இந்தியன் சினி மேக்கர்ஸ் சார்பில் ஜெயக்குமார் தயாரித்து பாடல் எழுதி இசை அமைத்து முக்கியக் கதாபாத்திரம் ஒன்றிலும் நடித்து , தனது ஜேகே நிறுவனம் மூலமாகவே இசையையும் வெளியிட, ,
V.R.விநாயக், நிதின் சத்யாபவர்ஸ்டார் சீனிவாசன் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்க, இவர்களுக்கு ஜோடியாக புதுமுக நாயகி சௌமியா, லீஷா மற்றும் தீபா ஆகியோர் நடிக்க,
கே.பாக்யராஜின் அன்புக்கும் பாத்திரமானவரும் அவரது உதவியாளருமான இயக்குனர் கவி காளிதாசிடம் உதவியாளராகப் பணியாற்றிய V.B.காவியன் எழுதி இயக்கி இருக்கும் படம் ‘சிரிக்க விடலாமா ?’
முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில், ஆனந்தராஜ், மகாநதி சங்கர்,
சந்தான பாரதி, கோவை செந்தில் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ரமேஷ் கமல் மற்றும் அக்சயா ஆனந்த் நடனம் அமைத்திருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் முத்து மனோகர், எடிட்டர் முத்து கொடப்பா.
படத்தின் நாயகனான வி ஆர் விநாயக் கேரளாவைச் சேர்ந்தவர் . களவு செய்யப்போறோம், ராஜாவுக்கு ராஜா, சேவல் சண்டை முதலிய படங்களில் இப்போது ஹீரோவாக நடித்துக் கொண்டு இருக்கிறார்
படத்தில் பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குநர் கே.பாக்யராஜ், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இசையமைப்பாளர் எஸ் எஸ் குமரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய வி ஆர் விநாயக் “தமிழ் நாடு என்னை வாழவைக்கும்…”என்றார்.
“அடேயப்பா … சி எம் ஆவது எவ்வளவு கஷ்டம், அடிதடி, சண்டை…” என்று காலச் சூழலுக்கு ஏற்ப நகைச்சுவையாகப் பேச ஆரம்பித்து சிரிக்க வைத்த பவர் ஸ்டார், சீனிவாசன்
“நானும் ஒரு படத்தில் சி.எம் மா நடிச்சுருக்கேன். கே பாக்யராஜ் என் நண்பராக நடித்திருக்கிறார். இந்த சிரிக்க விடலாமா படம் முழுக்க முழுக்க நகைச்சுவையாக எடுக்கப்பட்டு உள்ளது .
இந்தப் படத்துக்குப் பிறகு என் மார்க்கெட் மேலும் உயரும். கண்ணா லட்டு திங்க ஆசையா படத்திற்குப் பிறகு, சிரிக்க விடலாமா படம் தெறிக்க விடும்.” என்றார்.
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும்போது, ‘ ஹீரோவுக்கு பில்ட் அப் சீன் யோசிச்சே பல படைப்பாளிகள் காணாமல் போய்விட்டார்கள்.
ஆனால், ஹீரோக்கள் 30 லிருந்து 100 கோடிகள் சம்பளம் வாங்க ஆரம்பித்துவிடுகிறார்கள். அவர்களது ரசிகர்கள் அவர்களுக்கு கட் அவுட் வைத்து பாலாபிஷேகம் செய்கிறார்கள்.
ஆனால் தியேட்டரில் ஆயிரம் ஆயிரத்து ஐநூறு என்று டிக்கெட் விலை வைக்கிறார்கள். எப்படி ரசிகனால் படம் பார்க்க முடியும்?
ஆக, பெரிய நடிகர்கள் அவர்களது ரசிகர்களுக்கே விசுவாசமாக இருக்கமாட்டேன் என்கிறார்கள். எந்த பெரிய நடிகராவது ”நான் என் ரசிகனை கஷ்டப்படுத்த விரும்பவில்லை .
எனவே அரசு நிர்ணயித்த கட்டணத்தில் தான் டிக்கெட் விற்கவேண்டும்” என்று சொல்கிறார்களா? இதுல அவங்களுக்கு நல்லா சம்பாதிச்சுட்டு ரிடையர்ட் ஆகும் போது முதலமைச்சர் கனவு வேற.
தங்களது ரசிகர்களுக்கே விசுவாசமாய் இருக்க முடியாதவர்கள் எப்படி முதல்வராகி ஒட்டுமொத்த மக்களுக்கும் விசுவாசமாய் இருப்பார்கள்?
தியேட்டர் டிக்கெட் விலை அதிகம் என்பதால் தான் தமிழ் ராக்கர்ஸில் படத்தை விடுகிறான்… தமிழ் ராக்கர்ஸை பொதுமக்களும் கொண்டாடுகிறார்கள்.
ரசிகனுக்கும் திரையிடுவதற்குமான இடைவெளியை நாம் களைய வேண்டும்… அதை விடுத்து, யார் மீதும் குற்றம் சுமத்திக் கொண்டிருப்பதில் என்ன பயன்?
தன்னை வைத்து படமெடுத்த தயாரிப்பாளர்களையே காப்பாற்ற முடியாத விஷால், எப்படி தயாரிப்பாளர் சங்கத்தைக் காப்பாற்றப் போகிறார்?
நல்லவேளை, எடப்பாடி பழநிச்சாமி முதல்வராகி விட்டார், இல்லாவிட்டால் விஷால், கவர்னர்ட்ட போயி ‘நான் முதல்வராகி தமிழ்நாட்டைக் காப்பாற்றுகிறேன்’ என்று சொன்னாலும் சொல்லி இருப்ப்பார்.
ரசிகர்களே! தயவுசெய்து பெரிய நடிகர்களை நம்பாதீர்கள்… புதுமுகங்கள் நடித்த நல்ல படங்களுக்கு ஆதரவு கொடுங்கள்.
என் எஸ் கேவிலிருந்து இன்று வரை நகைச்சுவை நடிகர்கள்தான் உங்களைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறார்கள்.
அந்த வகையில் உங்களைச் சிரிக்க வைக்கும் படமாக சிரிக்க விடலாமா படத்தை எடுத்திருக்கிறார்கள்..வெற்றி பெற வாழ்த்துகள்.” என்றார்.
கே.பாக்யராஜ் பேசும் போது, ” எல்லோரும் தியேட்டருக்கு வந்து படம் பார்ப்பதைத்தான் விரும்புகிறார்கள்… குறிப்பாக இளைஞர்கள் அப்படிதான் ஆசைப்படுறாங்க .
தியேட்டரில் டிக்கெட் விலை கூடிவிட்டதால் குடும்பஸ்தர்களாக வந்து படம் பார்க்க இயலவில்லை என்பது உண்மைதான்.
ஆனாலும் நாம நல்ல படமா எடுக்காம, இதை எல்லாம் குறை சொல்லாம என்ன பலன் ? நல்ல படமாக எடுத்தால் இப்பவும் ஓடத்தான் செய்கிறது…
சிரிக்க விடலாமா இயக்குநர் காவியன்,
எனது சிறந்த உதவியாளர்களுள் ஒருவரான காளியின் உதவியாளர்.
ஆகவே சிறப்பாக பணியாற்றியிருப்பார்.
படக் குழுவுக்கு வாழ்த்துகள் ” என்றார் .