இயக்குநர் பாண்டிராஜின் பசங்க புரடக்ஷன்ஸ் நிறுவனமும் சூர்யாவின் 2D எண்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்க, சூர்யா, பிந்துமாதவி, வித்யா ஆகியோர் நடிப்பில் பாண்டிராஜ் எழுதி இயக்கி இருக்கும் படம், ஹைக்கூ என்று முதலில் பெயர் வைக்கப்பட்டு பின்னர் மாற்றப்பட்ட பசங்க – 2
படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் மேற்சொன்னவர்களோடு படத்தின் ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியெம், இயக்குநர் பாண்டிராஜ் மற்றும் படத்தின் தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா பேசும்போது, “சமீபத்தில் பெய்த பேய் மழையும், இதனால் ஏற்பட்ட வெள்ளச் சேதமும் சென்னையின் புதிய அடையாளமாக மாறி இருக்கிறது. நிறைய மக்கள் கஷ்டப்பட்டனர். அப்போது நாங்கள் இருக்கிறோம் என்று நூற்றுக்கணக்கான இளைஞர்கள் போர்க் குணத்தோடு வெளியே வந்தனர்.
ஒவ்வொரு வீட்டுக்கும் கழுத்தளவு தண்ணீரில் கூட போய் பால் பாக்கெட் போட்ட ராதா அம்மாவில் இருந்து, முகம்மது யூனுஸ் காப்பாற்றிய தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்து அவர்களை அக்குழந்தைக்கு யூனுஸ் என்று பெயரிட்டிருப்பது வரை.. இவ்வாறு முகம் தெரியாத அத்தனை தன்னார்வலர் நாயகர்களுக்கு தலை வணங்குகிறேன்.
இவர்கள் சென்னையின் புது அடையாளமாக ஆகிவிட்டார்கள். புதிய அடையாளத்தை தேடிக் கொடுத்திருக்கிறார்கள்.
நான் தயாரித்துள்ள இந்த ‘பசங்க-2’ படம் வருகிற 24-ம் தேதி வெளியாகிறது. நல்ல கதை ஒன்றை படமாக தயாரிக்க முடிவு செய்து காத்திருந்தேன். அப்போது பாண்டிராஜ் ஸார் போன் செய்து கதை சொல்லணும் என்றார். நான் அப்போது கோவாவில் ஷூட்டிங்கில் இருந்தேன்.
வாங்க என்று நான் சொன்ன உடனேயே கோவாவிற்கு விமானம் மூலமாக வந்து சேர்ந்தார். கதையை சொன்னார். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனே தயாரிக்க முடிவு செய்தேன்.
இயக்குநர் பாண்டிராஜ் பல ஆண்டுகளாக இந்த கதையோடு வாழ்ந்துள்ளார் என்றுதான் கூற வேண்டும். அவர் இந்த கதையை உருவாக்க 3 முதல் நான்கு ஆண்டுகள் எடுத்துக் கொண்டு கிட்டதட்ட ஓர் ஆராய்ச்சியே செய்து இருக்கிறார்.
என் குழந்தைப் பருவம் அப்பாவுடனும், அம்மாவுடனும் விளையாட்டிலும் மகிழ்ச்சியாக கழிந்தது. ஆனால் இப்போதைய குழந்தைகளை அறைக்குள்ளேயே அடைத்து வைக்கிறோம். வெளியே விடுவதில்லை. இதனால் அவர்களது மனநிலை மாறுகிறது. பாதிக்கப்படுகிறது. அந்த விஷயங்களெல்லாம் இந்த படத்தில் இருக்கிறது.
குழந்தைகளும், பெற்றோரும் பார்க்கும் படமாக இது தயாராகி உள்ளது. பெற்றோர்கள், ஆசிரியர்கள், டாக்டர்கள் என பலரிடம் கலந்தாய்வு செய்து அவர்கள் சொன்ன சம்பவங்களை வைத்து இந்த படத்தை உருவாக்கியுள்ளோம்.
நாம் நம்முடைய குழந்தைகளுடன் அதிக நேரம் செலவழிக்க வேண்டும் என்பதை இப்படம் வலியுறுத்தும். இந்த படம் உங்கள் அனைவரையும் கவனிக்க வைக்கும். படத்தில் உள்ள அனைவரையும் ஒன்று சேர்த்தது படத்தின் கதைதான் என்பதில் மாற்றும் கருத்தே இல்லை.
நான் இயக்குநரிடம் படத்துக்காக அவர் கொடுத்த கதையை அப்படியே எடுக்க வேண்டும் என்று கூறினேன். ஏன் என்றால் கதையில் அவ்வளவு நல்ல விஷயங்கள் இருந்ததது.
ஒன்றரை மணி நேரப் படத்தை வேறு வழி இல்லாமல் எடுத்து வெளியே வைக்கும் அளவுக்கு அவ்வளவு நல்ல விஷயங்கள் நிறைய உள்ளன . நிச்சயம் படம் அனைவரையும் கவரும்.
”குழந்தைகளிடம் மதிப்பெண்களை எதிர்பார்ப்பதை விட மதிப்பான எண்ணங்களை எதிர்பார்க்கணும்”…”“70 கிலோ உருவம் 10 கிலோ உருவத்தை அடிப்பது எவ்வளவு பெரிய வன்முறை!” என்பவை உட்பட, படத்தில் உயிரோட்டமான வசனங்கள் உள்ளன. எனக்கும், இந்த படத்தில் நல்ல கதாபாத்திரம் அமைந்துள்ளது.
ஒரு குழந்தையை எப்படி சிரிக்க வைக்க முடியும் என்ற காட்சிகளை என் மூலம் டைரக்டர் வைத்துள்ளார். பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் பாடமாக இந்த படம் இருக்கும்.
பொதுவாக இளைஞர்களுக்கான படங்களே அதிகம் வருகின்றன. குழந்தைகள், வீட்டில் இருக்கும் பெண்களுக்கான படங்கள் குறைவாக வருகிறது. இது போன்ற வித்தியாசமான படங்கள் தமிழில் நிறைய வர வேண்டும். ‘தங்கமீன்கள்’, ‘காக்கா முட்டை’ படங்கள் அதுபோல் வந்திருந்தன.
குழந்தைகள் படம் பார்க்க ஆசைப்பட்டால், ‘கார்ட்டூன்’ படங்களுக்குத்தான் அழைத்து போக வேண்டிய நிலைமை உள்ளது. அவர்களுக்கான ஒரு நல்ல படமாக ‘பசங்க-2’ இருக்கும். என் ரசிகர்கள் வழக்கமான என்னுடைய படம் என்ற எதிர்பார்ப்புடன் வர வேண்டாம்.
இது குழந்தைகள் படம். ஆனால் ரசிகர்களும் இந்த படம் மூலம் நிறைய கற்றுக் கொள்ளலாம்.அவர்களுக்கு திருமணம் ஆகி குழந்தைகள் வரும்போது இந்தப் படம் அவர்கள் வாழ்க்கைக்கு உதவும் படமாக இருக்கும்
எப்போதும் நான் நடிக்கும் படங்களிலெல்லாம் 250 பேராவது சூட்டிங் ஸ்பாட்டில் இருப்பார்கள். ஆனால் இந்த ‘பசங்க-2’ படப்பிடிப்பில் வெறும் 15 பேர்தான் இருந்தார்கள். அவ்வளவு எளிமையாக படப்பிடிப்பு நடத்தப்பட்டது.
படத்தில் நடித்த அனைவருக்கும் நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். படத்தில் நாயகியாக நடித்துள்ள பிந்து மாதவி படப்பிடிப்பு தளத்தில் ஒரு நாள் கோலம் போட்டு கொண்டு இருந்தார். திடீரென்று பார்த்தால் கிளாப் அடித்து கொண்டு இருப்பார், இப்படி படத்தில் பணியாற்றிய அனைவருமே ஒரு குடும்பம்போல் இருந்து வேலை செய்தார்கள்.. எல்லாம் பாண்டிராஜின் மீது அவர்கள் வைத்த மரியாதையின் அடையாளம்
உண்மையில் இந்தப் படம்தான் எனது 2D எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் முதல் படமாக வந்திருக்க வேண்டும். ஆனால் 36 வயதினிலே முன்னாடியே வந்ததால் இது இரண்டாவதாக வருகிறது ” என்றார்.
நிகழ்ச்சி முடிந்து அரங்கை விட்டு வெளியே வந்த சூர்யாவை கேமராவோடு மறித்த ஒரு தொலைக்காட்சி நிருபர் ” சார், சிம்பு பாடின பீப் சாங் பற்றி உங்க கருத்து என்ன ?” என்றார் .
நல்லவேளை, இளையராஜா அங்கு இல்லை!
ஒரு நிமிஷம் தயங்கிய சூர்யா, கேமராவில் இருந்து சற்றே விலகி “அத பத்தி பேச வேணாம் . தயவு செஞ்சு அதை பிரபலப் படுத்தாதீங்க ” என்றார் .