
ஷாலோம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் இரு வேடத்தில் ஸ்ரீகாந்த், மற்றும் லக்ஷ்மிராய், சுமன் , சித்தப்பு சரவணன் , சிங்கம் புலி, கஞ்சா கருப்பு ஆகியோர் நடிக்க, வடிவுடையான் என்பவர் இயக்கி இருக்கும் படம் சவுகார் பேட்டை
தன்னிடம் கடன் வாங்கிய ஒருவரை (தலைவாசல் விஜய் ) ஏமாற்றி அநியாய வட்டி போட்டு ஏகப்பட்ட பணம் பிடுங்கிவிட்டு கடைசியில்,
அவரது பங்களாவையே எழுதி வாங்க முயல்கிறான் சவுகார் பேட்டை கந்து வட்டி சேட் கோத்ரா (சுமன்) .
அது முடியாத நிலையில் அந்த நபர், அவரது மனைவி (ரேகா) , மகன் (ஸ்ரீகாந்த்), வருங்கால மருமகள் (லக்ஷ்மி ராய் ) அனைவரையும் கொல்கிறான்.
மகனும் மருமகளும் ஆவியாக வந்து சேட்டையும் அவனது குடும்பத்தையும் அழிக்கப் போராடி அதில் வெற்றி பெறுகின்றனர் .
இதற்கிடையே அந்த வீட்டின் மூத்த மகன் (இன்னொரு ஸ்ரீகாந்த்) , தனது தம்பியின் வருங்கால மனைவி மீது ஆசைப்பட்டு அவளை அடைய முயல, பிரசனை பெரிதாகி அப்பாவால் அடித்து விரட்டப்படுகிறான் .
அவன் பெரிய மந்திரவதியாகிறான் .
தன் வீட்டில் எல்லோரும் இறந்து போனது தெரிந்து மீண்டும் வரும் அவன், தனது தம்பியின் மனைவி ஆவியாக இருந்தாலும் அவளை அடைய முயல்கிறான் .
ஆவியான பிறகாவது சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும் காதல் ஜோடி அவனிடம் இருந்து தப்பியதா இல்லையா என்பதுதான் இந்த சவுகார்பேட்டை .
ஸ்ரீகாந்த் கஷ்டப்பட்டு குரலை நொறுக்கி கட்டைக்குரலில் டப்பிங் பேசி இருக்கிறார் . படம் முழுக்க மண்ணிலோ அல்லது குங்குமத்திலோ புரண்டு கொண்டு இருக்கிறார் .
லக்ஷ்மி ராயும் ஆக்ஷன் காட்சிகளில் மிகுந்த சிரமப்பட்டு நடித்துள்ளார் . (மிச்சம்) இருக்கிற கவர்ச்சியை காட்டுகிறார்
இவ்வளவு காமெடி நடிகர்கள் இருக்கும்போது நல்ல காமடியான சீன்களை உருவாக்கி இருக்கலாம்
பட்டப் பகலில் பொட்டை வெயிலில் பேய்க்கதை சொல்லி மிரட்ட முயல்கிறார்கள். நல்ல விஷயம்தான் . ஆனால் சொல்லும் விசயங்களை இன்னும் சிறப்பாக அமைத்து இருக்கலாம்.
.இரட்டை அமாவாசை, பவுர்ணமி , சுடுகாட்டின் சக்திவாய்ந்த தெய்வம் அரிச்சந்திரன் இப்படி பல பேய்ப்படத்துக்கு வாகன விஷயங்கள் இருந்தும் ,
ஜஸ்ட் வசனத்தில் மட்டும் கடந்து போவது போல செய்யாமல் காட்சிக்குள் அவற்றை வீரியமாகக் கொண்டு வந்திருக்கலாம் .
பேய்க்கதைக்கு லாஜிக் தேவை இல்லைதான். ஆனால் லாஜிக் மாதிர் எதாவது ஒன்று வேண்டாமா? ஆவியாகி விட்ட பெண்ணை மந்திரவாதி அடைய முயல்வதும்….
அந்த காட்சிகளில் மட்டும் லக்ஷ்மி ராய் ஸீ த்ரூ உடையில் தளும்ப தளும்ப வருவதும்..
இப்படியெல்லாம் இல்லாமல் ஏற்றுக் கொள்ளும்படியாக திரைக்கதையைக் கொண்டு போயிருக்கலாம். மேக்கிங்கில் மெச்சூரிட்டி கொண்டு வந்திருக்கலாம்
இதை எல்லாம் செய்து இருந்தால் சவுகார்பேட்டை, கிளப்பி இருக்கும் பட்டை
கடின உழைப்பு பாராட்டுக்குரியதுதான் . ஆனால் அந்தக் கடின உழைப்பை எதற்காகத் தரவேண்டும் என்பதை தெரிந்து கொள்வது நல்லது