குற்றவாளிகள் மற்றும் சந்தேகத்துக்குரிய நபர்களின் செல்போன்களை வேவு பார்க்க , காவல்துறை நியமித்துள்ள,
பணிப் பிரிவில் பணியாற்றுபவன் சிவா (மகேஷ்பாபு). அவன் நண்பர்கள் சிலர் ( ஆர் ஜே பாலாஜி மற்றும் சிலர்)
ஒரு குற்றம் நடந்த பின் இதை எல்லாம் செய்து குற்றவாளியை பிடிப்பதை விட குற்றம் நடைபெறும் முன்பே,
அதை தடுத்து உயிர் மற்றும் பொருள் சேதத்தை தவிர்ப்பதே சிறந்த சேவை என்று எண்ணும் சிவா ,
அதற்கேற்ப , ஹெல்ப் என்ற வார்த்தை, மிரட்டல் தொனி , அழுகை சத்தம் வரும் செல்போன்களின் பேச்சுகள்,
மற்றும் தானாக தனது கணிப்பொறிக்கு வரும்படி ஒரு மென்பொருள் செய்கிறான் .
அதன் மூலமாக ,
காதலின் பெயரால் ஏமாற்றப்பட இருந்த ஒரு பெண், கடத்தப்பட்டபோலீஸ் அதிகாரியின் மகன் , தூக்குப் போடமுயலும் ஒரு மாணவி என்று பலரையும் காப்பாற்றுகிறான் .
அந்த வகையில் ரகசிய டேட்டிங்குக்கு ஆசைப்படும் ஒரு பெண்ணின் (ரகுல் பிரீத் சிங்) நட்பு – பிறகு காதலையும் பெறுகிறான் .
குற்றச்சாட்டு இல்லாத மனிதர்களின் போன்களை ஒட்டுக் கேட்பது தெரிந்தால் வேலை போய் தண்டனையும் கிடைக்கும் என்பதால் இதை எல்லாம் ரகசியமாகவே செய்கிறான் .
இந்த நிலையில் ஒரு வீட்டில் தனியாக இருக்கும் ஒரு இளம்பெண் சக தோழியிடம் உதவி கேட்பதையும் அவள் மறுப்பதையும் ஒட்டுக் கேட்டு ,
தான் போக முடியாத நிலையில் தன் தோழியான ஒரு போலீஸ் கான்ஸ்டபிளை அனுப்புகிறான் .
மறுநாள் உதவி கேட்ட பெண்ணும் , கான்ஸ்டபிளும் கண்ட துண்டமாக வெட்டி அறுத்துக் கொல்லப்பட்டுக் கிடக்கிறார்கள் .
உதவி கேட்ட பெண் பல்வேறு இடங்களில் இருக்கும் கேமரா பதிவுக் காட்சிகளை வைத்து அவளைப் பின் தொடர்ந்த ஒருவனை கண்டு பிடிக்கிறான் .
அவன் இருக்குமிடம் தேடிப் போகிறான் .
ஒரு கிராமத்தில் வெட்டியானுக்கு மகனாக சுடுகாட்டில் உள்ள குடிசையில் பிறந்து, தினம் தினம் அழுகை சத்தம் கேட்டே வளர்ந்து அழுகையை ரசித்து ரசித்து சிலிர்த்து,
சுடுக்காட்டுக்குப் பிணம் வராத நிலையில் ஊர் ஆட்களைக் கொன்று சைக்கோ ஆன ஒருவன்தான் கொலைகாரன் என்பது தெரிகிறது .
சுடலை என்ற அவனை (பரத்) போராடிப் பிடிக்கிறான் . அவனை சுட்டுக் கொள்ள முயலும் நிலையில் அவன் சுடலையின் தம்பி என்பது தெரிகிறது .
நிஜமான சுடலை ( எஸ் ஜே சூர்யா ) முகமூடி அணிந்து டி வி யில் தோன்றி ‘என் தம்பியைக் கொன்றால் ஹைதராபாத் மாநகரமே சுடுகாடு ஆகும்’ என்கிறான் .
இதுவரை தான் கொன்ற நபர்கள் பலரை மெட்ரோ ரயில் மேம்பாலத் தூண் ஒவ்வொன்றிலும் புதைத்த கதையை சொல்கிறான் .
ஊரே தூண்கள் முன் நின்று அழுகிறது . அதை கும்பலில் ஒருவனாக நின்று ரசிக்கிறான் சுடலை .
விஷயம் அறிந்த சிவா , அதே மேம்பாலத்துக்கு வந்து சுடலையின் மிரட்டலையும் மீறி சுடலையின் தம்பியை சுட்டுக் கொல்கிறான் .
கொந்தளிக்கும் சுடலை சிவாவின் குடும்பத்தை அழிக்க முயல்கிறான் .
தன் உயிரைப் பணயம வைத்து குடும்பத்தை காப்பாற்றும் சிவா மரணத்தின் விளிம்பு வரை போய் வருகிறான் .
சுடப்பட்ட நிலையில் , ஒரு வீட்டாரை மிரட்டி தங்கி இருக்கும் சுடலையை பக்கத்து வீட்டுப் பெண்களின் உதவியோடு சிவா கைது செய்கிறான் .
சிறையில் உள்ள சுடலை முன்னரே செய்த ஏற்பாட்டின் மலை உச்சியில் ஒரு மாபெரும் பாறையை தாங்கிக் கொண்டு இருக்கும் சிறு பாறையை வெடி வைத்து தகர்த்து,
மலைப்பாறையை உருண்டு ரோட்டில் விழுந்து உருள வைத்து பல நூறு பேரைக் கொல்கிறான் சுடலை . அங்கே காப்பாற்றும் முயற்சியில் சிவா இருக்க,
ஜெயிலில் இருந்து தப்பும் சுடலை ஒரு மருத்துவமனையில் வெடி குண்டுகள் வைத்து பல நூறு பேரைக் கொல்கிறான் .
சிவாவும் சுடலையும் ஒண்டிக்கு ஒண்டி மோத , என்ன நடந்தது என்ற ‘முடிவு சொல்ல முடியாத ‘ படமே ஸ்பைடர் .
படத்தில் ஹீரோவுக்குக் கொடுத்து இருக்கும் வேலை, அதன் காரணம் , கடைசியில் மனிதாபிமானம் குறித்து,
ஹீரோ பேசுவது ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே முருகதாஸ் முத்திரை . மற்ற இடம் எல்லாம் வெற்றுப் பேப்பர் .
சிவா கண்டு பிடித்து இருக்கும் அந்த மென்பொருளுக்கான கலை இயக்கம் மற்றும் விசுவல் எஃபக்ட்ஸ் அருமை .
மகேஷ் பாபு ஜொலிப்பாக இருக்கிறார் . ஹீரோயிசம் பிரகாசிக்கிறது . நடனம் , சண்டை எல்லாம் சிறப்பு
ஆனால் உணர்ச்சிகரமான காட்சிகளில் முகம்தான் என்னத்துக்கோ என்று பார்க்கிறது . கொஞ்சம் நடிக்கணும் பாஸ் . நம்ம ஊரு ஆக்ஷன் ஹீரோக்கள் எவ்வளவோ மேல் போல .
நன்றாகவே அவர் தமிழ் பேசி இருந்தாலும் நாடறிந்த தெலுங்கு சூப்பர் ஸ்டார் அவர் என்பதால் ,
அவர் பேச்சில் தெரியும் தெலுங்கு வாசனை பார்ப்பது டப்பிங் படம் என்ற உணர்வையே தருகிறது .
மொத்தக் கதையும் படமும் ஹைதராபாத்திலேயே நிகழ்வதும் அதற்கு ஒரு காரணம் .
ஹீரோ இருப்பது ஹைதராபாத் . அவன் போவது கொலனறு என்ற ஆந்திர ஊருக்கு . அங்கு சுடுகாட்டில் உள்ள கல்லறைகளில் எல்லாம் ஜிலேபி ஜிலேபியாக தெலுங்கு பெயர்கள் .
ஆனால் சுடுகாட்டு வாசலில் மட்டும் மயானபூமி என்று தமிழில் பெயர்ப் பலகை . இரண்டு மொழிப் படமாக்குவது இவ்வளவு ஈசியா இயக்குனரே ?
பை தி பை …. என்னமோ சொல்ல வர்றீங்க . எங்க மரமண்டைக்குதான் புரியல .
ராகுல் பிரீத் சிங் வழக்கமான ஆக்ஷன் படங்களுக்கே உரிய பேக்கு கதாநாயகி . ஒரு முக்கியமான தகவல் சொல்லும் போது,
சம்பவம் நடக்கும் இடத்தைக் கூட சொல்ல முடியாத அளவுக்கு அவ்வளவு பெரிய பேக்கு . அதை ஹீரோ கண்டு பிடிக்க ஒரு ஆக்ஷன் காட்சி . ஏழு கொண்டல வாடா !
நடிப்பில் கலக்குபவர் எஸ்ஜே சூர்யா . கொஞ்சம ஓவர் என்றாலும் அந்தக் கேரக்டரை அப்படி பண்ணியது ஒகே தான் .
அதே போல சில காட்சிகளில் வந்தாலும் மிரட்டுகிறார் பரத் .
சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு சிறப்பு . ஹாரிஸ் ஜெயராஜின் பாடல் இசை ஒகே . பின்னணி இசை படத்துக்கு டெம்போ ஏற்றுகிறது .
ஸ்ரீகர் பிரசாத்தின் படத் தொகுப்பில் முதல் பாதி சிட்டாகப் பறக்கிறது .
ஆனால் இவ்வளவு பேர் இருந்தும் இவ்வளவு விஷயம் இருந்தும் இரண்டாம் பகுதி ஆபரேஷன் தியேட்டருக்கு வருவதற்கு முன்பே அவுட் ஆன பேஷன்ட் ஆகிறது .
காரணம வழக்கமான திரைக்கதை ரூட் .
வில்லனின் செயல்பாடுகள் , ஹீரோவின் பதில் செயல்பாடுகள் எதுவும் ஈர்க்கவில்லை .
ரகசியமாய் ஒரு வீட்டுக்குள் ஒளிந்து இருக்கும் சுடலையை மீட்கும் காட்சி காதில் பூ ம்ஹும் பூமாலை .. அது கூட இல்லை நந்தவனத்தையே காதில் வைத்த மாதிரி இருக்கிறது
மிடில ! அங்கே மருத மலை மாமணியே பாட்டை போட்டு ஆடியன்ஸ் மனநிலையை மட்டும் மாற்றாமல் இருந்திருந்தால் படத்திலேயே பெஸ்ட் காமெடி காட்சி அதுதான் .
சுடலை என்ன அவ்வளவு முட்டாளா ? அப்போ அவன் வில்லனா இல்லை காமெடியனா ?
அப்புறமும் புரண்டு ராட்சஸ மலைப்பாறை , மற்றும் மருத்துவமனையில் பல மாடிகளும் இடிந்து விழும் நிலையில் அதில் மகேஷ் பாபுவும எஸ் ஜே சூர்யாவும் ,
ஏதோ தண்ணீர் படுக்கையிலும் நுரை மெத்தைக் கட்டிலிலும் இருப்பது போல உருண்டு புரண்டு ஜஸ்ட் சின்ன சின்ன கீறல்களோடு மட்டும் சண்டை போடுவதும் …
ரொம்ப கஷ்டம்ங்க ரொம்ப கஷ்டம் .
ஜூனியர் என் டி ஆர் ஒரு படத்தில் ஓடும் ரயிலை உள்ளங்கையால் அடித்து நிறுத்துவாரே .. அதற்கும் இதற்கும் அதிக வித்தியாசம் இல்லை .
மொத்தத்தில் ஸ்பைடர் .. செத்த சிலந்தி !