ஸ்டார் மூவிஸ் சார்பில் நடிகர் தியாகராஜன் திரைக்கதை, வசனம் எழுதி தயாரிக்க அவரது மகன் நடிகர் பிரஷாந்த் ஹீரோவாக நடிக்க அருண் ராஜ் வர்மா என்ற புது இயக்குனர் அறிமுகமாகும் படம் சாஹசம் .
இந்தப் படத்துக்காக தமன் இசையில் மதன் கார்க்கி எழுதிய ‘காரத்தில் இவ சில்லி” என்ற பாடலை டான்ஸ் மாஸ்டர் ராஜு சுந்தரத்தின் நடன இயக்கத்தில், ரயில்வே ஸ்டேஷன்… அதில் நிற்கும் ரயில் உள்பட….. பிரம்மாண்டமான நடன அரங்கை செட் போட்டு, வெள்ளை வெளேர் ரஷ்ய அழகிகள் விளக்கு வெளிச்சத்தில் டாலடித்துக் கொண்டு ஆட, உற்சாகமாகப் படமாக்கினார்கள்.
இந்தப் பாடலில் நாயகன் பிரஷாந்துடன் சேர்ந்து நடனம் ஆடியது …
பாகிஸ்தானி அப்பாவுக்கும் செக் நாட்டு அம்மாவுக்கும் நியூயார்க்கில் குவீன்ஸ் பகுதியில் பிறந்த இந்த வெள்ளை நிற வாளை மீன்…
அமெரிக்காவின் டாப் மாடல் சைக்கிள் என்ற ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமாகி…. பிறகு ரன்பீர் கபூர் ஜோடியாக ராக் ஸ்டார் என்ற இந்திப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி… அப்புறம் மெட்ராஸ் கபே படத்தில் ஜான் ஆபிரகாமுக்கு ஜோடியாக நடித்து…அதன்பிறகு ஷாஹித் கபூர் நடித்த பட்டா போஸ்டர் நிக்லா ஹீரோ படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடி.. மேற்கொண்டு வருண் தவான் நடித்ஹா மெயின் தேரா ஹீரோ படத்தில் ஹீரோயினாக நடித்த…
இந்தி சினிமாவின் ஹாட்டான ஐட்டம் சாங் நடிகை. மற்றும் கதாநாயகி நர்கீஸ் ஃபக்ரி !
அது மட்டுமா ?
சாஹசம் படத்தின் கதை பாடல், ஆடல், அழகு ஆகிய மூன்றுக்கும் முக்கியத்துவம் தந்து எழுதப்பட்ட கதை என்பதால் இளமையான, அழகான நடனமாட தெரிந்த பெண்ணை பல மாதங்களாக தேடிய தியாகராஜன்….
இந்தியாவைச் சேர்ந்த அம்மாவுக்கும், இங்கிலாந்து நாட்டு அப்பாவுக்கும் பிறந்த 19 வயதே நிரம்பிய அமண்டா லண்டன் நடிப்பு பள்ளியில் பட்டம் பெற்ற பாலே நடனத்தில் பல பரிசுகளை வென்ற ஆஸ்திரேலிய அழகி அமன்டாவை இந்தப் படத்தில் நடிக்க வைக்கிறார் .
பாடல்களை மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற வெளிநாடுகளில் படமாக்கியுள்ளனர்.
“பிரசாந்துக்கு மலேஷியாவில் ரசிகர்கள் அதிகம் என்பதால் அவர்களை சந்தோஷப்படுத்துவதற்காக மலாய் மொழியில் சில வார்த்தைகளைக் கொண்டு ஒரு பாடலும் எழுதப்பட்டு, அதன் சிங்கிள் ட்ராக்கை மலேசியாவில் வெளியிட இருக்கிறோம்” என்கிறார் தியாகராஜன்
மலேஷியாவில் நடைபெற உள்ள சிங்கிள் ட்ராக் வெளியீட்டுவிழாவை அடுத்து, இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவையும் சென்னையில் மிகப் பிரம்மாண்டமான முறையில் நடத்த திட்டமிட்டுள்ளார் தியாகராஜன்.
இந்த விழாவில் இப்படத்திற்காக பின்னணி பாடியுள்ள அனைத்து முன்னணி பாடகர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்களாம்.
சாஹசம் படத்தின் படப்பிடிப்பும் நிறைவடைந்து, அதன் ஃபர்ஸ்ட் லுக் இன்று (ஆகஸ்டு 5) மாலை ஏழு மணிக்கு வெளியாகிறது.
இதை நடிகர் சிம்பு வெளியிட இருக்கிறார் .
முக்கியமான பின் குறிப்பு :
மாநிலம் முழுக்க மது விலக்குக் கோரிக்கையோடு மக்கள் பொங்கி எழுந்து இருக்கும் நிலையில் தமிழ் சினிமாக்களோ டாஸ்மாக் காட்சி இல்லாமல் தலை காட்டுவதே இல்லை . சாஹாசம படத்தில் எத்தனை சரக்கடிக்கும் காட்சிகள் என்று கேட்டால் ..
“இந்தப் படத்தில் மது அருந்தும் காட்சிகள் ஒன்று கூட இல்லை” என்கிறார் தியாகராஜன் .
தள்ளாடாமல் இருக்கட்டும் இந்தத் தீர்மானம்!