ஸ்ட்ராபெரி@விமர்சனம்

straw 3

வில் மேக்கர்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் தயாரித்து பாடல்கள் எழுதி ஹீரோவாக நடிப்பதோடு,  இயக்குனராக  பா. விஜய் அறிமுகம் ஆகி இருக்கும் படம் ஸ்ட்ராபரி .

சுவையும் நிறமும் எப்படி? பார்ப்போம் .

மேற்கத்திய முறையில் ஆவிகளோடு பேசும் ஒருவரும் (ஜோ.மல்லூரி) ஆவிகளின் உருவங்களை  ஓவியமாக வரையும் அவரது மகளும் (அவ்னி  மோடி) , ஒரு குறிப்பிட்ட விசயத்துக்காக ஒரு கால் டாக்சி டிரைவரை ( பா.விஜய்) பணிக்கு அமர்த்திக் கொள்கின்றனர்.

ஒரு குறிப்பிட்ட ஆவி அந்த கால் டாக்சி டிரைவரிடம் பேச ஆசைப்படுவதுதான் காரணம் . அந்த ஆவி ஒரு சிறுமி. அது கால் டாக்சி டிரைவரிடம் பேச ஆசைப்படக் காரணம்,  அந்த சிறுமி  இறப்பதற்கு முன்பு கடைசியாகப் பார்த்தது  கால் டாக்சி டிரைவரைதான் .

பள்ளி  பேருந்தின் மரத்தாலான தரமற்ற அடிப் பாக ஓட்டை வழியே சாலையில் விழுந்து பேருந்தின் சக்கரம் ஏறி செத்துப் போன சிறுமியின் ஆவி  அது .

‘பணம் பிடுங்குவதை மட்டுமே குறிக்கோளாகக்கொண்ட  பள்ளி நிர்வாகம்,  சரியான வசதிகளை  செய்து தராததுதான்  மரணத்துக்கு காரணம்; எனவே இனி அப்படி எந்த அசம்பாவிதமும் நடக்கக் கூடாது’ என்று, அவளது பெற்றோர் (சமுத்திரக் கனி – தேவயானி) கோர்ட்டில் வழக்கு தொடர்வதோடு ‘அந்தத் தனியார் பள்ளியை அரசே எடுத்துக் கொள்ள வேண்டும்’ என்று கோரிக்கை வைக்கின்றனர் .

straw 4

பள்ளியில் பல்வேறு போட்டிகளிலும் முதல் பரிசு அந்த சிறுமியை,  மனநோயாளி என்று கோர்ட்டை நம்பவைத்து,  பள்ளியைக் காப்பாற்றிக் கொள்ள முயல்கிறான் பள்ளியின் தாளாளன் . சிறுமியை மனநோயாளி என்று எழுதித் தரும்படி பெற்றோரை மிரட்டுகிறான் .

அந்த தாளாளனை பழிவாங்க கால் டாக்சி டிரைவரின் உதவியை கேட்கிறது சிறுமியின் ஆவி . கால் டாக்சி டிரைவர் சம்மதிக்கிறான் . அதேநேரம் கால் டாக்சி டிரைவரை இந்த விசயத்தில் ஈடுபடுத்திய அந்த, ஆவிகளோடு பேசும்  நபர் அவளது மகள் இருவருமே  தாளாளனுக்கு ஆதரவாக களம் இறங்க…

அப்புறம் என்ன என்பதே ஸ்ட்ராபரி

பாராட்டப்பட வேண்டிய முதல் நபர் ஒளிப்பதிவாளர் மாறவர்மன் . ஈர இருளும் மர்மமுமான அந்த ஒளிப்பதிவு அபாரம் . அடுத்து தாஜ் நூரின் பின்னனி இசை . கை வீசும் காற்றே  பாட்டு அருமை .

படத்தில் வண்ணத்துப்பூச்சியை கிளைமாக்ஸ் வரை பயன்படுத்தி இருக்கும் விதம் கவனிக்க வைக்கிறது . படத்தில் வண்ணத்துப் பூச்சியும் ஒரு கேரக்டர் என்பதால்,  ஏரியல் வியூவில் கிட்டத்தட்ட வண்ணத்துப் பூச்சி வடிவில் தெரியும் கிண்டி கத்திபாரா மேம்பாலத்தை,  படத்தில் அதே கோணத்தில் பல முறை பயன்படுத்தி இருக்கும் விதம் டைரக்டோரியல் டச்.

நடிப்பில் பிரம்மிக்க வைக்கிறார் தேவயானி .

straw 2

அதுவும் கிளைமாகசில் வில்லன் வீடு புகுந்து கணவனை மிரட்டும் காட்சியில்,  மிரண்டு உறையும்  அந்த பார்வை….  அபாரம்  தேவா!

படம் ஆரம்பிக்கும் விதம் எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது . முதல் பாதி கூட ஒகேதான் . ஆனால் இரண்டாம் பாதியை சொல்லி இருக்கும் விதம்தான் படத்துக்கு நிஜமான வில்லன் .

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் பள்ளிப் பேருந்து ஒன்றில் நடந்த உண்மை சம்பவம்தான் இந்தப் படத்தின் கதை .

ஒழுங்கான பராமரிப்பில்லாத பஸ்… அதற்கு காரணமான பள்ளி நிர்வாகம் என்பது அடிப்படைக் காரணம் .

ஆனால் நடந்த அநியாயத்தை மறைக்க பள்ளி நிர்வாகம் , பள்ளியின் தாளாளன் அரசு இயந்திரம் இவை நடந்து கொள்ளும் விதம் , குற்றவாளிகளின் அலட்சியம் , ஆணவம் , அதிகாரப் போக்கு , பணத்தால் அடிக்க முயலும் விதம்…  இவற்றை நேரடியாக அழுத்தமாக…. படம் பார்ப்பவன் கொதித்துக் கொந்தளிக்கும்படி சொல்ல வேண்டாமா ?

இப்படியா சஜஸ்டிவ் ஆக , இன் டைரக்ட் ஆக , இன்னொருவரின் நேரேடிவ் வெர்ஷன் ஆக…  கடமைக்கு சொல்வது ? நாம் எழுதும் திரைக்கதை,  நமது கதைக்கான நியாயத்தை செய்ய வேண்டாமா ?

straw 1

” என்னப்பா இப்படி பண்ணிட்டீங்களேப்பா..” என்று அலுத்துக் கொள்ளும்படியாகவா செய்வது ? ஓஹோ என்று வந்திருக்க வேண்டிய படம் சறுக்கிய முக்கிய இடம் இதுதான் .

சமுத்திரக்கனி கேரக்டருக்கு பொருத்தமாக இருக்கிறார் . ஆனால் பொருத்தமாக நடிக்கவில்லை . சீரியஸ் காட்சிகளில் நுரை தள்ளி நிற்கிறார் . இவர் மட்டுமா ? வசனகர்த்தா பா. விஜய் எழுதிய சில ஆகச் சிறந்த வசனங்களை நர்சரி ரைம் ஒப்பிப்பது மாதிரி பேசுகிறார் நடிகர் பா.விஜய் .

பேய்ப்படம் என்பதற்காக என்னென்னமோ சொல்லி இவர்களாக கோடு போட்டுக் கொண்டு குழப்பி அடிக்கிறார்கள் .

காலகாலமாக தமிழ் தெலுங்கு பேய்ப் படங்களில் பார்த்து சலித்த கிளிஷேவான கிளைமாக்ஸ் .

நல்ல கருவை எடுத்துக் கொண்டு சரியாக சொல்லாமல் விட்டுவிட்டார்கள் . விளைவு மாப்பிள்ளை சம்பா அரிசியில் ஜுரக் காஞ்சி வைத்த கதையாக போய்விட்டது படம் .

ஸ்ட்ராபரி … ‘ஜவ்வ’ரிசி குச்சி ஐஸ் .

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →