சோன்பப்டி @ விமர்சனம்

soan 2
கோல்டன் மூவி மேக்கர்ஸ் சார்பில் எஸ்.கலைவாணி கதை எழுதி தயாரிக்க,

வழக்கு எண், ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படங்களில் நடித்த ஸ்ரீ , மற்றும் பிரியா, நிரஞ்சனா ஆகியோர் நடிக்க , சிவானி என்ற அறிமுக பெண் இயக்குனர்  திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கும் படம் சோன்பப்டி .

ரசனைக்கு இனிக்குமா இந்த சோன்பப்டி? பார்க்கலாம்
 
மூன்று நெருக்கமான நண்பர்கள் கொண்ட இளைஞன் (ஸ்ரீ) இந்தப் படத்தின் நாயகன் . அவனது  நண்பர்களில் ஒருவன் ஈட்டி எறியும் போட்டியில் ஒலிம்பிக் போகும் தகுதிச் சுற்றில்,  வெற்றி பெறுவதற்கான  தேர்வை எதிர்பார்த்து இருப்பவன்.

நாயகனுக்கு ஒரு பெண்ணோடு (நிரஞ்சனா) திருமணம் நிச்சயம் ஆகிறது. இருவரும் சந்தித்து பல இடங்களுக்கும் போகிறர்கள். ஆனால் நாயகன் சொன்ன நேரத்துக்கு வராத பழக்கம் உள்ளவனாக இருக்கிறான். ஒரு நிலையில் அவனது அந்தப் பழக்கத்தால் நாயகிக்கு எதிர்பாராத ஆபத்து ஏற்பட்டு அதிர்ஷ்டவசமாக தப்பிக்கிறாள் . இருவருக்குள்ளும் சண்டை வருகிறது . பின்னர் சமாதானமும் வருகிறது.

அந்த சந்தோஷத்தில் கல்யாண நிச்சய ஜோடி,  நண்பர்களுடன் ஷாப்பிங் போய்விட்டு வீட்டுக்குக் கிளம்புகையில் , நாயகன் நாயகி இருவரும் பயணிக்கும் காரில்  யாரென்றே தெரியாத ஒரு சிறுவன்  இருக்கிறான் . அவனிடம் அவனது இருப்பிடம் கேட்டு அவனது வீட்டில் சேர்க்க  இருவரும் முயல, சிறுவன் சொல்வது எல்லாம் தவறான தகவல்களாகவே இருக்கின்றன.

இந்த நிலையில் நண்பர்களில் ஒருவனான அந்த ஈட்டி எறியும் ஒலிம்பிக் லட்சிய வீரன் , தனது ஏ டி எம் கார்டை வைத்து பணம் எடுக்க,  அவனது அக்கவுண்டில் ஒன்றரை கோடி பணம் போடப்பட்டு இருப்பது அப்போதுதான் அவனுக்கு தெரிய வருகிறது. அதிர்ச்சியுடன் அவன் வெளியே வரும் அடுத்த நிமிடம் அவனை போலீஸ் காரணம் சொல்லாமலே கைது செய்கிறது .

ஷாப்பிங் செய்து விட்டு நாயகனும், நாயகியும்  காரில் கிளம்பிய உடன்  நாயகனின் மற்ற இரு நண்பர்களும் கடத்தப்படுகின்றனர் . அடுத்து நாயகன் நாயகியும் காரில் இருக்கும் சிறுவனோடு கடத்தப்படுகிறார்கள்

எல்லாரையும் கடத்தி வைத்துக் கொள்ளும் ஒரு ரவுடி  (பெசன்ட் ரவி),    சிறுவனிடம் வேறொரு பெண் பற்றி விசாரிக்க, சிறுவன் போன் செய்ததன் பேரில்,  அந்தப் பெண்ணும் (பிரியா) வருகிறாள் . 

‘நாளை மதியம் வரை எல்லோரும் அமைதியாக  இருந்தால் யாருக்கும் எந்த பிரச்னையும் இல்லாமல் வீட்டுக்குப் போகலாம்’ என்று மிரட்டி விட்டு அந்த ரவுடி போகிறான் .

எல்லோரும் திரு திருவென்று விழிக்க , புதிதாக வந்த பெண் விளக்குகிறாள் .

soan 1சிறுவனின் வீட்டருகே இருக்கும் பெண் அவள். அவர்களுக்குள் நட்பு இருக்கிறது . சிறுவனின் தந்தைக்கு வரும் போனில் அடிக்கடி  ஒரு கிராஸ் டாக் வருகிறது. அந்த போனில் தானாகவே குரல் பதிவாகும் வசதியும் இருக்கிறது . அப்படி ஒரு முறை வரும் கிராஸ் டாக்கில்,  நாயகன் நண்பன் ஒலிம்பிக் செல்வதை தடுப்பதற்காக,  இன்னொரு  ஈட்டி எறியும் நபருக்கு வேண்டிய குழு கிரிமினல்தனத்தோடு செயல்படுவது தெரிகிறது .

நாயகனின் நண்பனை பிரச்னையில் சிக்க வைத்து  தகுதிச் சுற்றுக்குப் போக முடியாமல் செய்து விட்டால் அடுத்து அவர்களுக்கு வேண்டிய ஆள் போவான் என்பது  திட்டம் .

தந்தையின் போனை சிறுவன் விளையாட்டாக எடுத்து வந்து  தனது நட்புப் பெண்ணிடம் (பிரியா) கொடுக்க, அகஸ்மாத்தாக ரவுடி பேசியதைக் கேட்கும் அந்த பெண் , கிராஸ் டாக் பிரச்னை  புரியாமல்,  அதே போன் மூலம் தனது தோழி ஒருத்திக்கு போன் செய்து தான் இப்போது இருக்குமிடம் சொல்லி விசயத்தையும் விளக்கி என்ன செய்யலாம் என்று கேட்கிறாள்.

அந்தத் தோழி போலீஸ் ஸ்டேஷனுக்கு போக  சொல்ல, அதை கிராஸ் டாக்கில் கேட்கும் ரவுடி உடனே அங்கு வந்து , அந்தப் பெண்ணையும் சிறுவனையும் பிடிக்க முயல்கிறான் . அவனிடம் இருந்து தப்பிக்கும் வழியில்தான், சிறுவனை அந்தப் பெண் , கல்யாண நிச்சய ஜோடியின் காரில் ஏற்றி விட்ட கதையும் தெரிய வருகிறது .

தனது நண்பனை ஒலிம்பிக் அணியில் சேர விடாமல் தடுப்பதற்காகவே இந்த ஒட்டு மொத்த சதி வலை என்று உணரும் நாயகன் , தன் நண்பனை காப்பாற்றி ஒலிம்பிக் தகுதி சுற்றில் கலந்து கொள்ள வைத்தானா இல்லையா என்பதே , இந்த சோன்பப்டி .

பெண் பார்ப்பு வைபவம் , கல்யாணத்துக்கு முன்னே சந்திப்புகள் என்று பக்கா குடும்பக் கதையாக துவங்குகிறது படம் . திடீர் என்று நண்பர்கள் நால்வரும் ஆடிப் பாடி நட்பை உயர்த்திப் பிடிக்கும் பாடல் ஒன்று வருகிறது . அதற்கான நியாயம் இரண்டாம் பகுதியில் இருக்கிறது.

முதல் பாதியில் ஏன் இந்தப் பாடல் வருகிறது , ஆரம்பத்தில் லேட்டாக வரும் பழக்கத்தில் இருந்த நாயகன்….வருங்கால மனைவி சொன்ன பின்னரும் லேட்டாக வந்து,  அவள் ஆபத்து சூழ் நிலைக்கு ஆளாகக் காரணமாக இருந்தது ஏன் ?… காரில் உட்காரும் சிறுவன் ஏன் வேண்டும் என்றே கல்யாண நிச்சய ஜோடியிடம் பொய்யாக சொல்லி அலைக்கழிக்கிறான் போன்ற புதிர் முடிச்சுகளை,  இரண்டாம் பகுதியில் நிதானமாக அவிழ்க்கிறார் இயக்குனர் சிவானி .

ஒருவரின் ஈ மெயில் மற்றும் சமூக வலைதள கணக்குகளின் பாஸ் வேர்டு தெரியாமலே வைரசை அனுப்பி ஏப்படி அவரை ஹேக் செய்வது என்று சொல்லித் தருகிறார் .

 அந்த ஒலிம்பிக் லட்சிய விளையாட்டு வீரன் வேலை செய்யும் வங்கியில் யார் எங்கே என்ன தொகை பரிமாற்றம் செய்தாலும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ஒரு ரூபாய் அவனது கணக்கில் வந்து விழுமாறு புரோக்கிராமை மாற்றி எழுதி , அதையும்  அவனது அக்கவுண்டை ஹேக் செய்து அதன் மூலம் புரோகிராம் செய்து,  அவனே ஏமாற்றியது போல ஆதாரங்களை உருவாக்கி,  அவனை குற்றவாளியாக்கி அரெஸ்ட் செய்யும் அந்த ஐடியா … சிம்ப்ளி சூப்பர் சிவானி .

டைட்டில் முதல் கொண்டு படத்தின் முதல் பாதி வரை பல காட்சிகளில் திட்டமிட்டது போலவே வரும் அந்த வெள்ளை மற்றும் நீல நிற கலர் காம்பினேஷன்கள் கண்ணுக்கு அவ்வளவு குளிர்ச்சி.

சிறுவன் சம்மந்தப்பட்ட காட்சிகளில் பீட்சா , ஐஸ்க்ரீம், கேண்டீஸ் என்று ரசித்து ரசித்து காட்சிகளை எடுத்து இருக்கிறார் சிவானி.

சின்னச் சின்ன நகைச்ச்சுவைகள் அவ்வப்போது மென் சிரிக்க வைக்கின்றன.

soan 3

தாணு பாலாஜியின் ஒளிப்பதிவு இயக்குனருக்கு பெரும் துணை . தன்ராஜ் மாணிக்கத்தின் இசை .. குறை சொல்லவும் ஒன்றும் இல்லை.

ஸ்ரீ ஜஸ்ட் லைக் தட் நடித்து இருக்கிறார் . மற்ற நண்பர்களாக நடித்தவர்களும் அப்படியே . நிரஞ்சனா ஒகே ரகம். பிரியாவும் அவ்வண்ணமே .

ஓட்டத்துக்கு தேவை இல்லாத சில காட்சிகள் ஒரு பலவீனம். சில நல்ல விசயங்கள் அமைந்தும் அவற்றை எடுத்த விதம் இன்னும் சிறப்பாக இருந்திருக்க வேண்டும். உதாரணம் எம் ஜி ஆர் சரோஜாதேவி ஏரியா. காட்சியின் முக பாவங்களுக்கு அப்பற்பட்டு பின்னணிக் குரலில் பலரும் கொட்டி முழக்குவது ஒட்டவில்லை.

கிராஸ் டாக் மூலம் ஒரு குற்றம் தெரிய வருகிறது என்பது நிஜத்தில் நடந்திருக்கிற, ஆனால் சினிமாவில் அதிகம் பயன்படுத்தப்படாத ஒரு விசயம். அதை சொன்ன விதத்திலும் இன்னும் சுவாரசியம் கூட்டி திரைக்கதையை இன்னும் சிறப்பாக அமைத்து இருக்கலாம் .

சோன்பப்டி… சுகர் ஃபிரீ

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →