அதையும் தாண்டி புதிதாக மூன்றாவது கட்டத்துக்குப் போகிறார் ஓவியர் ஸ்ரீதர்.
ஓவியர் ஸ்ரீதர்?
கமல்ஹாசன், பாலச்சந்தர் , இளையராஜா ஆகியோரின் அன்புக்கு பாத்திரமான இந்த மனிதர் ஓவியம் புகைப்படம் உள்ளிட்ட கலை விசயங்களில் திறமை மிகுந்தவர் . தயாரிப்பில் இருக்கும் ஆந்திரா மெஸ் படத்தின் மூலம் நடிகராக ஆகி இருப்பவர் .
ஆனாலும் இருக்கிற உற்சாகத்துக்கு அணை போட முடியாத நிலையில், மய்யம் என்ற பெயரில் ஒரு படத்தை – கதை திரைக்கதை எழுதி – தயாரித்து இருக்கிறார் . மய்யம் என்பது கமல்ஹாசன் நடத்தி இருக்கும் பத்திரிகை என்பது முன்பே தெரிந்தவர்களுக்கு , இப்போது ஸ்ரீதர் யார் என்பது புரியும் . கமல்ஹாசன் இந்தப் பெயருக்கு மகிழ்வோடு அனுமதி கொடுத்து இருக்கிறார் .
இந்தப் பெயரே ஒரு படத்துக்கு முதல் அட்ராக்ஷன் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும் .
இந்த கட்டுரையின் ஆரம்ப வரிகளுக்கும் இந்த படத்துக்கும் என்ன சம்மந்தம் ?
இந்த மையம் படத்தின் இயக்குனர் , ஒளிப்பதிவாளர் இசையமைப்பாளர் முதற் கொண்டு நடிகர்கள் உட்பட, இந்தப் படத்தின் அதி முக்கியமான கலை நுட்ப மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவருமே இன்னும் கல்லூரிப் படிப்பை முடிக்காதவர்கள். ”படிப்பு என்றால் திரைப்படக் கல்லூரி படிப்புதானே . அதனால் என்ன? முடிப்பதற்கு முன்பே வாய்ப்பு வந்தால் பண்ண வேண்டியதுதானே?” என்றுதானே கேட்கிறீர்கள் ?
அதுதான் இல்லை .
படத்தின் இயக்குனர் ஆதித்யா பாஸ்கரன் பொறியியல் கல்லூரி நான்காம் ஆண்டு மாணவர்.
இசை அமைக்கும் கே. ஆர் , நடிக்கும் ஹாஷிம் ஜெயின் , ஒளிப்பதிவு செய்யும் ஃபிர்னாஸ் ஹுசைன். உதவி இயக்குனர்கள் நந்த கிஷோர் மற்றும் நமீதா சப் கோட்டா (அப்போ நடிகை நமீதா எந்த கோட்டா என்று கேட்கப்படாது ), பாடகர் பரக் சாப்ரா உள்ளிட்டோர் சினிமா சம்மந்தப்பட்ட விஸ்காம் மற்றும் மீடியா படிப்பு படிப்பவர்கள் என்றாலும் ….
இயக்குனரைத் தொடர்ந்து பாடலாசிரியர் பிரேம் சங்கர், நடனம் ஆடி இருக்கும் ஆர்த்தி பட்நாகர் இருவரும் பொறியியல் பட்டதாரிகள் . மேலும் இரண்டு நடனக்காரர்களான ராஜ் லட்சுமி, அவ்லின் இருவரும் வேறு படிப்புகளுக்கு சொந்தக்காரர்கள் .
அட , அவ்வளவு ஏன் ? ஆடை வடிவமைப்பு செய்திருப்பது, பத்தாம் வகுப்பு மாணவியான வருணா ஸ்ரீதர் .
— என்று ஸ்ரீதரை ‘மய்ய’மாகக் கேட்டால் … “சார் இன்னிக்கு கல்லூரி பசங்கதான் படம் ஓடும்போதே அதை ரீலுக்கு ரீல் விமர்சனம் பண்றாங்க . (இப்படி விமர்சனம் செய்பவர்களை கலாய்க்கும்படியாக இந்தப் படத்துக்கு ரோபோ சங்கரை வைத்து ஒரு டீசரும் ஸ்ரீதர் எடுத்து இருக்கிறார்.ரோபோ சங்கர் இந்தப் படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து இருக்கிறார் )
அதனால இன்னிக்கு புடிக்கிற ஸ்டைல்ல அவங்க ரசனைப்படி எடுக்கிற படம்தான் ஓடும் படம் . அதான் அவங்க டேஸ்டுக்கே எடுக்க வைத்திருக்கேன் . சும்மா சொல்லக் கூடாது . பசங்க கலக்கி இருக்காங்க” என்கிறார் . இயக்குனர் ஆதித்யா பாஸ்கரன் இயக்கிய ”ஓட… ஓட” என்ற குறும்படத்தை பார்த்து பிடித்துப் போய்தான் இந்த வாய்ப்பை அவருக்கு கொடுத்தாராம் ஸ்ரீதர் .
என்ன கதை ?
“ஏ டி எம் இருக்கும் ஒரு வங்கிக்குள் காலை ஆறு மணிக்கு ஆரம்பித்து மறுநாள் காலை ஆறு மணிக்கு முடியும் 24 மணி நேர கதை . வங்கிக்குள் நடக்கும் கொள்ளை மற்றும் கொலையே களம் . மாட்டிக் கொள்ளும் பெண்ணாக நடிகை ஜெய் குஹேனி நடிச்சுருக்காங்க. ஏ டி எம் கொள்ளைகள் கொலைகள் ஏன் நடக்குது? எப்படி நடக்குது ? என்ன மற்றும் எந்தக் குறைபாடுகளால் நடக்குதுன்னு சொல்லி இருக்கோம்.
இப்படியாக , இன்னிக்கு எல்லோருக்கும் தேவைப்படுற ஒரு பயனுள்ள விஷயத்தை சொல்லி இருக்கும் அதே நேரம் காமெடிக்கும் திரில்லுக்கும் பஞ்சம் இல்ல ” என்கிறார் ஸ்ரீதர் .
”படத்துல வேற ஸ்பெஷல்?” என்று டைரக்டரிடம் கேட்ட போது ” ஒரு மூன்றரை நிமிட பாட்டில் தாம்பரம் துவங்கி காசி மேடு வரை உள்ள நம்ம சென்னையின் பல்வேறு காட்சிகளை படம் பிடிச்சு காட்டறோம் . சென்னையின் அடையாளமா அந்தப் பாட்டு அமையும்” என்கிறார் ஆதித்யா பாஸ்கரன் .