அரிமா நம்பி முடிந்த அடுத்த ரெண்டு மாசத்துக்குள் சிகரம் தொடு என்று சிலிர்த்துக் கொண்டு வருகிறார் விக்ரம் பிரபு தம்பி .. அதாவது தம்பி, விக்ரம் பிரபு .
யூ டிவி மோஷன் பிக்சர்ஸ் தயாரிக்க, தூங்கா நகரம் படத்தின் மூலம் கவனம் கவர்ந்த கவுரவ் இயக்கத்தில், காசி உட்பட வட இந்தியா முழுக்க வளைச்சு வளைச்சு எடுத்திருக்கிறார்கள் இந்த சிகரம் தொடு படத்தை.
டூப்ளிகேட் ஏ டி எம் கார்டுகளை தயாரித்து அடுத்தவன் காசை அலட்டிக் கொள்ளாமல் அள்ளிக் கொள்கிற அடேங்கப்பா குற்றங்களை பற்றியும் அதை தடுப்பது எப்படி என்பது பற்றியும் பாஸ்வேர்ட் இல்லாமல் பரபரப்பாக பேசுமாம் இந்தப் படம். தவிர இந்தப் படத்தில் முதன் முதலாக நிறைய காமெடி காட்சிகளிலும் நடித்து இருக்கிறாராம் விக்ரம் பிரபு
கமல்ஹாசன் படத்தின் பாடல்களை வெளியிட்டு ” என்னை விட , பிரபுவை விட நடிகர் திலகம் மடியில் அதிகம் தவழ்ந்த பிள்ளை விக்ரம் பிரபு ” என்று வாழ்த்திப் பேசிவிட்டு போன பிறகு பத்திரிக்கையாளர்களை தனியாக சந்தித்தது இந்தப் படக்குழு.
“ரொம்ப நாளாக இந்தப் படம் தயாரிப்பில் இருக்கே ” என்ற கேள்விக்கு பதில் சொல்லும் இணை தயாரிப்பாளர் தனஞ்செயன் ” படத்துல விக்ரம் பிரபு முதல் பாதியில் ஜாலியான ஹீரோவாகவும் இரண்டாம் பகுதியில் அட்டகாசமான போலீஸ் அதிகாரியாகவும் வர்றார் . போலீஸ் வேஷத்துக்கு குளோசா ஹேர் கட் பண்ண வேண்டி இருந்தது. ஆனா அந்த சமயத்துல விக்ரம் பிரபு இவன் வேற மாதிரி அரிமா நம்பி படங்கள்ல நடிச்சுட்டு இருந்தார் . நான் கூட முடி எப்படி இருந்தா என்ன சார்னு டைரக்டர்கிட்ட சொன்னேன். ஆனா அவர்தான் இல்ல சார் பர்ஃபெக்ஷன் வேணும் . நான் காத்திருக்கேன்னு சொன்னார். அதுவரை காத்திருந்தோம் ” என்றார் .
தாமதத்துக்கு தானும் ஒரு காரணம் சொன்ன இயக்குனர் கவுரவ் “ஏ டி எம் கார்டு குற்றங்கள் பத்தி சும்மா தெரிஞ்சதை வச்சு கதை பண்ண நான் விரும்பல . ஏன்னா அது ரொம்ப சிக்கலானது . அந்த குற்றவாளிகள் மேல எந்த செக்ஷன்ல வழக்கு பதிவு பண்றதுன்னே போலீசுக்கு இன்னும் புரிபடல. நான் அந்த குற்றம் செய்த கைதி ஒருத்தரை புழல் ஜெயில்ல பெரும் முயற்சிக்கு அப்புறம் சந்திச்சு பல விசயங்கள் தெரிஞ்சுகிட்டு கதையில் சேர்த்தேன் . இப்படி எல்லா தாமதங்களுமே நியாயமானவை . வெற்றிக்கு தேவையானவை ” என்று கூறியதோடு ..
படத்துல ஒரு காட்சியை வேகமாக பயணத்தில் நானும் விக்ரம் பிரபுவும் ஒளிப்பதிவாளரும் மட்டுமே படமாக்கிட்டு இருந்தோம். அப்போ திடீர்னு ஒரு ஆக்சிடன்ட் . உயிருக்கே ஆபத்தான என்னை தன் தோளில் தூக்கிப் போட்டுகிட்டு ரொம்ப தூரம் ஓடி மருத்துவமனையில் சேர்த்து உயிரைக் காப்பாத்தினார் விக்ரம் பிரபு. அவர் இல்லன்னா இன்னிக்கு நான் உயிரோடு இல்லை . எப்படி பிரபு சாருக்கு பி.வாசு சார் இருந்தாரோ அப்படி நான் விக்ரம் பிரபுவோட நிறைய படங்கள் பண்ணனும் “என்றார்
“போலீஸ் கேரக்டருக்கு தாத்தா சிவாஜியின் தங்கப் பதக்கம் உதவியதா ?” என்றால் ” அந்தப் படத்துல இருந்து ரெஃபரன்ஸ்னு எதுவும் எடுத்துக்கல. ஆனா அவர் ஞாபகம் வராம நடிக்க முடியாதே” என்ற விக்ரம் பிரபு “படத்தோட ஸ்கிரிப்ட் எனக்கு ரொம்ப புடிச்சு இருந்தது. படம் ரொம்ப நல்லா வந்திருக்கு” என்றார் .
இந்தப் படத்தின் பாடல் காட்சிகளுக்காக மலை உச்சிகளில் பல ஆபத்தான இடங்களில் நின்று நடித்துக் கொடுத்தார்களாம் விக்ரம் பிரபுவும் படத்தின் கதாநாயகியான மோனல் கஜ்ஜாரும். மிக சிறப்பாக பாடல் காட்சிகளை எடுத்திருந்தார் ஒளிப்பதிவாளர் விஜய் உலகநாத்.
இங்கே அந்த ‘ஒன்றிப் போன’ விவகாரம் வருகிறது .
படத்தில் நடித்திருக்கும் எதிர்நீச்சல் சதீஷ் ” ஷூட்டிங்ல எங்களுக்கு எல்லாம் ஒளிப்பதிவாளர் ஒழுங்கா லைட் வைக்கவே மாட்டாரு . ஆனால் மோனல் நடிக்கும்போது மட்டும் உலகத்துல உள்ள அத்தனை லைட்டும் வைப்பாரு. விட்டா, வானத்து மேலே ஏறி சூரியனை கூட இறக்கி வந்து லைட்டா போட்டுருப்பாரு போல . அவ்வளவு இன்வால்வ்மென்ட் “என்று ஆரம்பித்து வைத்தார் .
அடுத்து படத்தின் இன்னொரு நடிகரான ஈரோடு மகேஷும் இதை அடிக்கோடிட்டு வற்புறுத்தி, வலிக்க வலிக்க வலியுறுத்தி விட்டுப் போனார் .
” விஜய்க்கு இப்பதான் கல்யாணம் ஆகி இருக்கு . வீணா அவன் குடும்பத்துல குழப்பத்தை உண்டாக்க வேணாம் என்று ஆரம்பித்த இயக்குனர் கவுரவ்.. ஆனால் அடுத்த நொடியே ஒரு முடிவோடு ஆரம்பித்தார் பாருங்கள்!
” படத்துக்கு கதாநாயகி தேடியபோது மோனல் ஸ்டில்களை விஜய் கிட்ட காட்டி ‘இந்தப் பெண்ணை வரவச்சு பாக்கலாமா?’ன்னு கேட்டேன். ஸ்டில்களை உத்து உத்து பாத்துட்டு, ரொம்ப யோசனைக்கு அப்புறம் “சரி .. வரச் சொல்லி பாக்கலாம்’னு சொன்னான் . அந்தப் பொண்ணு வந்த உடனே “விஜிஈ ஈ ஈ ஈ ஈ ” ன்னு அவனை கட்டிப் புடிச்சுக் குதூகலிக்குது . என்னடான்னா இவங்க ரெண்டு பெரும் முன்னேயே ஒரு தெலுங்குப் படத்துல ஒர்க் பண்ணி இருக்காங்களாம்.
‘டேய் விஜய்… சொல்லவே இல்லியேடா’ன்னா ‘நீ கேக்கவே இல்லியே’ங்கறான்.
ஷூட்டிங் நடக்கிற ஒவ்வொரு நாளும் காலைல ஸ்பாட்டுக்கு வந்ததும் ரெண்டு பெரும் கட்டிப் புடிச்சுக் கிட்டுதான் பேசவே ஆரம்பிப்பாங்க. எங்களை எல்லாம் பாத்தா மனுஷனாவே தெரியல ..” என்று கொந்தளித்ததைப் பார்த்தால் …
சரி நம்மாலும் ஒளிப்பதிவாளர் வீட்டில் , 5 KV லைட்டின் பல்பு வெடிக்க வேண்டாம்