ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரிக்க, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், சமுத்திரக்கனி, யுவினா பார்த்தவி, யோகி பாபு, அழகம்பெருமாள், அஜய் நடிப்பில் ஆண்டனி பாக்யராஜ் எழுதி இயக்குனராக அறிமுகமாகி இருக்கும் படம்.
நன்றாகப் படிக்கும் பள்ளி மாணவி ஒருத்தி ( யுவினா பார்த்தவி) , பள்ளியில் பரிசு பெறும்போது , தன் தந்தை வெளிநாட்டில் இருப்பதாகச் சொல்கிறாள் . ஆனால் அது பொய். அவர் (ஜெயம் ரவி) ஜெயிலில் இருக்கிறார் . ஜெயிலில் இருக்கும் அப்பாவை மகள் வெறுக்கிறாள் . பாட்டி, சித்தப்பாக்கள், சித்திகள், அத்தை மாமா சொல்லியும் அவளுக்கு வெறுப்பு குறையவில்லை.
மகளின் கோப முகத்தைப் பார்க்க விரும்பாமல் அப்பாவும் ஒரு முறை கூட பரோலில் வராமல் வருடங்களைக் கடத்துகிறார் . ஒரு நிலையில் பரோலில் வருகிறார் . மகள் அவளை வெறுக்கிறாள் . பரோலில் பாதுகாப்பாக வரும் கான்ஸ்டபிள் ( யோகி பாபு) கைதியுடன் நட்பாகப் பழகுகிறார்
கைதி பரோலில் வந்த நேரத்தில் ஒரு அரசியல்வாதியை (அழகம்பெருமாள்) கொலை செய்ய அவருக்கு கீழே இருக்கும் அரசியல்வாதி (அஜய்) ஆள் அனுப்புகிறார் .
பரோல் கைதியின் மகளை ஒருவன் ஆபாசமாகப் பேச, அவனை கைதி அடிக்கிறார்.
ஒருநிலையில் கொலையும் நடக்க, ஆபாசமாகப் பேசியவனும் காணாமல் போகிறான் . செய்யாத குற்றத்துக்காக சஸ்பென்ஷனில் இருந்து மீண்டும் பணிக்குத் திரும்பி இருக்கும் கோபக்கார பெண் இன்ஸ்பெக்டர் ( கீர்த்தி சுரேஷ்) கைக்கு வழக்கு போகிறது
நடந்தது என்ன என்பதே படம்.
ஒரு கைதியின் டைரி படத்தை நினைவு – படுத்தும் திரைக்கதை
வித்தியாசமான கெட்டப்பில் நடுத்தர வயது மனிதனாக , உடம்பை ஏற்றி , கதாபாத்திரத்துக்கு கனமும் ஏற்றி நடித்திருக்கிறார் ஜெயம் ரவி, செண்டிமெண்ட் காட்சிகளில் மனம் கனக்க வைக்கிறார் .
ஆணவக் கொலையில் இன்னொரு கோர முகத்தைச் சொல்லும் கதை . ஆணவக் கொலை மனோபாவத்தோடு அதிகாரமும் அரசியலும் சேர்ந்தால் என்ன ஆகும் என்பதைச் சொல்லும் திரைக்கதை.
பேரல்லல் கட்டிங் பாணியில் நடப்பு சம்பவங்களையும் பழைய சம்பவங்களையும் அழகாக சொன்ன விதத்தில் கவர்கிறார் இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ். உண்மையில் பேரல்லல் கட்டிங் மிக சிறப்பான உத்தி . ரொம்ப நாளைக்குப் பிறகு அதைப் பார்ப்பதில் மகிழ்ச்சி . எடிட்டர் ரூபனுக்கும் பாராட்டுகள்.
அதே போல கைதிக்கும் காவல் பெண் அதிகாரிக்கும் இடையே கடைசியில் காதல் புன்னகையைக் காட்டி நம்மை கலவரப்படுத்தாமல், கீர்த்தி சுரேஷாகவே இருந்தாலும் நோ லவ் என்று ஒன்லி டியூட்டி போட்டதற்காவும் இயக்குனரைப் பாராட்டலாம்
ஜி வி பிரகாஷ் இசையில் பாடல்கள் சிறப்பு . சாம் சி எஸ் பின்னணி இசை ஒகே ராகம் . (எழுத்துப்பிழை அல்ல)
செல்வகுமாரின் ஒளிப்பதிவும் இயக்குனரின் ஃபிரேமிங்கும் சிறப்பு .
கீர்த்தி சுரேஷ் சிறப்பாக நடித்துள்ளார் . அழகம்பெருமாள் அசத்துகிறார். யோகிபாபு சிரிக்க வைக்கிறார்.
பேச்சு மாற்றுத் திறனாளிகளுக்கான சைகை மொழியை சிறப்பாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள்
தயாரிப்புத் தரமும் சிறப்பு .
அப்பா மீதான மகளின் கோபத்துக்கு நியாயமான காரணமின்மை , தன் போன்ற ஒருவன் என்று தெரிந்தும் கைதியை வில்லன் போலவே பார்க்கும் பெண் போலீஸ் அதிகாரி ,சாதி வெறி பிடித்த அயோக்கியன் என்று தெரிந்தும் ‘போலீஸ் உயர் அதிகாரியைக் காப்பாற்றுவது கடமை’ என்ற உணர்வுக்கும்அப்பாற்பட்டு, சத்தியவானைக் காப்பாற்றும் சாவித்திரி போல அந்த பெண் போலீஸ் அதிகாரி துடிப்பது , இரண்டாம் பகுதியில் திரைக்கதையில் தொய்வு என்பன போன்ற ஒரு சில குறைகள் இருந்தாலும்
ஜெயம் ரவியின் நடிப்பு ,
படமாக்கல்,
பேரல்லல் கட்டிங் தரும் சிலிர்ப்பு..
இவற்றால் சத்தமாக ஒலிக்கிறது சைரன்