அமைதிப் படை 2, கங்காரு படங்களைத் தயாரித்தவர் சுரேஷ் காமாட்சி. இயக்குனர் ஆகும் லட்சியத்துகாகவே சினிமாவுக்கு வந்த இவர், பாரதி கண்ணம்மா உள்ளிட்ட வெற்றிப் படங்கள் தந்த பங்கஜ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி பிறகு அமைதிப் படை 2 மூலம் தயாரிப்பாளராக ஆனார்.
அடுத்து இவர் தயாரித்த கங்காரு படம் அண்மையில் வெளி வந்து பாசப் படையல் என்ற பெயரைப் பெற்றது.
இந்த நிலையில் சூட்டோடு சூடாக அடுத்த படத்தை தயாரிக்கும் தயாரிக்கும் சுரேஷ் காமாட்சி, அந்தப் படத்தை தானே இயக்குகிறார்.
அத்தனைக்கும் ஆசைப்படு என்று பெயரிடப்பட்டு இருக்கும் இந்தப் படத்தின் நாயகனாக முன்னணி ஹீரோ ஒருவர் நடிக்க, நாயகியாக கங்காரு படத்தில் நடித்த ப்ரியங்கா நடிக்க, கங்காரு படத்தில் வந்ததை விடவும் சிறப்பான ஒரு முக்கிய வேடத்தில் சுரேஷ் காமாட்சி நடிக்கிறார். ராஜரத்னம் ஒளிப்பதிவு செய்ய, சீனிவாஸ் இசையமைக்கிறார்.
” கொஞ்சம் தாமதமாக என் இயக்குனர் ஆசை நிறைவேறுகிறது.படம், முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ளது.
தலைவர் மேதகு பிரபாகரனின் வீரப் புதல்வனும் துப்பாக்கிக் குண்டுக்கு சற்றும் அஞ்சாமல் கம்பீர மரணம் அடைந்த பாலச்சந்திரன் பெயரில் , பாலச்சந்திரன் படைப்பகம் என்ற எனது இன்னொரு நிறுவனத்தின் சார்பில் தயாரித்து இயக்குகிறேன். அடுத்த வாரம் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது.
ஈரோடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தவிருக்கிறோம்,” என்கிறார், அய்யா மணிவண்ணன் வழியில் உருவாகி வரும் அடுத்த இனமான இயக்குனர் சுரேஷ் காமாட்சி .
மனப்பூர்வமான வாழ்த்துகள் அண்ணா !