யூ டி வி மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில், தூங்கா நகரம் படத்தின் மூலம் கவுரவமான இயக்குனர் என்ற பெயரைப் பெற்ற கவுரவ் இயக்கி வந்திருக்கும் படம் சிகரம் தொடு. உயரம் எவ்வளவு என்று பார்ப்போம்.
கடமை தவறாத காவல் அதிகாரியாக பணியாற்றி கலவரம் ஒன்றில் கால் ஒன்றை இழந்து குற்ற ஆவணக் காப்பகத்தில் பணியாற்றும் செல்லப்பாவுக்கு (சத்யராஜ்) தனது மகனான முரளி பாண்டியனை (விக்ரம் பிரபு) ஒரு மாபெரும் காவல் அதிகாரியாக ஆக்கி, நிறைவேறாத தனது கனவுகளை எல்லாம் நிறைவேற்றிக் கொள்ள ஆசை.
ஆனால் அந்தக் கலவரத்தில் அப்பா காலிழந்தது மட்டுமின்றி , ரவுடிகளால் தன் அம்மாவும் கொல்லப்பட்ட நிலையில் பதிமூன்று வயதில் பல கஷ்டங்களை அனுபவித்த முரளி பாண்டியன், போலீஸ் வேலையையே வெறுக்கிறான். ஒரு நல்ல வங்கியில் மேனேஜர் வேலையில் சேருவதே அவன் லட்சியம்.
ஏரியா பெரிசுகளோடு அவன் காசிக்கு டூர் போகும்போது கூட வந்த இளம்பெண் அம்புஜத்தோடு (புதுமுகம் மோனல் கஜ்ஜார் ) முதலில் மோதலும் பிறகு காதலும் ஏற்படுகிறது. அவளுக்கும் போலீஸ் வேலை என்றால் பிடிக்காது . காரணம் அவளது அப்பா ஒரு போலீஸ் அதிகாரி .
தனது அப்பாவின் சொல்லை நேரிடையாக மீற முடியாத முரளி பாண்டியன் போலீஸ் டிரைனிங்குக்கு போய் அங்கே மோசமாக நடந்துகொண்டு தகுதி நீக்கம் செய்யப்படுவதற்கு திட்டம் போட, அம்புஜத்தின் தந்தையும் செல்லப்பாவின் நண்பருமான காவல் அதிகாரியால் அது தடுக்கப்படுகிறது .
அடுத்த கட்டமாக போலீஸ் வேலைக்கு தேர்வாகி முப்பது நாள் மோசமாக வேலை செய்து விட்டு பின்னர் பணி நீக்கம் செய்யப்படும்படி நடந்து கொள்ள முரளி பாண்டியன் முடிவு செய்கிறான். அப்படியே நாட்கள் போக, முப்பதாவது நாள் இரவு அந்த சம்பவம் நடக்கிறது .
செல்லப்பா போராடி பிடித்து முரளி பாண்டியன் பணியாற்றும் ஸ்டேஷனில் ஒப்படைத்த, சில ஏ டி எம் கார்டு பண மோசடி குற்றவாளிகள் , ஸ்டேஷனில் முரளி பாண்டியன் இல்லாத சமயத்தில் ஸ்டேஷனை உடைத்துக் கொண்டு தப்பிக்க முயல, அப்போது அங்கு வந்த செல்லப்பா அவர்களை பிடிக்க முயல, அவரை குற்றுயிரும் குலை உயிரும் ஆக்கி விட்டு குற்றவாளிகள் தப்பிக்கிறார்கள்
அந்த சமயத்தில் காதலியோடு ஜாலியாக சினிமா பார்த்துக் கொண்டு இருந்த முரளி பாண்டியன் விஷயம் அறிந்து நொறுங்கி, தனது தந்தையை உணர்ந்து , போலீஸ் வேலை என்றால் என்ன என்பதை உணர்ந்து, கடமை என்றால் என்ன என்பதை உணர்ந்து செயல்படுவதே சிகரம் தொடு.
என்றுமே அலுக்காத ஒரு எவர் கிரீன் செண்டிமென்ட் கமர்ஷியல் சினிமாவுக்கான டெம்ப்ளேட்டை கையில் எடுத்துக் கொண்டு திரைக்கதை அமைத்து இருந்தாலும் பல புதிய தேவையான பொது ஜன விழிப்புணர்ச்சி விசயங்களை படத்தில் சரிக்கு சரி கலந்து சுவாரஸ்யமாகவும் நெகிழ்வாகவும் சொன்ன விதத்தில் மனம் கவர்கிறார் இயக்குனர் கவுரவ் .
பணம் எடுக்கும் ஏ டி எம் மில் ஸ்கிம்மர் பொருத்தி , பொது மக்கள் தங்கள் பணத்தை எடுக்க சொருகும் ஏ டி எம் கார்டுகளின் ‘கோடிங்’கை காப்பி எடுத்து , அதை வைத்து ஏ டி எம் கார்டில் இருக்கும் மேக்னேட்டிக் பட்டையை தயாரித்து அசல் போலவே போலி ஏ டி எம் கார்டுகளை தயாரித்து, பின் ஹோல் கேமரா பொருத்தி ஏ டி எம் மெஷினில் அழுத்தும் பாஸ் வேர்டை யும் கண்டு பிடித்து அடுத்தவரின் அக்கவுண்டில் இருந்து பணம் திருடும் வேலை எப்படி நடக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டிய இயக்குனருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் .
இது மட்டுமின்றி டிராபிக்கில் பயணிக்கும் கொள்ளையர்களின் காரை அவர்களே அறியாமல் டேக் டைவர்ஷன் கொடுத்து தனிமைப் படுத்துவது போன்ற.. படத்தில் வரும் சில உத்திகள் ”நிஜ போலீசே இனி பயன்படுத்தலாமேப்பா ” என்ற அளவுக்கு செம ஸ்மார்ட் .
தனது அப்பாவுக்கு ஆபத்து வந்ததற்கு அம்புஜம்தான் காரணம் என்று முரளி பாண்டியன் கோபித்துக் கொள்வது போல ‘போங்கு’ சீன எல்லாம் வைத்து நம்மை கடுப்பேற்றாமல், ஜஸ்ட் லைக் தட் அந்த ஏரியாவை கடந்து போவதில் ஸ்கிரிப்டின் மெச்சூரிட்டி ஈர்க்கிறது.
கடமை உணர்வுள்ள காவலர்கள், போலீசாரின் குடும்பத்திற்கு இருக்கும் மன உணர்வுகள், குறைந்த வசதியோடு காவலர்கள் கஷ்டப்பட்டு பணியாற்றும் தன்மை என்று காக்கிச் சட்டைகளின் மொடமொடப்பையும் மீறி அவர்களின் இதயத்தை தொடுகிறார் இயக்குனர் கவுரவ் . தவிர படத்தின் முக்கிய வில்லனாகவும் பாராட்டும்படி நடித்து இருக்கிறார்.
விக்ரம் பிரபு கேரக்டருக்கு என்று செதுக்கியது மாதிரி இருக்கிறார். நடிப்பிலும் இந்தப் படத்தில் முன்னேற்றம் தெரிகிறது .சும்மா போகிற போக்கில் மிக அருமையாக செல்லப்பா கேரக்டரை செய்து இருக்கிறார் சத்யராஜ் . சூப்பர் தலைவா !
மோனல் கஜ்ஜார் அழகாக இருக்கிறார் . நடிப்பிலும் குறை சொல்ல ஒன்றும் இல்லை . கொஞ்சம் கண்ணாடி பார்த்து சில முகபாவனைகளை தவிர்க்கக் கற்றுக் கொள்வது இன்னும் நலம் மற்றும் பலம் சேர்க்கும்
படத்தில் இயக்குனருக்கு முதல் பலம் இமானின் இசை . எல்லா பாடல்களும் இனிமை. பின்னணி இசையும் தன்னை முன்னணிக்கு கொண்டு வந்து நிறுத்திக் கொள்கிறது .
இயக்குனரின் பெரும்பலம் விஜய் உலகநாத்தின் ஒளிப்பதிவு . இருளின் ஆட்சி , ஒளியின் மாட்சி இரண்டையும் நன்றாக கொண்டு வந்து காட்சிகளின் மூடுக்கு வலு கொடுக்கிறார் விஜய் . பாடல் காட்சிகளும் அருமை . டக்கு டக்கு பாடல் கிராபிக்ஸ் வேலை மற்றும் வண்ணப் பயன்பாடு ரசிக்க வைக்கிறது .டூயட் பாட்டில் உயரத்தில் இருக்கும் ஒற்றையடிப் பாதைகளிலும் சிகரங்களிலும் அழகான ஷாட்களுக்காக ஒட்டு மொத்த படக் குழுவே அசுர உழைப்பு உழைத்திருப்பது தெரிகிறது . ஹாட்ஸ் ஆஃப் !
படத்தின் முதல் பகுதி ரசிகர்களுக்கு நன்கு பழகிய ஏரியாதான் என்றாலும் விறுவிறுப்பாகப் போவதில் படத்தொகுப்பாளர் பிரவீனின் பங்கு மிக அதிகம் .
பக்குவமான பழமை , பரபரப்பான புதுமை இரண்டையும் சரி விகிதத்தில் கலந்து கொடுத்திருக்கும் இயக்குனரின் புத்திசாலித்தனம் காரணமாக ,
சிகரம் தொடு… உயரம் பெறு(ம்) !
மகுடம் சூடும் கலைஞர்கள்
——————————
கவுரவ், விஜய் உலகநாத், இமான், பிரவீண், சத்யராஜ், விக்ரம் பிரபு,