தெருக்கூத்து, நாடகம், சினிமா, தொலைக்காட்சித் தொடர்கள், ஆன்மீக சீசன் கேசட்டுகள், சினிமா பாடல்களின் டியூன்களை கொலை செய்து வரும் அரசியல் கட்சிக் கொள்கை விளக்கப் பாடல்கள்….
நம்மைப் பொறுத்தவரை இசைப் பாடல்களுக்கான எல்லைகள் இவ்வளவுதான்.
ஆனால் உலக அளவில் பல்வேறு கருத்தாக்கங்களைத் தூக்கிப் பிடிக்கும் வகையில் உருவாகும், தனிப்பட்ட ஆடியோ மற்றும் வீடியோ இசை ஆல்பம்களுக்கான வீச்சு புற ஊதாக்கதிர்களின் அலை நீளம் போல மிக அதிகம் .
பாப் உலகின் முடி சூடா மன்னனான மைக்கேல் ஜாக்சன் பாடியது ; ஆடியது எல்லாமே தனிப்பட்ட இசை ஆல்பம்களுக்காகத்தானே தவிர, எந்த சினிமாவுக்கும் டிராமாவுக்கும் இல்லை .
ஆனாலும் தமிழில் தனி இசை ஆல்பம்களுக்கான முயற்சிகள் கம்மி .
ஆனாலும் ஆனாலும் அவ்வப்போது இந்த முயற்சிகள் நடக்காமலும் இல்லை .
அந்த முயற்சி வரிசையில் லேட்டஸ்ட்….
மீடியா ஃபை மற்றும் ஸ்டேட்ரஜிக் கேப்பிட்டல் வென்சர்ஸ் தயாரிக்க, தயா சைரஸ் என்பவரின் இசையில் யுகபாரதியின் பாடல்களில் என்.அருண்குமாரின் படத் தொகுப்பில் கே.சி.ரமேஷின் ஒளிப்பதிவில் இசை அமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா குரலில் , அதே ஸ்ரீகாந்த் தேவா , தயா சைரஸ் மற்றும் டுபாக்கீஸ் நடிக்க , எஸ்.மகேஷின் கருத்தாக்கம் மற்றும் இயக்கத்தில் வரும் ‘ஸ்மைல் பிளீஸ்’ ஆல்பம் .
இந்த ஆல்பத்துக்காக ஸ்ரீகாந்த் தேவா பாடி நடிக்க , பல்வேறு மனிதர்களின் புன்னகையை வெளிப்படுத்தும் வகையில் மலேசியா மற்றும் இந்தியாவில் படமாக்கப்பட்ட ”ஸ்மைல் பிளீஸ்….” என்ற பாடலை திரையிட்டுக் காட்டினார்கள் . நன்றாக இருந்தது .
”ஆல்பத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள் இடம்பெறுகின்றன . இன்னும் நன்கு பாடல்கள் படமாக்காப்பட இருக்கின்றன ” என்கிறார் தயா சைரஸ் .
இயக்குனர் மகேஷ் “.சினிமாவுக்குத் தவிர தனிப்பாடல் எழுதுவது இல்லை என்ற கொள்கையில் இருந்த யுகபாரதி நான் சொன்ன கான்செப்ட் பிடித்துப் போய் பாடல் எழுதிக் கொடுத்தார். நீங்கள் பார்த்த இந்தப் பாடலுக்கான புன்னகைகளை நீண்ட பயணம் செய்து படம் பிடித்தோம்.
இப்படி ஒவ்வொரு பாட்டுக்கும் ஒவ்வொரு கான்செப்ட் வைத்து உருவாக்குகிறோம் . திரைப்பட இயக்குனராக ஜெயித்த பிறகும் கூட இது போன்ற தனிப் பாடல் ஆல்பங்களை தொடர்ந்து செய்வதே என் ஆசை” என்கிறார்.
ஸ்ரீகாந்த் தேவா பேசும்போது ” இயக்குனர் மகேஷ் எனது பால்யகாலந்தொட்ட நண்பர். அவர் மிகச்சிறந்த திறமைசாலி. அதே போல இசையமைப்பாளர் தயா சைரஸ் மிக சிறந்த இசை அமைப்பாளர் . நான் பாடி இருக்கும் இந்த ஆல்பம் ஹிட் ஆகி அவர்களுக்கு நல்ல படங்கள் கிடைக்க வேண்டும் என்பதே என் ஆசை ” என்றார் .
ஆமெனில் அப்படியே ஆகட்டும் !