சினிமா மட்டுமல்லாது சமூக சேவை , விளையாட்டு உள்ளிட்ட பல்துறைகளிலும் சாதனை புரிபவர்களை தேர்ந்தெடுத்து வருடம்தோறும் விருது வழங்கி வருகிறது ஆங்கில இதழான WE மேகசின் (WOMEN EXCLUSIVE).
இந்த ஆண்டு புகைப்படக்கலைஞர் வெங்கட்ராம், டென்னிஸ் வீராங்கனை அபிநிகா, பின்னணிப் பாடகியும் கலைவாணரின் பேத்தியுமான என் எஸ் கே ரம்யா , விளம்பர மாடல் பிரதாயினி, நடிகைகள் சரண்யா பொன்வண்ணன் , நடிகர்கள் ஜெயப்பிரகாஷ் மற்றும் பாபி சிம்ஹா , மூளை வளர்ச்சி மாற்றுத்திரனாளியும் நடிப்பு விளையாட்டு உள்ளிட்ட பல்துறை வித்தகனாக கரண், ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் , மற்றும் பத்திரிகை தொடர்பாளர் நிகில் முருகன் , இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இவர்களுடன் நடிகர் விஜய்யின் அம்மாவும் பாடகியுமான ஷோபா சந்திரேகருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
இவர்களில் கரன் , சரண்யா பொன்வண்ணன், ஜெயப்பிரகாஷ், கார்த்திக் சுப்புராஜ், நிகில் முருகன் போன்றோர் விருது பெற்றுப் பேசிய பேச்சுகள் மிகவும் சிறப்பாக இருந்தன. கரணின் அம்மா “உங்களுக்கு இப்படி ஒரு வளர்ச்சிக்குறைபாடு உள்ள குழந்தை பிறந்தால்.. ‘ஒன்றுக்கும் ஆகாது’ என்று நீங்களே ஒதுக்கி விடாதீர்கள் . குறைந்த பட்சம் அவர்களாக தனிப்பட்ட முறையில் இயங்கும் சூழ்நிலையையாவது ஏற்படுத்திக் கொடுங்கள்” என்று கூறியது நம்பிக்கையூட்டும் நெகிழ்ச்சியாக இருந்தது
Sublime Arpeggio (கம்பீரமான இசை நரம்பு) என்ற விருது பெற்ற ஷோபா சந்திரசேகருக்கு விருதினை டாக்டர் கமலா செல்வராஜும் பூர்ணிமா பாக்கியராஜும் வழங்கினார்கள் .
ஷோபாவை வாழ்த்திப் பேசிய பூர்ணிமா பாக்கியராஜ் “சூப்பர் ஸ்டார் விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் ” என்று கூறி வாழ்த்தினார்.
நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் பாலாஜி, ஷோபா சந்திரசேகரிடம் ” அப்போ பரபரப்பான இயக்குனரா இருந்த எஸ் ஏ சந்திரசேகரோட மனைவி . இப்போ பரபரப்பான நடிகர் விஜய்யின் அம்மா . ஆக ரொம்ப காலமாகவே நீங்க ஒரு பரபரப்பான பெண்மணியாதான் இருந்தீங்க . இருக்கிறீங்க . உங்களால எப்படி இந்த அளவு நேரம் ஒதுக்கி பாட முடியுது ?” என்றார் .
பதில் சொன்ன ஷோபா ” அதுக்கு காரணம் என் கணவர்தான் . அவர் கொடுத்த ஒத்துழைப்புதான் . ஆரம்பத்துல இளையராஜா சாரோட குழுவில வாசித்தபோது , எனக்காக ரிக்கார்டிங் தியேட்டருக்கு வந்து அவரும் அப்போ குட்டிப் பையனா இருந்த விஜய்யும் பல நாள் தியேட்டருக்கு வெளிய வெயிட் பண்ணி இருக்காங்க . நான் உள்ள ரிக்கார்டிங்ல இருப்பேன் . தியேட்டருக்கு வெளிய விஜய்க்கு வேண்டிய எல்லாத்தையும் அவரே கவனிச்சுக்குவார். கொஞ்சம் கூட ஈகோ பார்க்காத அவரோட குணம்தான் என்னை இசையில் நிம்மதியா இயங்க வைத்தது “என்றார்.
இசை பட இன்னும் வாழ்க!