத்தில் பார்த்த போதே இதன் தமிழ் உரிமையை நானே வாங்கி தயாரிக்கணும்னு நினைச்சேன் .
சிவி குமார் இதை வாங்கி விட்ட தகவல் தெரிந்த உடன் அவருக்கு போன் பண்ணி ‘நான்தான் ஹீரோவாக நடிக்கணும் ‘ என்று அடம் பிடித்து சம்மதம் வாங்கி நடித்து இருக்கிறேன். ” என்று சித்தார்த் பேச ,
அதன் பிறகு அது பற்றி சிவி குமார் பேசிய ஒரு விஷயம்தான் அரங்கையே அல்லோலகல்லோலப் படுத்தியது .
” சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்தை வாங்க சொன்னதுமே நானும் நடிகர் பாபி சிம்ஹாவும் ரைட்ஸ் வாங்க காரில் கிளம்பினோம்.
அந்தப் படத்தைப் பார்த்து இருந்த பாபி சிம்ஹா நாமதான் அந்தப் படத்துல ஹீரோவா நடிக்கப் போறோம்னு நம்பிக்கையா இருந்தாரு.
ஆனா நாங்க ரைட்ஸ் வாங்கின கொஞ்ச நேரத்துல சித்தார்த் போன் பண்ணி பேச , ஹீரோ மாறிப் போச்சு .
ஆனாலும் பாபி சிம்ஹா தாங்கிக் கிட்டார் . நாங்க எல்லாம் அந்த அளவு ஃபிரண்ட்ஸ் ” என்றார் .
தண்டாவுக்குள் இப்படி ஒரு ஜிகிரா ?