ரைஸ் ஈஸ்ட் என்டர்டைன்மென்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் , ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா சார்பில் பி வி எஸ் என் பிரசாத் தயாரிக்க, கவின் , லால், அதிதி பொஹங்கர், பிரீத்தி முகுந்தன், கீதா கைலாசம், மாறன், காதல் சுகுமார், ராஜா ராணி பாண்டியன் நடிப்பில் இளன் என்பவர் எழுதி இயக்கி இருக்கும் படம்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் முன்பு ஒரு இளைஞன் நடித்துக் காட்ட, அவர் கண்ணியம் கருதி பாராட்ட, அதனால் தூண்டப்பட்டு, சினிமாவில் நடிக்க முயன்று , முடியாமல் போய் போட்டோகிராபராக வேலை செய்தபடி கஷ்டப்பட்டு மனைவி மகன் , மகளைக் காப்பாற்றும் ஒருவருக்கு ( லால்) தன் மகனையாவது ( கவின்) பெரிய நடிகன் ஆக்க வேண்டும் என்று கனவு .
சிறு வயதில் பள்ளியில் பாரதியாராக நடித்த காலம் தொட்டே அப்பாவால் தூண்டப்பட்ட அவனுக்கும் நடிகனாகும் லட்சியம் எழுகிறது .
பலரைப் போலவே எதற்கென்று தெரியாமல் இன்ஜினீயரிங் படித்து விட்டு சினிமா உலகில் ஜெயிக்க முயலும் அவனுக்கு வறுமை ஒரு பிரச்னை. கல்யாணம் ஆகாத அக்காவுக்காக வேலைக்கு போய் சம்பாதி என்று வற்புறுத்தும் அம்மா (கீதா கைலாசம்) ஓர் தடை .
ஒரு பட வாய்ப்புக் கிடைத்து கிளம்பும்போது ஏற்படும் விபத்தால் முகத்தில் தழும்பு விழ , பெரும் பின்னடைவு.
காலம் பூராவும் வருவேன் என்று சொன்ன காதலி (அதிதி பொஹங்கர்) விட்டு விட்டுப் போகிறாள் . அவனுக்கே தெரியாமல் ஒருதலையாகக் காதலித்த பெண் (பிரீத்தி முகுந்தன்) நேரில் வந்து காதல் சொல்கிறாள் . அவளோடு காதல் கல்யாணம் என்று போகிறான்.
அம்மா மட்டுமல்ல மனைவிக்காகவும் சினிமாவை மறந்து வேலைக்குப் போக, அங்கும் சினிமா நெருங்குகிறது . ஆனால் முகத்தில் உள்ள தழும்பு துரத்துகிறது .
ஒரு நிலையில் மனைவியால்தான் நாம் சினிமாவுக்கு முயல முடியாமல் போகிறது என்று எண்ணும் அவன் அவளை விலக்க… அப்புறம் என்ன ஆனது என்பதே படம்.
படத்தின் முதல் பலம் யுவன் சங்கர் ராஜாவின் இசை . படம் வருவதற்கு முன்பே பாடல்கள் பெயர் வாங்கி விட்டன.
அடுத்து கவின் . கிடைக்கும் காட்சிகளில் எல்லாம் சிறப்பாக நடிக்கிறார் . சில காட்சிகளில் நெகிழவும் வைக்கிறார் .
எழில் அரசுவின் ஒளிப்பதிவு படத்துக்கு ஓர் எலைட் தன்மையைத் தருகிறது . சிறப்பு .
கிளைமாக்சில் எடுக்கப்பட்ட ஒரே ஷாட் காட்சியில் தொழில் நுட்ப ரீதியாகப் பாராட்டுப் பெறுகிறார் இயக்குனர் இளன்.
நாயகிகளில் அதிதி பொஹங்கருக்கு வந்து போக வாய்ப்பு . , பிரீத்தி முகுந்தனுக்கு நடிக்க வாய்ப்பு. இருவரும் குறை வைக்கவில்லை.
லால் சிறப்பாகவே நடித்து இருந்தாலும் ஓரிரு காட்சிகளில் அசத்தி இருந்தாலும் அவரது குரலும் மலையாளத் தன்மையும் ஒட்டவே இல்லை.
இரண்டே காட்சிகள் என்றாலும் நெகிழ வைக்கிறார் காதல் சுகுமார் .
வித்தியாசமான கதாபாத்திரத்தில் அசத்தி இருக்கிறார் ராஜா ராணி பாண்டியன் . நாயகனின் அப்பா கேரக்டரில் இவர் நடித்து இருந்தால் இன்னும் யதார்த்தமாக இருந்திருக்கும்.
எழுதி இயக்கி இருக்கும் இளனுக்கு முன்பே தோற்றுப் போன அப்பாவின் கதையைச் சொல்வதா, இப்போது முயலும் மகனின் கதையைச் சொல்வதா என்பதில் குழப்பம் .
கிட்டத்தட்ட அவரது மற்றும் அவரது தந்தையான ராஜாராணி பாண்டியனின் வாழ்க்கைச் சம்பவங்களில் இருந்து எழுதப்பட்ட கதைதான் இது என்றாலும் கூட அதை திட்டவட்டமாக தீர்மானமாக அதைக் கையாள்வதில் இருக்கும் போதாமை ஆச்சர்யப்படுத்துகிறது .
ஸ்டார் ஆக விரும்பும் ஒருவன் தன் லட்சியத்தை அடைய செய்யும் முயற்சிகள் மற்றும் போராட்டம்தான் கதை என்றால் குடும்பச் சூழல், சினிமா உலகம் அவனுக்கு தரும் அனுபவங்கள் என்று திரைக்கதை போனால்தான் அது எல்லோருக்குமான ஆர்வத்தைத் தூண்டும் திரைக்கதையாக இருக்கும் .
அதை விட்டு விட்டு அவனுக்கு எதிர்பாராத விபத்து , தவிர அவன் மகா கோபக்காரன் என்று எல்லாம் சம்பவங்கள் மற்றும் குணாதிசயங்களை வைத்து விட்டு, அவனது கஷ்டம் பாரீர் கண்ணீர் பாரீர் என்றால் அது சரியான பாதையில் இருந்து விலகும் திரைக்கதையாகவே இருக்கும் .
விபத்து கூட ஒகே . ஆனால் நாயகனின் குணாதிசயம் இந்தக் கதைக்கு உதவாது .
அப்படிப் பார்த்தாலும் விபத்தைக் காரணமாக வைத்துச் சொல்லப்படும் காட்சிகளும் பக்குவமாக இல்லை.
அம்பது வருஷம் முன்பே முகம் முழுக்க அம்மைத் தழும்புகளோடு நாகேஷ் ஹீரோவான ஊரு இது . மரத்தைச் சுத்தி டூயட் பாடித்தான் ஸ்டார் ஆகணும்னு இல்ல. முகத்தில் உள்ள வெட்டுத் தழும்போடு அடியாளாக நடித்து வில்லனாகி அப்புறம் கூட ஸ்டார் ஆகலாம்.
THE PRESIDENT என்ற படத்தில் ஜுனியர் ஆர்ட்டிஸ்டாக நடிக்கக் கூட தகுதியற்ற முகம் என்று ஒதுக்கப்பட்ட ஒருவனை அந்த நாட்டுக்கே PRESIDENT ஆக்கிய சக்தி கொண்டது சினிமா .
அதாவது இந்தக் கதையைக் கையாளக் கூடிய பக்குவமோ நேர்த்தியோ இயக்குனருக்கு இல்லை. பாட்டி இறந்த நேரத்தில் அவனுக்கு நடிக்க வாய்ப்பு வந்ததற்காக குடும்பம் சந்தோஷப்படும் காட்சியை எடுத்த விதத்தில் இயக்கத்திலும் மெச்சூரிட்டி இல்லை என்பது வெளிப்படுகிறது. இப்படிப் பல காட்சிகள் .
படத்தின் அதீத நீளமும் ஒரு பிரச்னை . அதிகபட்சம் இரண்டே கால் மணி நேரத்துக்குள் முடிய வேண்டிய படம் இது . இருபத்தைந்து நிமிடம் அதிகம் ஓடுகிறது .
இப்படிப் பல குறைகள் இருந்தாலும் இவற்றை எல்லாம் மீறி , படத்தை தூக்கி நிறுத்துகிறார்கள் யுவன் சங்கர் ராஜா, கவின், எழில் அரசு, லால். ராஜா ராணி பாண்டியன், காதல் சுகுமார், பிரீத்தி முகுந்தன் ஆகியோர்