‘சிவாஜி மணி மண்டபம் ; நடிகர் சங்க அவமானம்’ — விஷால்

IMG_0456

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் கட்டுவதாக சட்டப் பேரவையில் அறிவித்த முதல்வர் ஜெயலலிதா அதில் நடிகர் சங்கத்தையும் மென்மையாக — ஆனால் நியாயமாக விமர்சனம் செய்து இருந்தார் .

“நடிகர் சங்கம் கட்ட நான் இடம் வழங்கினேன் . அதே நேரம் அந்த இடத்தில் உள்ள நீதிபதிகள் குடியிருப்புக்கு,  தனி வழி அமைக்க ஆகும் செலவான நான்கு லட்சத்து இருபதாயிரம் ரூபாயை நடிகர் சங்கம் வழங்க வேண்டும் என அரசால் கேட்டுக் கொள்ளப் பட்டது. ஆனால் இரண்டு லட்ச ரூபாய் மட்டுமே தர முடியும் என்று நடிகர் சங்கம் சொன்னது .

அதையும் ஏற்று மிச்ச தொகையான இரண்டு லட்சத்து இருபதாயிரம் ரூபாயை அரசே ஏற்றுக் கொண்டது . பிறகு அந்த இடத்தை சுற்றி சுற்றுச் சுவர் ஒன்றையும் அரசே எழுப்பியது. .” என்று கூறி இருக்கும் ஜெயலலிதா  ,

தொடர்ந்து ” மணிமண்டபததை நாங்களே கட்டுகிறோம் என்று நடிகர் சங்கம் சொன்னதால்தான் தமிழக அரசு மணி மண்டபம் அமைக்கும் நடவடிக்கையில் இறங்கவில்லை . அரசு  கட்டித் தர வேண்டும் என்று அப்போதே நடிகர் சங்கம் கேட்டு இருந்தால் அப்போதே சஅரசு சிவாஜி மணி மண்டபத்தை கட்டி இருக்கும் ” என்று, 

நேரடியாக நடிகர் சங்கத்தை விமர்சித்ததோடு , இந்த  பதிமூன்று ஆண்டுகால கால தாமதத்துக்கு நடிகர் சங்கமே காரணம் என்பதையும் தெள்ளத் தெளிவாக கூறி இருந்தார் .

IMG_0496

முதல்வரின் அறிவிப்பு வந்த உடன் இளையதிலகம் பிரபு முதல்வருக்கு நன்றி சொன்னார் . நடிகர் சங்கத்தின் பிரிவு அணிகள் பற்றிக் கேட்டபோது “எல்லோரும் ஒற்றுமையா இருக்கணும்” என்றார் . “எந்த அணிக்கு ஓட்டுப் போடுவீங்க?”  என்ற கேள்விக்கு “அது தேர்தல் சமயத்தில் பார்த்துக்கலாம்” என்றார் .

நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் , செயலாளர் ராதாரவி இருவரும் முதல்வருக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டனர்.

ஆனால் அதற்கும் முன்னரே விஷால் அணியைச் சேர்ந்த நாசர், கார்த்தி, மனோபாலா, குட்டி பத்மினி , ஜே.கே.ரித்தீஷ்,ஆகியோர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய விஷால் ” நடிகர் திலகத்துக்கு தமிழ அரசு மணி மண்டபம் கட்டும் என்று அறிவித்து இருக்கும் அம்மாவுக்கு நன்றி . நடிப்புக்கு உதாரணம் சிவாஜி . அவருக்கு மணிமண்டபம் கட்ட வேண்டியது நடிகர் சங்கத்தின் கடமை.

எம் ஜி ஆர் அய்யாவும் சிவாஜி சாரும் வெயிலிலும் மழையிலும் கஷ்டப்பட்டு நாடகம் நடத்தி வியர்வை சிந்தி சம்பாதித்துக் கொடுத்த காசில் உருவானது நடிகர் சங்கக் கட்டிடம் . அதை இடிச்சாச்சு . இப்பவும் அரசேதான் சிவாஜிக்கு மணி மண்டபம் கட்டுது ”  என்றார்

உடனே நான் விஷாலிடம் ” சிவாஜிக்கு மணி மண்டபம் கட்ட ஆகும் செலவு என்பது நடிகர் சங்கத்தைப் பொறுத்தவரை  கை விரலில் உள்ள இற்றுப் போன நகத்தை கிள்ளிப் போட ஆகும் செலவுதான். நடிகர் சங்கம் கட்ட வேண்டிய மணி மண்டபத்தை அரசு கட்டுகிறது .(ஜெயலலிதாவும் இதை அழகாகக் கோடிட்டுக் காட்டி இருக்கிறார் ) இது நடிகர் சங்கத்துக்கு பெருமையா? இல்லை அவமானமா ?” என்றேன்.

உடனடியாகப் பதில் சொன்ன விஷால்

IMG_0507

“ரொம்ப சரியான கேள்வி.  நான் மட்டும் நடிகனாக இல்லாமல் உங்களைப் போல பத்திரிக்கையாளனாக உங்கள் இடத்தில் உட்கார்ந்து இருந்திருந்தால் இதே கேள்வியைத்தான் நானும் கேட்டு இருப்பேன் .

 தமிழக அரசு கட்டுவதில் பெருமைதான் . ஆனால் நடிகர்கள் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குகிறோம் . ஆளுக்கு சில லட்சங்கள்  போட்டாலும் மணி  மண்டபத்தை நடிகர் சங்கமே கட்டி இருக்க முடியும் . எனவே நடிகர் சங்கம் கட்டாதது அவமானம்தான்” என்றார் .

அடுத்த கேள்வியாக நான் “அவமானம்தான் என்று நீங்களே ஒத்துக் கொண்டீர்கள் . அதற்குப் பரிகாரமாக தமிழக அரசோடு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுக் கொண்டு,  அரசு கட்டி முடிக்கும் மணி மண்டபத்தில் நடிகர் சங்கத்தின் பங்களிப்பாக ஏதாவது கூடுதலாக செய்யும் எண்ணம் இருக்கிறதா ?” என்றேன் .

“இதற்குப் பதிலை நான்  நடிகர் சங்கத் தலைவராக வந்ததும் சொல்கிறேன் ” என்றார் விஷால் .

“வாழ்த்துகள் ” என்றேன் . (வேறு வழி ?)

இந்த விசயங்களையே பல சக பத்திரிகையாளர்களும் முக்கியத்துவம் கொடுத்து எழுதி இருப்பது குறிப்பிடத்தக்க விஷயம் .

தொடர்ந்து ” லிங்கா பட விவகாரத்தால் நஷ்டப்பட்ட விநியோகஸ்தர்கள் , அந்தப் படத்தை வெளியிட்ட வேந்தர் மூவீஸ் நிறுவனத்துக்கு எதிரப்பு தெரிவிக்கும் விதமாக , இப்போது அதே வேந்தர் மூவீஸ் தயாரித்து இருக்கும் உங்கள் பாயும்புலி படத்துக்கு,  ரெட் கார்டு போட்டு இருக்கிறார்களாமே ” என்று  சக பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்க ,

IMG_0517

“பாயும்புலி நான் நடிச்ச படம்தான். தயாரிச்ச படம் இல்ல . அதனால அது அந்த தயாரிப்பாளர்கள் பிரச்னை . அவங்க பாத்துக்குவாங்க ” என்றார் .

தெளிவு !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →