மூவி ஸ்லைட்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் நடிகர் விஜயகுமார் தயாரிக்க, அவரது மகன் அருண் விஜய் நாயகனாக நடிக்க, பலக் லால்வானி, நாயகியாக நடிக்க , ஜி என் ஆர் குமாரவேலன் இயக்கி இருக்கும் படம் சினம்.
குற்றவாளி ஒருவனை கைது செய்கிறார் ஒரு நியாயமான காவல் துணை ஆய்வாளர் (அருண் விஜய்) அந்த குற்றவாளியோடு நட்பில் இருக்கும் காவல் ஆய்வாளருக்கு இது பிடிக்கவில்லை. குற்றவாளியை துணை ஆய்வாளர் கோர்ட்டில் ஒப்படைக்கப் போகும்போது குற்றவாளி கொல்லப் படுகிறார். அதனால் மேலதிகாரியால் கண்டிக்கப்படுகிறார் .
அந்த குற்றவாளியைத் தேடிப் போய்க் கைது செய்யும் பணியில் ஊருக்குப் போயிருக்கும் மனைவியை (பலக் லால்வானி) அழைத்து வர முடியவில்லை,. இரவு வீட்டுக்கு வருவதாகச் சொன்ன மனைவி வராத நிலையில் அவள் ஒரு இந்திக்காரனோடு சேர்ந்து கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறாள் .

அந்த மனைவிக்கு இந்திக்காரனோடு கள்ளக் காதல் என்று கதை கட்டுகிறார் உயர் அதிகாரி. நடந்தது என்ன நாயகன் என்ன செய்தார் என்பதே படம்.
சினம் மிக்க நியாயமான போலீஸ் அதிகாரி நாயகன் கேரக்டருக்கு அச்சு அசலாகப் பொருந்துகிறார் அருண் விஜய் . சில படங்களில் ஹீரோ ஒற்றை ஆளாகப் பல பேரை அடிப்பது நம்ப முடியாமல் இருக்கும் அல்லவா? இந்தப் படத்தில் இன்னும் சில பேரை சேர்த்துக் கூட அடிக்கலாமே என்னும் அளவுக்கு இருக்கிறார் அருண் விஜய். நடிப்பிலும் மிக சிறப்பு.
சின்னச் சின்னக் காட்சிகளைக் கூட மிக சிறப்பாக இயக்கி படமாக்கலில் கவர்கிறார் இயக்குனர் ஜி என் ஆர் குமாரவேலன். அழகான ஷாட்கள் , பொருத்தமான பிரேமிங், திரையில் சூழலை உருவாக்குவது நடிக நடிகையரிடம் நல்ல நடிப்பை வாங்குவது என்று தொழில் நுட்ப ரீதியாக பிரம்மாதப்படுத்தி இருக்கிறார் .

படத்தின் பெரும்பலம் சபீரின் இசை. இனிமையான பாடல்களோடு தரமான பின்னணி இசையும் கொடுத்து இருக்கிறார். தீம் மியூசிக் அதை வெவ்வேறு சூழலில் வெவ்வேறு இசைக்கருவிகளால் இசைக்கும் விதம் என்று அட்டகாசம் . காட்சிகளுக்கு ஏற்ற பொருத்தமான இசையோடு ஒட்டு மொத்த படத்துக்கும் இணைப்பான ஒரு ரிதம் இருக்கிறது இவரது இசையில் . படங்களைத் தூக்கி நிறுத்தும் திறமை இவரிடம் இருக்கிறது
கோபிநாத்தின் ஒளிப்பதிவு மிக சிறப்பு. காட்சிகளுக்கு ஏற்ற டோன் லைட்டிங் என்று அசத்தி இருக்கிறார் .
சண்டைக் காட்சிகளில் பட்டையைக் கிளப்பியுள்ளார்கள் ஸ்டன்ட் சில்வாவும் அருண் விஜய்யும்.
பாலக் பன்னீர் மாதிரி இருக்கிறார் பலக் லால்வானி. அந்த முகத்துக்கு மிகப் பொருத்தமான பின்னணிக் குரல்.
கதைக்கேற்ற திரைக்கதை இரண்டாம் பாதியில் அமையவில்லை என்பது ஒன்றுதான் குறை. கடைசியில் சொல்லி இருப்பதுதான் கதை என்றால் முன் பாதியில் பல காட்சிகள் தேவையே இல்லை. அவை படத்தோடு கனெக்ட் ஆகவில்லை. முற்பாதியில் வரும் போலீஸ் காட்சிகள் தேவை என்றால் அதற்கேற்ற திரைக்கதை இரண்டாம் பாதியில் அமையவில்லை.

இத்தனைக்கும் படத்தின் உள்ளே அந்த திரைக்கதை இருக்கிறது. அதை தவிர்த்து விட்டுப் போயிருக்கிறார்கள்.
கதாநாயகியின் அப்பா கடைசிவரை மகள் மீது கோபமாக இருப்பது எல்லாம் படத்துக்கு எந்த வகையிலும் பயன்படவில்லை. அதிலும் மகளின் சிறு வயது குணாதிசயம் பற்றி அப்படி ஸ்லாகிக்கும் அப்பா அப்படி வருத்தம் என்ற பெயரில் கோபத்தில் இருக்க வாய்ப்பே இல்லை. . கதாநாயகி ஆபத்தில் சிக்கிக் கொள்ளும் காட்சிகளிலும் லாஜிக் குறைபாடு . .
இப்படி சில குறைபாடுகள் இருந்தாலும் இசை அமைப்பாளர் சபீர், ஒளிப்பதிவாளர் கோபிநாத் போன்ற நல்ல தொழில்நுட்ப அறிவாளிகளின் துணையோடும் அருண் விஜய்யின் தெறிப்பான நடிப்போடும் அற்புதமான மேக்கிங்கால் படத்தை சிறப்பாக உருவாக்கியுள்ளார் குமாரவேலன் .