தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் (பெப்சி –FEFSI –Film Employees Federation of South India) என்பது தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் (பெப்டா – FEFTA – Film Employees Federation of TAmilnadu ) என ஆறு மாதத்துக்குள் மாறும் ” என்ற தேனினும் இனிய செய்தியை, சேரனின் ‘சினிமா…வீட்டுக்கே !’ நிகழ்ச்சியின் அறிமுக விழாவில் சொல்லி இருக்கிறார், சம்மேளனத்தின் தலைவர் நண்பர், இனமான அமீர் .
உணர்வுள்ள அனைவரும் ஒன்று திரண்டு ஆதரிக்க வேண்டிய விஷயம் இது
இதற்குப் பின்னால் ஒரு பெரிய வரலாறே உண்டு.
சுமார் ஐம்பத்தைந்து வருடங்களுக்கு முன்பாக மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது…
முறைப்படி தமிழ் நாட்டோடு இணைக்கப்படவேண்டிய ராயலசீமாவின் தென்பகுதி, சித்தூர் , புத்தூர், நகரி , நந்தி மலை , வேலூர் மாவட்டத்தின் ஒரு பகுதி ஆகியவை அநியாயமாக ஆந்திராவுடன் இணைக்கப்பட்டன.
முறைப்படி தமிழ்நாட்டோடு இணைக்கப்படவேண்டிய திருவனந்தபுரம் , நெய்யாறு , நெடுமங்காடு பகுதிகள் , பீர்மேடு , வண்டிப் பெரியாறு , அன்றே ஆண்டுக்கு பலகோடி வருமானம் தந்த குமுளி வனப்பகுதி ஆகியவை…. அராஜகமாக கேரளாவுடன் இணைக்கப்பட்டன.
முறைப்படி தமிழ்நாட்டோடு இணைக்கப்பட வேண்டிய பெங்களூர், காவிரி உருவாகும் குடகு மலை போன்ற பகுதிகள் அக்கிரமாக கர்நாடகாவுடன் இணைக்கப்பட்டன.
இந்தப் பகுதிகள் எல்லாம் நியாயமாக தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டு இருந்தால் தென்னிந்தியாவின் பெரிய மாநிலமாக தமிழ்நாடு இருந்திருக்கும்.கர்நாடகா அளவுக்குத்தான் ஒன்றுபட்ட ஆந்திராவே இருந்திருக்கும் . கேரளா அளவுக்கு கர்நாடகம் சுருங்கி இருக்கும். மூன்று நான்கு யூனியன் பிரதேசங்கள் சைசுக்குதான் கேரளா இருந்திருக்கும் .
அப்படி நடந்தால் நாம் உருப்படுவது கஷ்டம் என்று உணர்ந்த அந்தந்த மாநிலத்தவர்கள்… திட்டமிட்டு மத்திய அரசில் காய்களை நகர்த்தி வஞ்சகமாக அந்தப் பகுதிகளை தங்கள் பகுதிகளாக்கி. உண்மையான தமிழகத்தை உடைத்து நொறுக்கி அள்ளிக் கொண்டு போக, மிச்சமுள்ள பகுதி மட்டுமே இன்றைய தமிழ்நாடு என்று ஆனது .
தமிழ் நாட்டில் அப்போது இருந்த திராவிட நாடு கோரிக்கையை வெறுத்த மத்திய அரசு, தன் கோபத்தை இப்படி தமிழ் மண் மீது காட்டியது . அதே நேரம் திராவிட இயக்கமும் ஐந்து மாநிலங்களையும் கட்டி ஆளும் திராவிட நாடு கனவுக்கு பங்கம் வரக் கூடாது என்பதற்காக , இப்படி தமிழ்நாட்டின் பகுதிகள் மற்ற மாநிலங்களால் அபகரிக்கப்படுவதை வேடிக்கை பார்த்தது .
அன்றைய தேசியவாதிகளும் தேசியத்தின் பெயரால் ‘குளமாவது மேடாவது… எந்தப் பகுதி எங்கே இருந்தால் என்ன?’ என்று … மற்றவர்களுக்கு தமிழர்கள் மேல் இருக்கும் வஞ்சம் தெரியாமல் பேசினர் .
அப்படி மாநிலங்கள் உருவான உடன் அந்தந்த மாநிலங்களில், அதிகாரத்தில் – பதவியில் இருந்த தமிழர்கள் அடித்து விரட்டப்பட்டனர். ஆனால் இங்கே திராவிடநாட்டுக் கனவுகளும் தேசிய கனவுகளும், மற்ற மாநில ஆட்கள் இங்கே மேலும் கொழித்து, தமிழர்களையே சுரண்ட வழி செய்து கொடுத்தன இன்று வரை அதுவே தொடர்கிறது .
விளைவாக இன்றும் தமிழகத்தின் கல்விக் களம் ஆந்திரர்களின் அந்தப்புரமாக இருக்கிறது . தமிழகத்தின் தொழில் களம் கர்நாடகத்தினரின் களமாக இருக்கிறது. தமிழகத்தின் வனத்துறை கேரளத்தவரின் வசந்த மண்டபமாக இருக்கிறது
மொழிவாரி மாநிலங்கள் உருவாவதற்கு முன்பு கலை , தொழில் , வணிகம் என்று எல்லா விதத்திலும் தென்னிந்திய என்ற அமைப்பின் கீழ் இருந்த மற்ற மாநிலங்கள், பிரிந்த பிறகு தத்தமக்கென இன மொழி அடையாளத்துடன் தனி அமைப்புகளை உருவாக்கின.
மெட்ராஸ் மாகாண ஹை கோர்ட் என்பது பிரிந்து கர்னாடக உயர்நீதி மன்றம், கேரளா உயர்நீதி மன்றம், ஆந்திர உயர்நீதி மன்றம் என்று உருவாகின. ஆனால் தமிழ்நாடு உயர்நீதி மன்றம் இன்னும் உருவாகவில்லை. சென்னையில் இருப்பது இன்னும் (இப்போது உயிருடன் இல்லாத — பழைய ) மெட்ராஸ் (மாகாண) ஹை கோர்ட்தான் .
கர்னாடக உயர்நீதி மன்றம், கேரளா உயர்நீதி மன்றம், ஆந்திர உயர்நீதி மன்றம்… அங்கெல்லாம் அவர்களது தாய்மொழியில் வாதாடுவதற்கு முன்னுரிமை தரப்படுகிறது . ஆனால் நம் உயர்நீதி மன்றத்தில் தமிழில் வாதாட முடிவது இல்லை. தமிழ்நாடு என்ற பெயரில் பெயர்ப்பலகை வைக்கவே அனுமதி இல்லை.
தென்னிந்திய வர்த்தக சபை பிரிந்து ஆந்திர வர்த்தக சபை , கேரளா வர்த்தக சபை , கர்நாடக வர்த்த சபை என்று உருவாகின. ஆனால் தமிழ்நாடு வர்த்தசபை உருவாக வில்லை . மாறாக இது தென்னிந்திய வர்த்தக சபையாகவே தொடர்கிறது . அதில் மற்ற மாநிலத்தவரின் ஆதிக்கமும் இருக்கிறது. அதே நேரம் மற்ற மாநில வர்த்தக சபைகளில் தமிழர்களுக்கு எந்த உரிமையும் இல்லை.
தென்னிந்திய திரைப்பட வர்த்த சபை பிரிந்து ஆந்திர திரைப்பட வர்த்தக சபை, கேரளா திரைப்பட வர்த்த சபை , கர்நாடக திரைப்பட வர்த்தக சபை என்று உருவாகின . ஆனால் தமிழ்நாடு திரைப்பட வர்த்தக சபை உருவாகவில்லை. மாறாக அது இன்னும் தென்னிந்திய திரைப்பட வர்த்த சபையாகவே இருக்கிறது .
இந்த வருடம் கூட அதற்கு ஒரு மலையாளியைக் கொண்டு வந்து தலைவராகப் போட்டு இருக்கிறார்கள்.
தென்னிந்திய நடிகர் சங்கள் பிரிந்து ஆந்திர நடிகர் சங்கம், கேரள நடிகர் சங்கம் , கர்னாடக நடிகர் சங்கம் என்று தனியாக உருவாகின. ஆனால் தமிழ்நாடு நடிகர் சங்கம் உருவாக வில்லை. மாறாக அது இன்னும் தென்னிந்திய நடிகர் சங்கமாகவே கிடக்கிறது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வீர பாண்டியக் கட்ட பொம்மன் படத்துக்காக,— அன்றைக்கு ஆஸ்காருக்கு இணையாக கருதப்பட்ட —தென் கிழக்கு ஆசியாவின் சிறந்த நடிகருக்கான ‘தங்கப் பருந்து’ விருது பெற்ற பிறகு….
பென்ஹர் படத்தில் கதாநாயகனாக நடித்த சார்ல்டன் ஹெஸ்டன் உட்பட பல ஹாலிவுட் நடிகர்கள் சிவாஜியின் நடிப்பை பாராட்டி சிவாஜியை உட்கார வைத்து தாங்கள் நின்று கொண்டு குரூப் போட்டோ எடுத்துக் கொண்ட பிறகு ….
உலகமே கொண்டாடும் ஹாலிவுட் நடிகர் மார்லன் பிராண்டோ “SIVAJI CAN ACT LIKE ME . BUT I THINK .. I CAN’T ACT LIKE SIVAJI ” என்று மனம் திறந்து பாராட்டிய தகவல்கள் எல்லாம் வந்த பிறகு …..
பிரபல ஹாலிவுட் இயக்குனர் டேவிட் லீன் “அந்த இந்திய நடிகர் (சிவாஜியை சொல்கிறார்) மட்டும் வெள்ளையராக இருந்திருந்தால் எனது பல படங்களில் அவர்தான் ஹீரோவாக இருந்திருப்பார் ” என்று சொன்ன பிறகு….
நயாகரா நகரத்தின் ஒரு நாள் கவுரவ மேயராகவே சிவாஜி நியமிக்கப்பட்ட பிறகு ……
எகிப்தின் அன்றைய அதிபர் நாசர் ” இனி சிவாஜி கணேசன் என் குடும்ப நண்பர் ” என்று சந்தோஷமாக அறிவித்த பிறகு…
இத்தனைக்கும் பிறகு …
ஒரு மலையாளப் படத்தில் நடிக்கப் போன சிவாஜியை, அவர் மலையாள நடிகர் சங்கத்தில் உறுப்பினர் இல்லை என்பதற்காக படப்பிடிப்பை நிறுத்தி, அவரை அந்த நடிகர் சங்க ஆபீசுக்கு கொண்டு போய் ஒரு மணி நேரம் காக்க வைத்து, உறுப்பினர் கார்டை கொடுத்து அப்புறம் ஷூட்டிங் போகச் சொன்னார்கள் .
ஓடிவந்து ஷூட்டிங் ஸ்பாட்டில் உறுப்பினர் கார்டை மரியாதையோடு கொடுத்திருக்க முடியாதா? தென்னிந்திய நடிகர் சங்கத்தை வளர்த்த சிவாஜிக்கே இதுதான் நடந்தது.
இதையெல்லாம் மறைத்து விட்டு இப்போதும் சிலர் “எம்ஜிஆர் சிவாஜி எல்லாம் உருவாக்கி வளர்த்த தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரை மாற்றுவது அவர்களுக்கு செய்யும் அவமரியாதை ” என்று சிலர் செப்புகிறார்கள்.. ஆனால் சிவாஜிக்கு கேரளாவின் மலையாள சலனப் பட நடிகர்கள் சங்கம் செய்த அவமரியாதை பற்றி மாட்லாடுவதே இல்லை.
தவிர “எம்ஜிஆர் சிவாஜி எல்லாம் உருவாக்கி வளர்த்த தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரை மாற்றுவது அவர்களுக்கு செய்யும் அவமரியாதை ” என்று இப்போது பேசுவது என்பது “எம்ஜிஆர் ஆரம்பத்தில் காங்கிரசில்தான் இருந்தார் . எனவே எம்ஜிஆர் தொண்டர்கள் இனி அதிமுகவுக்கு ஓட்டுப் போடாதீர்கள். காங்கிரசுக்கே போடுங்கள்” என்று சொல்வது போன்ற வாதம்தான் .
ஆனால் அப்படி அவர்கள் தங்களின் சுயநலத்துக்காக சொல்கிறார்கள் .
இந்த வரிசையில்தான் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனமும் வருகிறது.
மற்ற மாநிலங்களில் எல்லாமே அந்தந்த மாநிலத்தின் பெயரால் இருப்பதால் அரசின் உதவிகள் கிடைக்கிறது . அனால் இங்கே இன்னும் தென்னிந்திய என்ற பெயரில் இருப்பதால், அடையாளமற்று இருக்கும் நிலையை மாற்றவே இந்த மாற்றம் என்று ஒரு பலன் ரீதியான காரணம் கூறப்பட்டாலும், அதையும் மீறி நியாயமான காரணங்கள் பல உண்டு.
வீரம் படத்தின் ஹைதராபாத்தில் ஷூட்டிங் நடந்தபோது, ஒரு சண்டைக் காட்சியில் பெப்சி அமைப்பை அதாவது தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தை சேர்ந்த தொழிலாளர்கள் கலந்து கொள்ள, அங்கு வந்த ஆந்திர திரைப்பட தொழிலாளர் சம்மேளன ஆட்கள் “எங்களை வைத்துதான் சண்டை எடுக்க வேண்டும்” என்று தகராறு செய்தனர்.
“இது தென்னிந்திய அமைப்புதான்” என்று நம்ம ஆட்கள் சகோதரத்துவத்துடன் கூறியும் …”என்னங்கடா புண்ணாக்கு தென்னிந்தியா .. இது ஆந்திராடா வெண்ணைகளா !” என்று பெரும்போடு போட்டு ஷூட்டிங்கையே நிறுத்தி ஆட்டம் காட்டி விட்டார்கள்.
எனவே இனி யார் தடுத்தாலும் எல்லாவற்றையும் தமிழ்நாட்டின் பெயரில் மாற்றுவது தவிர்க்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.
எனவே தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் (பெப்சி –FEFSI –Film Employees Federation of South India) என்பதை தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் (பெப்டா – FEFTA – Film Employees Federation of TAmilnadu ) என்று மாற்றி விட்டால்…
ஒரு முறை இயக்குனர் விக்ரமன் பாராட்டிக் கூறியது போல புரட்சித் தலைவர் எம்ஜிஆர் உருகொடுத்த திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் நவீன புரட்சித் தலைவனாக இயக்குனர் அமீர் ஆகி விடுவார் என்பதில் சந்தேகம் இல்லை. இது நடந்தால் நடிகர் சங்கம் , வர்த்தக சபை ஆகியவற்றின் பெயரிலும் இருக்கும் ‘தென்னிந்திய ‘ என்ற அழுகிய பிணத்தின் அடையாளம் அழிந்து தொலைக்கும்.
ஒரு நல்ல மாற்றத்தின் முதல் வெற்றிக்கு முயலும் அமீருக்கு இன உணர்வுள்ள எல்லோரும் இதய அன்போடு கை கொடுப்போம் .