வைஜயந்தி மூவீஸ் மற்றும் ஸ்வப்னா சினிமா சார்பில் அஸ்வினி தத் மற்றும் ஸ்வப்னா தத் தயாரிக்க, துல்கர் சல்மான், மிருணாள் தாகூர், எர்லகட்டா சுமந்த் குமார் , ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ் , சச்சின் கடேகர், பூமிகா, ரோகிணி , கவுதம் மேனன், வெண்ணிலா கிஷோர், முரளி சர்மா நடிப்பில் ராஜ்குமார் கன்டமுடியுடன் இணைந்து திரைக்கதை எழுதி, ஹனு ராகவபுடி இயக்கி இருக்கும் படம்.
1980களின் மத்தியில் லண்டனில் படிக்கிற – இந்தியாவை வெறுக்கிற- பாகிஸ்தானிய மாணவி அஃப்ரினுக்கு (ராஷ்மிகா மந்தனா) அவரது தாத்தாவும் பாகிஸ்தான் ராணுவ முன்னாள் பிரிகேடியருமான தாரிக் ( சச்சின் கடேகர்) ஒரு முக்கிய வேலை கொடுத்து விட்டு இறக்கிறார் . அந்த வேலையை அஃப்ரின் செய்யாவிட்டால் தாத்தாவின் சொத்து பேத்திக்கு வராது . 1960 களின் மத்தியில் இந்திய ராணுவத்தில் லெஃப்டினன்ட் ஆக இருந்த ராம் என்பவர் (துல்கர் சல்மான்) ஹைதராபாத்தில் நூர்ஜஹான் பேலஸில் இருந்த சீதா மகாலட்சுமி (மிருணாள் தாக்கூர்) என்பவருக்கு எழுதிய — இரண்டு முறை தபாலில் அனுப்பியும் திரும்ப வந்து விட்ட கடிதத்தை – எப்படியாவது நேரில் போய் ஆளைக் கண்டு பிடித்துக் கொடுக்க வேண்டும் என்பதுதான் அந்த வேலை .
இந்தியாவை- இந்தியர்களை வெறுக்கும் அஃப்ரின் வேறு வழியின்றி ஹைதராபாத் வந்தால், நூர்ஜகான் பேலஸ் கல்வி நிலையமாக மாறி விட்டிருக்கிறது. அரண்மனையாக இருந்த காலத்தில் அங்கே சீதா மகாலட்சுமி என்ற பெயரில் யாரும் இருந்ததாக யாருக்கும் தெரியவில்லை . தொடர் தேடலில் அவள் சந்திக்கும் நபர்கள் மூலம் கவிதையாக காவியமாக விரியும் ராம் – சீதா மகாலட்சுமி காதல் கதையும் , எதிர்பாராத திருப்பங்களும் அஃப்ரினுக்கு ஏற்படும் அதிர்ச்சியும் நெகிழ்ச்சியுமான நிகழ்வுகளுமே சீதாராமம் .
அற்புதமான அட்டகாசமான காவியமான படம் .
கதை திரைக்கதை வசனம் இயக்கத்தில் இருந்து எல்லா துறைகளும் சிறப்பாக செயல்பட்டு உருவாக்கி இருக்கும் படம் .
அண்மையில் இப்படி ஒரு ஆழமான முழுமையான பரபரப்பான விறுவிறுப்பான கம்பீரமும் கவிதையுமான சிறப்பான 360 டிகிரியும் யோசித்து எழுதப்பட்ட திரைக்கதையை கண்டது இல்லை . அற்புதமாக எழுதி மிகத் தரமாக சிறப்பாக படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஹனு ராகவபுடி.
சீதா மகாலக்ஷ்மியை சந்திக்க ராமும் அவரது நண்பனும் நூர்ஜகான் பேலசுக்குள் நுழைகிற காட்சியின் நாடகத்தன்மை லாஜிக் மீறல் உட்பட ஓரிரு காட்சிகள் தவிர வேறு எந்தக் குறையும் சொல்ல முடியாத எழுத்தும் இயக்கமும் !
இந்தியா பாகிஸ்தான் என்று இரண்டு நாடுகள் இந்து முஸ்லிம் என்று இரண்டு மதங்களைப் பற்றிப் பேசுகிற படம் என்றாலும் தேசபக்தி என்ற பெயரில் கீழ்மையான உணர்ச்சிகளைத் தூண்டுகிற படத்தை எடுக்காமல் இரண்டு தரப்புகளையும் பேலன்ஸ் செய்து காட்சிகள் வைத்து இருக்கும் பக்குவத்தை மேன்மையை எவ்வளவு பாராட்டினாலும் தகும் . இயக்குனருக்கும் இணைந்து திரைக்கதை எழுதிய ராஜ்குமார் கன்டமுடிக்கும் மனப்பூர்வமான வாழ்த்துப் பூங்கொத்து . HAIL !
துல்கர், ராமாக படம் முழுக்க ஜொலிக்கிறார் . முழுமையான பங்களிப்பு. . அற்புத நடிப்பு .
பழைய இந்தி நடிகை ஷர்மிளா தாகூரை நினைவு படுத்தும் நாயகி மிருணாள் தாகூர் படம் பார்க்கும் அனைவராலும் காதலிக்கப்படும்படியான நடிப்பைக் கொடுத்துள்ளார் . அதற்கு கதாபாத்திர வடிவமைப்பும் காரணம் .
எர்லகட்டா சுமந்த் குமார் , ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ் , சச்சின் கடேகர், பூமிகா, ரோகினி , கவுதம் மேனன், வெண்ணிலா கிஷோர், முரளி சர்மா என்று எல்லோரும் அசத்தி இருக்கிறார்கள் . வெண்ணிலா கிஷோர் காமெடியில் ஸ்கோர் செய்கிறார் . மிக அட்டகாசமான வசனம் மற்றும் பாடல்களால் திரைப்படைத்தை துலக்கி அலங்கரித்து பல்லகில் ஏற்றி இருக்கிறார் மதன் கார்க்கி . (நம்ம ஊருக்கு சீதா ராமம் என்ற பெயர்தான் அன்னியமாக இருக்கிறது )
விஷால் சந்திரசேகர் இசையில் பாடல்கள் இனிமை என்றால் பின்னணி இசை கொடுக்கும் உணர்வுக் கூட்டல் அபாரமானது . மிக சிறப்பான பங்களிப்பு.
பி எஸ் வினோத் மற்றும் ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு நம்மை திரைக்குள் இழுத்துப் போட்டு நடப்பதை எல்லாம் அருகில் இருந்து கவனிக்கும் ஒரு கதாபாத்திரம் ஆக்கி விடுகிறது . அப்படி ஒரு பொருள் பொதிந்த ஒளிப்பதிவு. தேவையான எதையும் விடாமல் தேவையற்ற எதையும் வைக்காமல் எண்ணெய் கொட்டிய வழுக்குப் பாறையில் கண்ணாடிக் குடுவையை எடுத்துக் கொண்டு நடப்பவனின் சிரத்தையோடு எடிட் செய்து இருக்கிறார் கோட்டகிரி வெங்கடேஸ்வர ராவ்.
ராணுவக் காட்சிகள் (குறிப்பாக ராணுவ வீரர்கள் உறங்கும் இடம் ) அரண்மனைக் காட்சிகள் உட்பட எல்லாவற்றிலும் கலை இயக்கம் பிரமாதம். உடைகளும் அப்படியே .
1960 கள் மற்றும் 1980 களின் காலகட்டத்தைக் கொண்டு வருவதில் அனைத்துத் தொழில்நுட்பத் துறையினருமே பின்னிப் பெடல் எடுத்து இருக்கிறார்கள். ஒரு காட்சியில் நடிப்பு, இயக்கம், இசை , ஒளிப்பதிவு, படத் தொகுப்பு, காட்சியின் நோக்கம் மற்றும் தேவை இவை யாவும் சிறப்பாக அமைந்தால் அதை ஒரு COMPLETE SCENE என்று சொல்வார்கள் .
இந்தப் படத்தில் வரும் ‘பாத் டப் உடன்கட்டை’ அப்படி ஒரு சீன்.
அது போல மேலும் நிறைய COMPLETE SCENEகளை இந்தப் படத்தில் பார்க்க முடிகிறது .
அட அவ்வளவு ஏன் , இந்தப் படமே ஒரு COMPLETE MOVIE . கண்ணை மூடிக் கொண்டு படத்துக்குப் போங்கள். இதயம் கனிந்து உருகி நெகிழ்ந்து வெளியே வருவீர்கள் .
காதல் என்பதை கழுத்துக் கீழும் கால் முட்டிக்கு மேலும் கண்டு பிடித்துக் கொண்டு இருக்கும் இன்றைய சினிமா உலகின் குறிஞ்சி மலராக வந்திருக்கும் இந்தப் படத்தை பார்க்கும் வாய்ப்பைப் பெறுவீர்கள் .
உடல் இச்சையால் முதல் தொடுகை நிகழாத உன்னத காதலை தரிசிக்கும் உன்னத வாய்ப்பு இந்தக் கால டீன் ஏஜ் ஆட்களுக்குக் கிடைக்கும் .
சீதா ராமம் ….. காதல் யாகம்