லிங்கா திரைப்படத்தை வெளியிட்ட – திரையிட்ட வகையில் விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தில் சுமார் முப்பத்தைந்து கோடியை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று சம்மந்தப்பட்ட விநியோகஸ்தர்களும் திரையரங்கு உரிமையாளர்களும் பல்வேறு போராட்டங்களில் இறங்கினார்கள்
அதைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கமும் நடிகர் சங்கமும் இணைந்து, பாதிக்கப்பட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, ஒரு நிலையில் ” பத்து கோடி ரூபாயை மட்டும் நஷ்ட ஈடாகத் தர முடியும்” என்றதும் …. அதனால் யாருக்கும் எந்தப் பலனும் ஏற்படாது என்ற நிலையில் அவர்கள் ரஜினி வீட்டின் முன்பு பிச்சை எடுக்கும் போராட்டம் அறிவித்ததும் பழைய செய்தி .
இந்தப் பிரச்னையில் ரஜினி சார்பில் தலையிட்ட திருப்பூர் சுப்பிரமணியம் “12.50 கோடி வாங்கிக் கொள்ளுங்கள். வேந்தர் மூவீஸ் தயாரிக்கும் படம் ஒன்றில் அன்புள்ள ரஜினிகாந்த், குசேலன் படங்களைப் போல குறைந்த நாட்கள் கால்ஷீட் கொடுத்து ரஜினிகாந்த் நடிப்பார். அதில் பாதிக்கப்பட்ட எல்லோரும் துணைத் தயாரிப்பாளர்களாக இருந்து லாபம் பெற்றுக் கொள்ளலாம் “என்று கூறியதால்…
அந்தப் பணத்தை பெற்றுக் கொள்ள விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் சம்மதித்திருக்கிறார்கள் . லிங்கா பிரச்னை முடிவுக்கு வந்து விட்டது என்றும் நம்பி இருக்கிறார்கள்.
ஆனால்…..
‘தருவதாக சொன்ன 12.5 கோடியில் 5 கோடியே 89 லட்சத்தை மட்டும் கொடுக்கப்பட்டது ; மீதம் தரவேண்டிய 6 கோடியே 61 லட்ச ரூபாய் தரப்படவே இல்லை . அந்தப் பணம் எங்கே போனது என்றே தெரியவில்லை’ என்பதுதான்……
பாதிக்கப்பட்ட வின்யோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டுக் குழு இப்போது வைக்கும் குற்றச் சாட்டு.
இது தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்த குழுவின் சார்பாக பேசிய விநியோகஸ்தர் சிங்கார வேலன் ” தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ் தாணு , மற்றும் ரஜினியின் தூதுவரான திருப்பூர் சுப்பிரமணியம் இருவரின் கூட்டு சதி இது ” என்கிறார் .
கொஞ்சம் விளக்கமாகவே கேட்போம் .

“லிங்கா படத்தால் சென்னை ஏரியாவில் நான்கரை கோடி, கேரளா ஏரியாவில் நான்கு கோடி , இது தவிர நாங்கள் சம்மந்தப்பட்ட தமிழகத்தின் மற்ற ஏரியாக்களில் 33.5 கோடி , ஆக 42 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. . குறைந்தது இருபத்தைந்து கோடியாவது எங்களுக்கு திரும்பக் கிடைத்தால்தான் எங்களால் ஓரளாவாவது மூச்சு விட முடியும் என்ற நிலைமை.
நாங்கள் பிச்சை எடுக்கும் போராட்டம் அறிவித்த நிலையில் 12.5 கோடி ரூபாய் பணம் மற்றும் ரஜினி நடிக்கும் ஒரு படத்தில் தயாரிப்பில் பங்குதாரராக வாய்ப்பு என்று சொன்னதால்தான், மிகக் குறைவான தொகையான இந்த 12.5 கோடியை பெறவே ஒப்புக் கொண்டோம் .
அதன்படி “லிங்கா படத் தரப்பில் இருந்து 12.5 கோடி பணம் வந்து விட்டது . இன்னும் ஓரிரு நாளில் எல்லோருக்கும் பணத்தை திருப்பிக் கொடுப்போம்” என்று எஸ் தாணு , பத்திரிகையாளர்கள் முன்னிலையில் வெளிப்படையாக அறிவித்தார். ஆனால் 5 கோடியே 89 லட்சத்தை மட்டும் கொடுத்து விட்டு மீதம் தரவேண்டிய 6 கோடியே 61 லட்ச ரூபாயை தரவே இல்லை .
தாணுவிடம் நாங்கள் மீதிப் பணத்தை கேட்டபோது அவர் ‘திருப்பூர் சுப்பிரமணியத்திடம் இருக்கிறது . அவரிடம் கேளுங்கள்” என்றார் . திருப்பூர் சுப்பிரமணியத்தை போனில் கேட்டால் ‘பணம் மதுரை கோபுரம் பிலிம்ஸ் அன்புச் செழியனிடம் இருக்கிறது . இன்னும் சில நாளில் தருகிறேன்’ என்றார் . சில நாள் கழித்து மீண்டும் போன் செய்து கேட்டால் ‘பணமா ? அதெல்லாம் ஒன்றும் இல்லை’ என்றார்.

‘இன்னும் சில நாளில் தருவதாக சொன்னீர்களே…’ என்று கேட்டால் ‘அதெல்லாம் கதை. சும்மா சொன்னேன் ‘என்றார். (திருப்பூர் சுப்பிரமணியம் போனில் பேசுவதை பதிவு செய்திருந்த சிங்காரவேலன் அதை பத்திரிகையாளர்களிடம் போட்டுக் காட்டினார் . ரஜினி அனுப்பிய தூதுவர் சுப்பிரமணியம் மாற்றி மாற்றிப் பேசுவது செம காமெடியாக இருக்கிறது . )
கலைப்புலி எஸ் தாணுவும் திருப்பூர் சுப்பிரமணியமும் எங்களுக்கென்று வாங்கிய 6 கோடியே 61 லட்ச ரூபாய் பணத்தை தராமல் ஏமாற்றி விட்டனர் . “என்று நேரடியாக குற்றம் சாட்டுகிறார் சிங்காரவேலன்.
இதுமட்டுமல்ல .. மேற்கொண்டு பேசும் சிங்காரவேலன் “பொதுவாக படம் வாங்க விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளரிடம் பணம் கொடுக்கும்போது , பணத்தின் ஒரு சிறு பகுதியை மட்டும் பின் தேதியிட்ட காசோலையாக தருவது வழக்கம். அப்படி எல்லோரும் லிங்கா படத்துக்கும் கொடுத்து இருந்தோம் படம் நஷ்டம் என்று ஆனதும் அந்த தொகையை தயாரிப்பாளருக்கு தரவில்லை . செக்குகளை பவுன்ஸ் ஆக செய்து விட்டோம்.
லிங்கா பிரசனை நஷ்ட ஈடு பேச்சு வார்த்தையின் போது அந்த பவுன்ஸ் ஆன தொகையை தரத் தேவை இல்லை என்று வேந்தர் மூவீஸ் சார்பில் சொன்னார்கள் . ஆனால் இப்போது அந்த வாக்கு மீறி வழக்குப் போடுகிறார்கள் .

ரஜினி எங்களுக்கு படம் செய்து தருவதாக சொன்ன விசயத்தைதான் இப்போது தாணு தனக்கு என்று வஞ்சகமாக மாற்றிக் கொண்டு மெட்ராஸ் பட இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தை தனது சுயநலத்துக்காக தான் தயாரித்து காசு சம்பாதிக்கப் பார்க்கிறார் ” “என்று வருந்துகிறார் சிங்காரவேலன்
சரி இப்போது இவர்கள் முன்வைக்கும் முக்கியக் கோரிக்கைகள் என்ன ?
முதல் கட்ட நிவாரணத் தொகை 12.5 கோடியில், கொடுக்கப்பட்ட 5 கோடியே 89 லட்சம் போக, மீதம் தரவேண்டிய 6 கோடியே 61 லட்ச ரூபாய் உடனடியாக தரப்பட வேண்டும் .
ரஜினியின் சார்பாக அவர் அனுப்பிய தூதர் திருப்பூர் சுப்பிரமணியம் சொன்னபடி ரஜினி எங்களுக்கு ஒரு படம் நடித்துத் தரவேண்டும் . அது முடியாவிட்டால் எங்கள் மொத்த நஷ்டமான 33.5 கோடியில் மேற்சொன்ன 12.5 கோடி ரூபாய் போக , மீதம் உள்ள 20 கோடி ரூபாயில் பதினைந்து கோடி மட்டுமாவது எங்களுக்கு கிடைக்க வேண்டும் .

ஆக,முதலில் சொன்ன 6 கோடியே 61 லட்சம் அதோடு இந்த 15 கோடி ஆக மொத்தம் 21 கோடியே 61 லட்சம் கிடைத்தால்தான் , லிங்கா படத்தால் பாதிக்கப்பட்டு தெருவில் நிற்கும் தமிழ்நாடு விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள், ஓரளாவாவது தப்பிப் பிழைக்க முடியும். எனவே நாங்கள் மீண்டும் போராட்டத்தில் இறங்கப், போவது உறுதி. என்ன போராட்டம் என்பதை இன்னும் ஒரு வாரத்தில் அறிவிப்போம் ” என்கிறார்கள் இந்த விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் .
இந்த விவரங்களை பத்திரிக்கையாளர்களிடம் விளக்க தாங்கள் ஏற்பாடு செய்த கூட்டத்தை நடத்த விடாமல், தாணு தனது தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியைப் பயன்படுத்தி அதிகார துஷ்பிரயோகம் செய்தார் என்றும் குற்றம் சாட்டுகிறார் சிங்கார வேலன்.
அது பற்றிக் கூறும் சிங்கார வேலன் ” நாங்கள் இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பை சென்னை வடபழனி ஆர்.கே.வி ஸ்டுடியோவில் உள்ள அரங்கில் நடத்த திட்டமிட்டு இருந்தோம். அதற்காக அங்கே பணம் கட்டி ரசீதும் பெற்று இருந்தோம் .
ஆனால் இன்று காலை ஆர் கே வி ஸ்டுடியோ உரிமையாளருக்கு போன் செய்த தாணு , ‘அவங்க நடத்துற பத்திரிகையாளர் சந்திப்புக்கு இடம் கொடுத்தால் . எந்த தயாரிப்பாளரும் உங்கள் ஸ்டுடியோவை பயன்படுத்தக் கூடாது என்று தடை போட்டு விடுவேன் . உங்களை தொழில் செய்ய விடமாட்டேன் ‘ என்று மிரட்டி இருக்கிறார். அதனால் உரிமையாளர் கடைசி நேரத்தில் எங்களுக்கு இடம் இல்லை என்று கூறி கைவிரித்து விட்டார் . எனவே அவசர அவசரமாக மாற்று இடம் ஏற்பாடு செய்து இங்கு நடத்துகிறோம். ” என்றார் சிங்காரவேலன் .
முன்னரே பணம் பெற்றுக் கொண்டு கடைசி நேரத்தில் அனுமதி மறுத்த ஸ்டுடியோ உரிமையாளர் மீது வழக்கப் போடவும் போகிறதாம் இந்த விநியோகஸ்தர் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டுக் குழு .
ஹும்ம்ம்ம்!
ஒருவன் ஒருவன் சுழற்றுகிறான்.
எத்தனை பம்பரங்கள் சுழல்கின்றன .