விஜயின் ‘வேட்டைக்காரன்’ படத்தின் வந்த ‘புலி உறுமுது…புலி உறுமுது…” பாடல் மூலம் , தமிழ் ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தவர் பாடகர் அனந்து.
ரஜினிகாந்தின் ‘கபாலி’ படத்தில் சந்தோஷ் நாராயணின் இசையில், ‘மாய நதி…’ என்ற மென்மையான, மிக நுட்பமான பாடலை, தமிழ், இந்தி, தெலுங்கு என்று மூன்று மொழிகளிலும் பாடி,
அனைவரது பாராட்டையும் பெற்றதோடு, தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களின் விருப்பமான பாடகராகவும் உருவெடுத்து இருக்கிறார் அனந்து.
இப்படி அதிரடியான பாடலாகட்டும், மெலடி பாடலாகட்டும், எப்படிப்பட்ட பாடலாக இருந்தாலும் தனது குரல் வளத்தால் அப்பாடலை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் வல்லமை நிறைந்த ,
அனந்துவின் வெற்றிப் பயணத்தில், மேலும் ஒரு திருப்புமுனையாக சமீபத்தில் வெளியான ‘பைரவா’ படத்தில் விஜயின் அறிமுகபாடலான ‘பட்டய கெளப்பு…’ பாடல் அமைந்தது.
ரசிகர்களுக்கு மட்டும் இன்றி விஜயின் பேவரைட் பாடலாகவும் அமைந்துள்ள இப்பாடால் பாடிய அனுபவம் குறித்து பேசும் அனந்து,
‘’பைரவா படத்தில் ஒரு பாடலை பாடுவதாக இருந்த எனக்கு எந்தப் பாடல் கிடைக்கும், என்று தெரியாது. இதற்கிடையில் படத்துக்காக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மெட்டு போட்டு வைத்திருக்க,
அதை கேட்க வேண்டும் என்று விஜய் சார் விரும்பியதால், என்னை அந்த மெட்டில் பாட வைத்து அவருக்கு அனுப்பி வைத்தார். மெட்டை கேட்ட விஜய் சாரிடம், பாடகர் குறித்து பேசிய போது,
“இந்த குரலே நல்லாதான் இருக்கு இவரே பாடட்டும்” என்று அவர் சொல்லிவிட்டார். பிறகு தான் எனக்கு அந்த பாடல் கிடைத்தது.
அதேபோல், விஜய் சார் பாடிய ‘பாப்பா…பாப்பா…’ பாலின் போதும், என்னை உடன் இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டதும் எனது பாடல்கள் பற்றி அவர் பாராட்டியதும் மறக்க முடியாதது.
அவருக்காக இரண்டு அதிரடியான பாடல்களை பாடியிருப்பதும், வைரமுத்துவின் வரிகளை பாடியிருப்பதும், எனக்கு பெருமையாக இருக்கிறது, இதற்கான வாய்ப்பினை எனக்கு அளித்த ,
நண்பர் சந்தோஷ் நாராயணனுக்கு நன்றி, என்கிறார்.
இறைவி, காஷ்மோரா, தாரை தப்பட்டை என்று பல படங்களில், ஹிட் பாடல்களை பாடி, தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள அனந்து, தற்போது சுமார் 15க்கும் மேற்பட்ட படங்களில் பாடியுள்ளார்.
“இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன், தினா, ஸ்ரீகாந்த் தேவா, பரத்வாஜ், வித்யாசாகர், எல்.வி.கணேஷ், ஷான் ரோல்டன் என்று முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடி வருவதோடு,
ஜேக்ஸ் உள்ளிட்ட வளரும் இசையமைப்பாளர்களுடனும் இணைந்து பணியாற்றுவது எனக்கு பெருமையாக இருக்கிறது. , இன்னும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நான் பாடாதது வருத்தமளிக்கிறது.
எனது கடின உழைப்பின் மூலம் விரைவில் ரஹ்மான் சார் இசையில் பாடுவேன்” என்று நம்பிக்கையோடு கூறுகிறார் அனந்து.
ஆனந்த வாழ்த்துகள் அனந்து!