பிரசன்ன விதானகே என்ற சிங்கள இயக்குனர் இயக்கி 2012 ஆம் ஆண்டு வெளியான ஒப நாதுவா ஒப ஏக்க (வித் யூ வித்தவுட் யூ ) . அண்மையில் தமிழ் நாட்டில் திரையிடப்பட முயற்சிகள் நடந்து தமிழர்களுக்கு ஆதரவான படம் என்றும் எதிரான படம் என்றும் இரண்டு வித விமர்சனங்களுக்கு ஆளான படம் அது .
படத்தின் கதை என்ன ?
இலங்கையின் மலை நாட்டுப் பகுதியில் ஒரு கிராமம். அங்கே நகை அடகுக் கடை வைத்து பிழைக்கும் ஒரு சிங்களன் . அங்கே நகையை அடிக்கடி அடகு வைக்க வரும்– யாழ்ப்பாணத்தில் இருந்து அங்கே வந்து தங்கி இருக்கும்– தமிழ்ப் பெண் செல்வியின் செக்சியான உதடுகளையும் கண்களையும் பார்த்து அவன் காதல் (!) கொள்கிறான் . அவள் தயங்குகிறாள் . அந்த சிங்களவன் வீட்டில் வேலை செய்யும் லக்ஷ்மி என்ற ஏழை தமிழ் அம்மையார் செல்வியின் மனதை சிங்களவனுக்காக மாற்றுகிறார் .
செல்வி தஞ்சம் புகுந்திருக்கும் இந்த ஊர் தமிழ்க் குடும்பத்தில் உள்ள பெண்களால் “நீ இருக்கிறது யாழ்ப்பாணம் என்று நினைத்துக் கொண்டு இருக்காதே. சாதியில் உயர்ந்தவள் என்று இனியும் நினைக்காதே ” என்பது போன்ற கிண்டல்களுக்கு ஆளாகிறாள் அவள் . தொலைக் காட்சியில் வடிவேலு காமெடியை ரசித்துப் பார்க்கும் அந்தக் குடும்பம் ஒரு ஒரு பணக்கார வயதான நபருக்கு செல்வியை கட்டிவைக்க முயல்கிறதாம்.
இந்த சூழ்நிலையில் சிங்களவனை திருமணம் செய்து கொள்கிறாள் செல்வி . முதல் இரவில் கட்டிலில் அவளை வெறித்தனமாக புணர்கிறான் அந்த சிங்களன். அவள் விருப்பத்திற்காக விஜய் நடித்த தமிழப் படமான வேட்டைக்காரனுக்கு அழைத்துப் போகிறான். வெளியே வந்ததும் இந்த படத்தை எல்லாம் பாக்கறது பணத்துக்கு புடிச்ச தண்டம்” என்கிறான் . செல்வியும் “யாழ்ப்பாணத்தில் போர் சம்மந்தப்பட்ட விஷயங்களை மட்டுமே திரையிடுவார்கள் . இப்போதுதான் விஜய்யின் முகத்தை முதன் முதலில் பெரிய திரையில் பார்க்கிறேன் என்று குதூகலிக்கிறாள் . (ஆனால் படத்தில் விஜய் வடிவேலு ,ஆகியோரின் முகங்கள் ஒரு நொடி கூட காட்டப்படவில்லை . எல்லாமே ஒலிதான் )
கிறிஸ்தவளான செல்வியை அவள் ஆசைக்காக வேண்டா வெறுப்பாக சர்ச்சுக்கு அழைத்து சென்று சர்ச் வாசலில் விட்டு விட்டு போகிறான் . அவள் பிரார்த்தனை முடித்து வரும்போது அழைத்து வருகிறான் . வரும் வழியில் “நீ கும்பிடும் கடவுள் எல்லாம் உன்னை காப்பாற்ற மாட்டார் . நான்தான் காப்பாற்றுவேன் ” என்கிறான்.
“இந்தியாவுக்கு போகவேண்டும். நிறைய விஜய் படம் பார்க்க வேண்டும்” என்ற தனது ஆசையை (தமிழ் நாடு, சென்னை போன்ற என்ற வார்த்தைகளை திட்டமிட்டு தவிர்க்கிறார் இயக்குனர் ) செல்வி சொல்ல , ‘இந்தியா போகும் எண்ணமே இல்லை’ என்று சொல்கிறான் அவன் அவள் முகம் வாடுவதை பார்த்து ”பார்க்கலாம்… பார்க்கலாம்” என்று எரிச்சலாக அலட்சியமாக கூறுகிறான்.
ஒரு தமிழ்ப் பெண், தான் அடகு வைத்திருந்த தாலியை விட்டு வைத்திருக்க மனம் இல்லாமல் செல்வியிடம் வந்து தாலிக்கு பதிலாக கம்மலை கொடுத்து விட்டு தாலியை வாங்கிச் செல்கிறாள் . அது தெரிந்து செல்வியை அவன் கண்டிக்கிறான் . “தாலியின் அருமை தமிழ் பெண்ணுக்குத்தான் தெரியும் ” என்கிறாள் செல்வி .
இந்நிலையில் ஒரு சிங்களன் இவனை பார்க்க வருகிறான் . அவன் சிங்கள ராணுவத்தில் இருந்தவன் என்பது தெரிய வர , அஞ்சுகிறாள் செல்வி . ஆனால் அடுத்த அதிர்ச்சி .. தன் கணவனும் முன்னாள் சிங்கள ராணுவ சிப்பாய் என்பது தெரிய வருகிறது. பள்ளிச் சிறுவர்களான தன் அப்பாவித் தம்பிகளை தீவிரவாதி என்று பொய் சொல்லி சுட்டுக் கொன்ற — எத்தனையோ பெண்களை கற்பழித்த அதே ராணுவத்தில் தன் கணவனும் பணியாற்றியவன் என்பது அறிந்த செல்வி மனம் நொறுங்கிப் போகிறாள் . அவனோடு இயல்பாக வாழ அவளால் முடியவில்லை.
தனக்கு தெரியாமல் வீட்டில் அவன் ரகசியமாக ஒரு துப்பாக்கி வைத்திருப்பதையும் செல்வி கண்டு பிடிக்கிறாள் . ஒரு நிலையில் அதை எடுத்து அவனை சுடவே போகிறாள் . ஆனாலும் தாலி கட்டிய கணவனை கொல்ல அவளால் முடியவில்லை . அதன் பின்னர் சாப்பிட மறுக்கிறாள் . ஒரு சிங்கள ராணுவத்தானையா திருமணம் செய்து கொண்டோம் என்று மனம் குமைந்து குமைந்து நோய் வாய்ப்படுகிறாள் .
”மிலிட்டரியில் நீ என்ன செஞ்சே?” என்று அவள் கேட்க ” தனது நண்பர்களான ஐந்து ராணுவன்கள் ஒரு தமிழ்ச் சிறுமியை சாகும் வரை மாறி மாறிக் கற்பழித்தது தெரிந்தும்…. ராணுவத் தலைமை அவர்களை விசாரணை (?) செய்து தண்டிக்க(!?!) முயன்றபோது, அவர்கள் என்னுடன்தான் இருந்தனர் என்று பொய் சொல்லி காப்பாற்றினேன்” என்கிறான் அவன் . ஆன்மா இற்றுப் போகிறாள் செல்வி
“இந்தியா போலாம் . பட்டுப் புடவை வாங்கித் தரேன் . உனக்கு புடிச்ச படம் எல்லாம் ஒவ்வொன்னா பார்க்கலாம். சிங்கள ராணுவத்தில் எனக்கு உள்ள நண்பர்களை வைத்து காணாமல் போன உன் அப்பா அம்மாவை தேடுவோம் ” என்று சமாதானம் சொல்கிறான் . சிங்கள ராணுவம் என்ற வார்த்தையே அவளுக்கு பிடிக்கவில்லை. “இனி உனக்கு நான் நல்ல மனைவியாக வாழ முடியாது” என்று அவனிடம் மன்னிப்பு கேட்கிறாள் செல்வி
தனது அடகுக் கடையை ஒரு தமிழ் முஸ்லிமிடம் விற்று விட்டு அவளை ”இந்தியா’ அழைத்து வர ஏற்பாடு செய்கிறான். ஆனால் அவன் வருவதற்குள்” ஒரு நாள் ரசித்தேன் . ஒரு நாள் வெறுத்தேன். உன்னை உயிரோடு கொன்று புதைத்தேன் . மன்னிப்பாயா? மன்னிப்பாயா ?” என்ற பாடலை பாடி விட்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்கிறாள் செல்வி . இதே செல்வியையோ அல்லது இன்னொரு செல்வியையோ தேடி அந்த ரோட்டில் அலைகிறான் அவன்.
இதுதாங்கோ அந்த சிங்களப்படத்தில் சொல்லப்படும் … ம்ஹும் விடப்படும் , தமிழர் ஆதரவுக் கதை . (எங்களுக்கே வேறெங்கும் கிளைகள் கிடையாது .. ஊ .. ஊ.. ஊ …)