ஸ்ரீராம் இன்டர்நேஷனல் சார்பில் நடிகர் அர்ஜுன் தயாரித்துக் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்க , அவரது மகள் ஐஸ்வர்யா , சந்தன் குமார் , இயக்குனர் கே .விஸ்வநாத், நான் கடவுள் ராஜேந்திரன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் சொல்லி விடவா ? டிக்கட் சொல்லி விடலாமா? பார்க்கலாம் .
வெவ்வேறு தனியார் தொலைக் காட்சிகளைச் சேர்ந்த கேமரா மேன் சஞ்சய் ( சந்தன் குமார்) , நிகழ்ச்சித் தொகுப்பாளினி மதுரியா ( ஐஸ்வர்யா அர்ஜுன்).
சஞ்சய்க்கு அப்பா மட்டும் (ராஜேந்திரன்) மதுவுக்கு அப்பா அம்மா இறந்து போன நிலையில் அவளது தாத்தாவோடு (இயக்குனர் கே. விஸ்வநாத்) வாழ்க்கை நிகழ்கிறது .
மதுவின் அத்தைக்கு ( சுகாசினி) தன் மகனை மதுவுக்கு கல்யாணம் செய்து வைக்க விரும்பி நிச்சயதார்த்தமும் நடக்கிறது . இந்த நிலையில் கார்கில் போர் வர, மது, சஞ்சய் இருவரும் தங்கள் தத்தம் தொலைக் காட்சிகளுக்காக கார்கில் போர்க் களத்துக்கு செய்தி சேகரிக்கப் போகிறார்கள்.
போவது கார்கில் என்று தெரிந்ததும் அவர்களது உதவியாளர்கள் எல்லோரும் ( யோகி பாபு, போண்டா மணி, சதீஷ் , பிளாக் பாண்டி ) பயந்து ஓடி விட , இருவரும் இணைந்து செய்தி மற்றும் காட்சிகள் சேகரிக்கிறார்கள் .
போர்க்கள சூழலில் நடக்கும் சம்பவங்களில் ஒருவருக்கு ஒருவர் மேல் காதல் வருகிறது .
நிச்சயம் நடந்த நிலையில் காதலை சொன்னால் தவறாகத் தெரியும் ; இருக்கிற நட்பும் போய்விடும் என்று இருவருமே தயங்குகிறார்கள் .
இருவரும் போர்க்களத்தில் இருந்து உயிரோடு திரும்பினார்களா ? இல்லை எனில் நடந்தது என்ன?
ஆம் எனில் அவர்கள் காதல் பிழைத்ததா ? ஆம் எனில் நடந்தது என்ன ? இல்லை எனில் நிகழ்ந்தது என்ன என்பதே இந்த சொல்லி விடவா .
மீண்டும் அர்ஜுனின் தேச பக்திப் படம் . இப்படி எல்லாம் கன்னடத்தில் ஒரு படமாவது எடுங்க அர்ஜுன் . கன்னடர்களுக்கு தேச பக்தி வளர்ந்து, அவர்களது தமிழ் விரோத காட்டுமிராண்டித்தனம் ஒழியட்டும் .
ஏர்போர்ட்டில் விமானம் வானை நோக்கி பக்கவாட்டில் கிளம்ப அதே புள்ளியில் இருந்து கார் முன்னோக்கி வரும் ஷாட்டில் துவங்கும் இயக்குனர் அர்ஜுனின் தொழில் நுட்ப படமாக்கல் நேர்த்தி படம் முழுக்க பாய்கிறது .
போர்க்களக் காட்சிகளை சிறப்பாக படமாக்கி இருக்கிறார் .
மது அவளது தாத்தா இடையிலான அந்த நட்புறவு அபாரம். திரைகதையில் சிறப்பான ஒரே விஷயம் இதுவே . ஐஸ்வர்யா படம் முழுக்க திறந்த மனதோடும் , மிக லோ ஓ ஓ ஓ ஓ ஹிப் உடைகளோடும் (அபாயக் கோட்டின் எல்லை வரை இறங்கி இருக்கிறது) , அப்பாவின் டைரக்ஷனில் உற்சாகமாக நடித்துள்ளார் .
அழகாக சுறுசுறுப்பாக ஆடியுள்ளார் . அர்ஜுனுக்கு கடைசி வரை கைவராத விஷயமான மிக நீண்ட வசனங்களை ஒரே ஷாட்டில் பேசுகிறார் . சபாஷ்
ஆனால் மாடுலேஷனில்தான் தமிழ்த்தன்மை இல்லை . யாரோ புதுசா தமிழ் கத்துக்கிட்ட பொண்ணு பேசுவது போலவே இருக்கிறது .
தவிர ஐஸ்வர்யா தமிழை விட கன்னடம் தெலுங்கு இந்தி திரை உலகங்களுக்கு இருப்பார் போல . முயற்சி செய்யலாம் .
படத்தில் காமெடிக்கு என்று சில தமிழ் முகங்களை போட்டதோடு சரி . ஒரு நிலையில் அவர்களும் படத்தில் இருந்து விலகி விடுகிறார்கள் . சுகாசினி, ராஜேந்திரன் தவிர எல்லாரும் அந்நிய முகங்கள் .
அந்த அந்நிய முகங்களின் உதடு அசைவும் சரி இல்லை . எனவே டப்பிங் பட உணர்வே வருகிறது . (இல்லை பல காட்சிகளில் கன்னடம்தான் ஒரிஜினலா ?)
காட்சிகள் தேவைக்கு மேலும் நீள்கின்றன .
படத்தில் ஒரு இடத்தில் சந்தன வீரப்பனை கிண்டல் செய்து கன்னடர்களுக்கு ஜில் தட்ட வைக்கிறார் அர்ஜுன் . ஹா ஹா ஹா !
தவிர தமிழ் நாட்டில் எல்லோரும் இந்தி பேச வேண்டும் என்ற தொனியும் படத்தில் வருகிறது.
படம் முழுக்க பழைய பாணியிலான காட்சிகள் . காலாவதியான டெம்ப்ளேட் கதற வைக்கிறது .
அனுமன் புகழ் பாடும் ஒரு பாடலுக்கு நாடனும் ஆடுகிறார் அர்ஜுன் .
கார்கில் போரில் அதிக மரணம் அடைந்தது தமிழக வீரர்கள்தான் . மேஜர் சரவணன், நடராஜ் என்று அந்த நிஜ வீரர்களின் கதைகளை உள்ளே கொண்டு வந்து இருக்கலாம் . தமிழ்ப் படமா எடுக்கணும் என்ற உணர்வு இருந்தால்தானே அதெல்லாம் வரும் .
ஒரு பீரியட் படம் என்றால் அந்த பீரியடுக்குள் நடந்து முடிய வேண்டும் . அது நிகழ் காலத்துக்கு வருகிறது என்றால் அதன் இன்றைய விளைவு என்ன என்று சொல்ல வேண்டும் .
சும்மா ஏர்போர்ட்டில் உட்காந்து நினைத்துப் பார்க்கவும் கட்டிப் பிடித்துக் கொள்ளவும் எதற்கு ஒரு காட்சி . ?
இதுக்குப் பதில் முழு பீரியட் படமாகவே சொல்லி இருக்கலாம்
இதெல்லாம் திரைக்கதையின் அடிப்படை அல்லவா ?
சொல்லி விடவா ?… என்னத்தச் சொல்ல !