
லைக்கா மொபைல்ஸ் நிறுவனங்களின் தலைவரும் ராஜ பக்செவின் நெருங்கிய நண்பர் என்ற தீவிர குற்றச்சாட்டுகளுக்கு உரியவருமான சுபாஷ்கரன் அல்லிராஜா தயாரிக்கிறார் என்ற காரணத்தால்….
விஜய் நடிக்கும் கத்தி படத்துக்கு தமிழகம் உட்பட உலகம் எங்கும் உள்ள தமிழ் உணர்வாளர்களின் எதிர்ப்பு பலமாக வலுத்து வருகிறது .
பிறப்பால் ஈழத் தமிழரான சுபாஷ்கரன் அல்லிரஜா, ராஜ பக்செவின் அரசு மற்றும் குடும்பத்தாருடன் கொண்டுள்ளதாக கூறப்படும் பலமான நட்பு குறித்த குற்றச்சாற்றுகளுக்கு நேரில் வந்து விளக்கம் தருவார் என்று வெகு நாட்களாகவே எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் வரும் பதினெட்டாம் தேதி அன்று கத்தி படத்தின் பாடல் வெளியீடு நடக்க இருக்கும் சூழலில், பதினாறாம் தேதி சென்னைக்கு வந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் சுபாஷ்கரன் அல்லிராஜா .
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, கென்யா, உள்ளிட்ட உலக நாடுகளில் தான் செய்து வரும் சமூக சேவைகள் உதவிகள் பற்றி அவரே எடுத்திருந்த செய்திப் படத்தை போட்டுக் காட்டியவர், அதன் கடைசி அங்கமாக தன் மீது கூறப்படும் குற்றசாட்டுகளுக்கான விளக்கங்களையும் அந்தப் படத்தின் மூலம் விளக்கினார்
இலங்கை அரசின் ஆதரவில் நடந்த பொது நல வர்த்தக மன்ற கூட்டத்தில் ராஜ பக்சே பேசியதன் பின்னணியில், லைக்கா மொபைல்ஸ் நிறுவனத்தின் சின்னத்தை சிலர், வேண்டும் என்றே பொருத்தி அதன் மூலம் இலங்கை அரசோடு லைக்கா மொபைல்ஸ் நிறுவனம் வணிகப் பணிகளுக்கு அப்பாற்பட்டு தான் நெருக்கமாக இருப்பதாக, தனக்கு அவப் பெயரை வெளியிட்டுள்ளனர் என்றும் அது குறித்து சென்னை சைபர் கிரைம் குற்றப் பிரிவில் இப்போது புகார் கொடுக்கப்பட்டதற்கான அத்தாட்சியையும் காட்டினார்.
இலங்கை ராணுவ ஹெலிகாப்டரின் மூலம் தான் சுற்றுப் பயணம் செய்வது போன்ற ஒரு புகைப்படத்தை வைத்து தன்னை இலங்கை அரசுக்கு நெருக்கமானவன் என்று காட்டுவது பற்றிய விளக்கத்தில் “அது இலங்கை ராணுவ ஹெல்காப்டர் அல்ல . எல்லோருக்கும் பொதுவான ஹெலிடூர்ஸ் என்ற நிறுவனத்தின் வாடகை ஹெலிகாப்டர் ” என்று கூறியதோடு அதில் பயணம் செய்ததற்காக பில்களையும் காட்டினார்
ராஜ பக்செவின் மகனுடன் தான் செல்லும் நடைப்பயணம் பற்றிய புகைப்படக் குற்றச் சாட்டுக்கு பதில் அளிக்கும் விதமாக “பீ ஃபி சாரிட்டி வாக் ‘ என்ற அந்த நடைப்பயணம் கிரிக்கெட் வீரர் இயான் போத்தம் தலைமையில் கவாஸ்கர் , கங்குலி உட்பட பல கிரிக்கெட் வீரர்களும் பிரமுகர்களும் கலந்து கொண்ட நிகழ்வு. அதில் எல்லோரும் போல நானும் இருக்க அந்த எண்ணிக்கையில் ஒருவராக ராஜபக்சேவின் மகன் இருந்தார். அதை வைத்து எனக்கும் அவருக்கும் நெருக்கம் என்பது அபாண்டம் ” என்றார் .
இதுவரை எல்லாமும் சரியாகத்தான் போய்க் கொண்டு இருந்தது . ஆனால் அடுத்து வந்த கேள்வி மழைக்கு அவர் விரித்த பதில் குடைகள் … தானாகவே உண்மைகளுக்கு உரைகல்லாக மாறின
ஆரம்பக் கேள்விகளை நானே கேட்டேன் .

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு பல உதவிகள் செய்வதாக செய்திப் படத்தில் காட்டினீர்கள். இந்தியாவில் இருந்து நாங்கள் கொடுத்த உணவு , உடை , மருந்துகளை தமிழர்களுக்கு தராத சிங்கள அரசு…. போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ இருந்த செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர்களை அடித்து விரட்டிய சிங்கள அரசு …. தமிழ் மக்களை சந்திக்கப் போன இங்கிலாந்துப் பிரதமர் டேவிட் கேமரூனையே முறைத்துக் கொண்டு சில பகுதிகளுக்கு மட்டும் அனுப்பிய சிங்கள அரசு … உங்களை மட்டும் எல்லா தமிழர் பகுதிகளுக்கும் அனுப்பி உதவி செய்ய வைக்கிறதே .. அந்த மர்மம் என்ன ?
மற்ற எல்லோரும் அரசியல் ரீதியாக அங்கே நுழைகிறார்கள். நான் அரசியல் ரீதியானவன் அல்ல. சமூக சேவை செய்யப் போனேன் . மக்களுக்கு உதவப் போனேன். அதனால் என்னை அனுமதித்தார்கள்
அப்படியானால் செஞ்சிலுவைச் சங்கம் அரசியல் ரீதியானது என்கிறீர்களா ?
நான் அரசியல் ரீதியாக போகவில்லை என்று சொல்கிறேன் . மற்றவர்களைப் பற்றி நான் ஒன்றும் சொல்லவில்லை . சில தீய சக்திகள் எங்களைப் பற்றி தவறான கருத்து பரப்புகிறார்கள்
தீய சக்தி என்று யாரை சொல்கிறீர்கள்?
(சிறு அமைதி ) எனது தொழில் எதிரிகளை சொல்கிறேன் . மற்றபடி நான் மக்களுக்கு உதவப் போனதால் என்னை இலங்கை அரசு அனுமதித்தது.
அப்படியானால் அரசியல் நோக்கம் இல்லாமல் யாராவது இலங்கைத் தமிழர்களுக்கு உதவப் போனால் அவர்களை ராஜபக்சே அனுமதிப்பார் என்று நீங்கள் உறுதி கொடுக்கிறீர்களா?
அதை அவர்தான் சொல்ல வேண்டும் . நான் எப்படி சொல்ல முடியும் ?
மீண்டும் மீண்டும் உங்கள் பதில்களில் அந்த பொருள்தானே இருக்கிறது ?
அனுமதிப்பார் என்று நம்புகிறேன் .

தொடர்ந்து மற்ற பத்திரிக்கையாளர்களும் கேள்விகளைத் தொடர்ந்தார்கள் .
வடக்கு கிழக்கில் தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண அரசு இருக்கும்போது அவர்களோடு இணைந்து இந்த உதவிகளை செய்யலாமே . அப்படி செய்ய விடாமல் உங்களை தடுப்பது எது ?
அரசு இருக்கிறது . அரசியல் செய்ய பலர் இருக்கிறார்கள். நான் உதவி செய்யப் போகிறேன்.
அப்படியானால் அவர்கள் ஆதரவு உங்களுக்கு வேண்டாமா ?
வேண்டாம் .
ராஜ பக்சேவின் பணத்தில்தான் நீங்கள் படம் எடுக்கிறீர்களா?
எனது இரண்டு நாள் வருமானம்தான் கத்தி படத்தின் மொத்த பட்ஜெட்டே . அப்படி இருக்க இதற்கு ஏன் நான் ராஜபக்சேவிடம் பணம் வாங்க வேண்டும் . அவர் ஏன் தமிழ் படத்தை எடுக்க வேண்டும். ஒருவேளை கருத்து ரீதியாக அவருக்கு ஏற்ற படமாக இருந்தால் கூட இந்தக் குற்றச்சாட்டில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால் கத்தி போன்ற ஒரு கமர்ஷியல் படத்தை அவர் ஏன் தமிழில் எடுக்க வேண்டும்? நினைத்தால் அவர் இந்தியில் படம் எடுக்க முடியாதா ?
உங்கள் லைக்கா மொபைல் நிறுவனத்தில் ராஜபக்சேவோ அவரது குடும்பத்தாரோ பங்குதாரர்களா?
நிச்சயமாக இல்லை
இலங்கை அரசின் ஆதரவில் நடந்த பொது நல வர்த்தக மன்ற கூட்டத்தில் ராஜ பக்சே பேசி வெகு காலம் ஆகி விட்டது . கத்தி படம் ஆடியோ ரிலீஸ் வரை வந்து விட்ட நிலையில் இப்போதுதான் அந்தக் கூட்டம் பற்றிய புகைப்படத்தில் உங்கள் நிறுவன பெயரை சிலர் தவறாக பயன்படுத்தி புகைப்படம் தயாரித்து அவதூறு செய்வதாக புகார் செய்கிறீர்கள் . உங்கள் பக்கம் நியாயம் இருந்தால் அப்போதே புகார் செய்து இருக்கலாமே ?
பிசினசில் பிசியாக இருந்ததால் முடியவில்லை . தவிர எனது லைக்கா மொபைல் நிறுவனம் குறித்து உலகம் எங்கும் உள்ள தமிழர்கள் அறிவார்கள். ஆனால் இந்திய தமிழர்கள் அறியாமல் இருப்பது ஆச்சர்யமாக உள்ளது.
உங்கள் மீதான குற்றச்சாட்டுகள் அடுத்தடுத்து வந்த போதெல்லாம் அமைதியாக இருந்து விட்டு இப்போது ஒட்டு மொத்தமாக லிஸ்ட் போட்டு மறுப்பு தெரிவிப்பது ஏன் ?
வியாபார விஷயமாக பல நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இருந்ததால் முடியவில்லை.
இந்த விசயத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் ஆதரவு கேட்டு, அவரை சந்திப்பீர்களா?
இல்லை எனக்கு உங்கள் ஆதரவு போதும்
.