சூப்பர் டீலக்ஸ் @ திரை விமர்சனம்

விஜய் சேதுபதி, சமந்தா  பகத் பாசில் , ரம்யா கிருஷ்ணன், மிஸ்கின், காயத்ரி, மாஸ்டர் அஸ்வின் நடிப்பில் ஆரண்ய காண்டம் இயக்கிய தியாகராஜன் குமார ராஜா இயக்கி இருக்கும்  படம் சூப்பர் டீலக்ஸ் . ஹை கிளாசா ? ஓட்டை உடைசலா ? பேசுவோம் .

கல்யாணம் செய்து கொள்ள முடியாமல் போன காதலன் ரொம்ப நாளைக்கு பிறகு பேச , அவனை வீட்டுக்கு வரச் சொன்னதோடு அவனுடன் உடல் உறவும் கொள்கிறாள் ஒரு பெண் (சமந்தா ) . அந்த உறவின் முடிவில் காதலன் செத்துப் போக , வீட்டுக்கு வரும் — நடிகர் ஆகும் முயற்சியில் உள்ள-  கணவனிடம் ( பகத் பாசில்) நடந்த உண்மைகளை அப்படியே சொல்கிறாள் .

 இருவரும் பிணத்தை எப்படியாவது  ஒழித்து விட்டு விவாகரத்து செய்து கொள்ள முடிவு செய்து விட்டு பிணத்தை மறைக்க கிளம்புகிறார்கள் .

 நாலு சிறுவர்கள் ஒன்று சேர்ந்து ஒருவன் வீட்டில் நீலப் படம் பார்க்க முடிவு செய்து சி டி வாங்கி வந்து போட்டுப் பார்த்தால், படத்தில் வருவது ஒரு சிறுவனின் அம்மா.  டிவியை உடைத்து விட்டு வெளியே ஓடும் அவன் , தன் அம்மாவை கொலை செய்யப் பாய, தடுக்கி விழுந்து குத்திக் கொண்டு உயிராபத்துக்குப் போகிறான் .

 கல்யாணம் செய்த சில நாட்களில் கணவன் ஓடிப் போக , ஒரு பிள்ளையைப் பெற்று போராடி அந்த பெண் (காயத்ரி)  வாழ , அப்பாவின் வருகைக்காக சூட்டிகையான மகனும் (மாஸ்டர் அஸ்வின்) காத்திருக்க, வரும் அப்பா முழுக்க முழுக்க திருநங்கையாக மாறி சேலை கட்டிய பெண்ணாக (விஜய் சேதுபதி)  வந்து நிற்கிறார் .

 சுனாமியில் சிக்கிய இந்து மதத்தைச் சேர்ந்த  ஒருவர் (மிஸ்கின்)  இயேசுவின் சிலையைப் பிடித்து தப்பியதால் கிறிஸ்துவராக மாறி பிரார்த்தனை மட்டுமே செய்து யாரையும் குணப் படுத்த முடியும் என்று நம்பி , போதனை செய்கிறார் .

உடைந்து போன டிவிக்கு பதில் புது டிவியை வாங்கி வைக்காவிட்டால் அப்பா கொன்று விடுவார் என்று நண்பன் அழ, எதாவது ரவுடியிடம் சேர்ந்து திருட்டு அல்லது கொலை செய்து பணம் பெற்று டிவி வாங்க முடிவு செய்து , சிறுவர்கள் ஒரு ரவுடியிடம் சிக்கிக் கொள்கிறார்கள் . 

திருநங்கை  தன் மகனின் ஆசைப் படி மகனோடு பள்ளிக்கு செல்ல பல அவமானங்களுக்கு ஆளாவதோடு , ஒரு போலீஸ் அதிகாரியின் (பக்ஷ்) பாலியல் வக்கிரத்துக்கு ஆளாகிறார் . மனம் நொந்து போய் குடும்பத்தை பிரிந்து மீண்டும் மும்பைக்கே போக முடிவு செய்கிறார் . 
பாலியல் படத்தில் நடித்த பெண்ணின் கணவர்தான் மத போதகர் . மகனை காப்பாற்ற பணத்துக்கு பெண் அலைய , இவரோ பிரார்த்தனை செய்தே காப்பாற்ற எண்ணி பிரார்த்தனை செய்கிறார் . மகனோ  அம்மாவை மன்னிப்பதாக இல்லை.

ரவுடியிடம் சிக்கிய சிறுவர்களால் பணம் ஈட்ட முடியவில்லை . அடி உதை அவமானம் !

திருநங்கையை பாலியல் வக்கிர கொடுமைக்கு ஆளாக்கிய போலீஸ் அதிகாரியிடம் பிணத்தை மறைக்க முயலும் ஜோடி மாட்ட, திருநங்கையையே அந்த பாடுபடுத்திய அந்த  வக்கிரன் இளம் பெண்ணை விடுவனா ?

 பிணத்தை நானே அழித்து  விடுகிறேன் . ஆனால் அதன் பின் நான் கூப்பிடும்போது எல்லாம் உறவுக்கு வர வேண்டும் என்கிறார் . 
கணவனும் அவளிடம் அட்ஜஸ்ட் செய்துக்கோ என்கிறான் . 
ஆனால் அவளோ ‘ செத்துப் போனவன்  என் பழைய காதலன் அதனால் உறவு கொண்டேன். அதுக்காக கண்டவன் கூட எல்லாம் போக நான் என்ன ஐட்டமா ? என்னால் முடியாது” என்கிறாள் .

 இந்த எல்லா கதைகளும் எப்படி ஒன்றன் விளைவால் ஒன்று பாதிக்கப்பட்டு முடிந்தது அல்லது தொடர்ந்தது என்பதே  இந்த சூப்பர் டீலக்ஸ் . 

படமாக்கல் மற்றும் கதை சொல்லல் ரீதியாக மிக வித்தியாசமான படம் . கொண்டாடப் பட வேண்டிய ஒன்று . மாற்றமில்லை ஆனால் என்ன கருமத்தை இந்தப் படம் சொல்கிறது என்பதுதான் பிரச்னை 
கட்டில் கிறீச்சிட உடல் உறவு நடக்கும் காட்சியில்தான் படம் துவங்குகிறது . ஆரண்ய காண்டமும் அப்படிதான் துவங்கியது . அந்த கட்டிலை இல்லை இல்லை கட்டில் ரசனையை மாற்றக் கூடாதா இயக்குனரே ?

 பழைய காதலன் வீட்டுக்கு வந்த உடன் அவனோடு உடல் உறவு வரை போய் ,  அவன் செத்துப் போக , வீட்டுக்கு  வந்த கணவனிடம் ஜஸ்ட் லைக் தட் எல்லாமும் சொல்லி, அதற்காக அவன்  திட்டும்போது, ‘நான் தான் நடந்த உண்மையை மறைக்காமல் சொல்லிட்டேன் ல. அப்புறம் என்ன ‘ என்று சொல்வதன் மூலம் நியாயம் கற்பித்துக் கொள்கிறாள் .

ஆக,  உண்மையை ஒத்துக்க சம்மதம்னா  இருந்தால் எதுவுமே தப்பில்லை .. டோடோடோய்ங்… தென்பாண்டி சீமையிலே  தேரோடும் வீதியிலே..

 அது மட்டும் அல்ல சிக்கிக் கொள்ளும் போலீஸ்காரனிடம் கூட அப்படியே எல்லாத்தையும் சொல்வாளாம் . அரைவேக்காட்டுக் கதாபாத்திரம் . 

இன்னொரு பக்கம்  நாம் பொதுவில் சரி என்று நம்பிக் கொண்டு இருக்கும் பல பிம்பங்களுக்கு எதிராக இந்த படம் எழுப்பும் எதிர்க் கேள்விகள் அபாரம்.சாதி, மொழி, தேசம், கண்காணிப்புக் கேமரா , உள்ளிட்ட விசயங்களில் பகத் பாசில் கதாபாத்திரத்தின் மூலம் தியாகராஜன் குமாரராஜா எழுப்பும் கேள்விகள் நம்மை சிந்தனை அதிர்ச்சிக்கு ஆளாக்குகின்றன .

 ஒரு சில அபத்தம் என பின்னர் உணர்ந்தாலும் பெரும்பாலான சிந்தனைகள் கொண்டாட வைக்கின்றன . ஒரு நிலையில் அப்படி கேள்விகள் கேட்கும் கேரக்டர், தனக்கே இருக்கும் சுயநலம் காரணமாகவே இப்படி கேள்வி எழுப்புகிறேன் என்று சொல்வது அபாரம் . அட்டகாசம் . அசத்தல் .

திருநங்கையிடம் பாட்டி சொல்லும்  நியாயம் வேறு நடைமுறை வேறு என்ற அளவில் அந்த சிந்தனையை  நிறுத்தி ஏற்றுக் கொள்ள வைப்பது சரியா ? நியாயத்தை நோக்கி நடைமுறையை நகர்த்துவது தானே சிறப்பான தேவையான விஷயம் தியாகராஜன்  குமாரராஜா ?

 தேச பக்தி மொழிப் பற்று சாதி வெறி எல்லாம் ஒன்று என்று சொல்லும் இதே படத்தில்தான் சான்சே இல்லை என்ற பழக்கமான வார்த்தைக்கு பதில் வாய்ப்பே இல்லை என்று தமிழில் சொல்லி கைதட்டல் வாங்குகிறார் இயக்குனர்    

திருநங்கை கேரக்டரில் அபாரமான நடிப்பில் விஜய் சேதுபதி . வாழ்வில் அடிபட்டு நொந்து நைந்து போன அந்த குரல்… மென்மையான பேச்சு , தயக்கம் நிறைந்த முக பாவனைகள் என்று அசத்துகிறார் .

ரசித்து ரசித்து  மடிப்புக் கோலி புடவை கட்டும் விதம் அபாரம் விஜய சேதுபதி . மகன் முன்னிலையில் இன்ஸ்பெக்டர் தொடும் போது விஜய் சேதுபதி காட்டும் பாவனைகள் மிக சிறப்பு  . 

பழைய பாடல்களை படம் முழுக்க , வித்தியாசமான கோணத்தில் பயன்படுத்தி அசத்தி இருக்கிறார் இயக்குனர் . 

திருநங்கையின் மகனாக மாஸ்டர் வினோத் மனசுக்குள் சிம்மாசனம் போட்டு உட்காருகிறான். 

எளிய வசனங்கள், முக பாவனைகள் , டைமிங் இவற்றின் மூலம் நகைச்சுவையையும் சிறப்பாக கொண்டு வருகிறார் தியாகராஜன் குமாரராஜா .

 யுவன் சங்கர் ராஜாவின் இசை , பி எஸ் வினோத், நீரவ் ஷா இருவரின் ஒளிப்பதிவு, விஜய் ஆதிநாதனின் கலை இயக்கம் இவற்ற்ன் கூட்டணியில் இயக்குனரின் படமாக்கல் அபாரம் . 
மிஸ்கின் பிரார்த்தனை செய்யும் காட்சிகள், இன்ஸ்பெக்டர் பக்ஷ் சீண்டும் காட்சிகள் இவற்றின் எக்ஸ்ட்ரா நீளம் இரண்டும் களைப்பை தருகின்றன .

 இவ்வளவு தூரம் ஆழமாக யோசிப்பவர், இன்ஸ்பெக்டருக்க்கான முடிவை உருவாக்கி இருப்பதில் கோட்டை விட்டிருக்கிறார் .

 படம் முழுக்க பத்து நிமிடத்துக்கு ஒரு தடவை வசனம் அல்லது காட்சியில் ஆபாசம் , வக்கிரம் அல்லது அதெல்லாம் இயல்புதானே  என்ற பசப்பல் வந்து கொண்டே இருக்கிறது . அதுதான்  அக்கிரமம்.

”அந்தக் காலத்தில் மனுஷன் துணியே போடாம இருந்தான் . இன்னும் நூறு வருஷம் கழிச்சு போடுவானா என்று தெரியவில்லை. அதனால நான் அந்த மாதிரி படத்தில் நடிச்சத பத்தி கவலைப் படாதே” என்று கிளைமாக்சில் அரிய  தத்துவம் ஒன்றை மகனிடம் அம்மா உதிர்க்கிறார் . அத்தோட நிறுத்திகிட்டதுக்கு ரொம்ப நன்றி . ”அடுத்த தடவை பாக்கும்போது முழுசா பாரு” என்று சொல்லலியே …

வாழ்க்கை என்பது நம் இஷ்டப்படி  வாழ்வதல்ல . நம்மை நம்பி இருப்போர் , நம்மை நேசிப்போர் , நம்மால் நேசிக்கப்படுவோர் துடிதுடித்துப் போகாத அளவுக்கான ஒரு வாழ்வை நாம் செதுக்கிக் கொள்வதே வாழ்க்கை என்ற அற்புத உணர்வை  இது போன்ற அரை வேக்காட்டு சிந்தனைகள் எவ்வளவு ஈஸியாக உடைத்து விடுகின்றன . கொடுமை.

 கேட்டால் ஏ சர்டிபிகேட்தானே . வயது வந்தவர்கள் பார்த்தால் போதுமே என்பார்கள் . அடேய் .. அவங்க மட்டும் ஏன் இப்படிப்பட்ட குருத்து சொல்லும் குப்பைகளை பார்க்கணும்.? பெண்கள் இந்தப் படத்தை தியேட்டரில் வந்து உட்கார்ந்து மனம் கோணாமல் பார்க்க முடியுமா? விஜய் சேதுபதி படம் என்று நம்பி வருவோர் கதி என்னாவது ?

இந்த ஆபாசக் குப்பை கதைகளை எல்லாம் விட்டு விட்டு , விஜய் சேதுபதி நடித்து இருக்கும் அந்த திருநங்கை கதையை மட்டும் எடுத்துக் கொண்டு , படமாக்கலில் வக்கிரத்தை விலக்கி அதையே ஒரு இரண்டு மணி நேரப் படமாக எல்லோரும் பார்க்கும்படி  எடுத்து இருந்தால் அது மிகச் சிறந்த படைப்பாக இருந்திருக்கும் .

 என்ன செய்ய … தியாகராஜன் குமாரராஜாவுக்கு  கிறீச்சிடும் கட்டில்கள்தானே பிடிக்கிறது .

சூப்பர் டீலக்ஸ் … விபச்சார விடுதியின் கறைகள் படிந்த அறை .


மகுடம் சூடும் கலைஞர்கள்

——————————————–

சேதுபதி, மாஸ்டர் அஸ்வின் 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *