ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் சூர்யா , நயன்தாரா,ஆர். பார்த்திபன் , சமுத்திரக்கனி, பிரேம்ஜி கருணாஸ் ஆகியோர் நடிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையில் ஆர் டி ராஜ சேகரின் ஒளிப்பதிபில் கே எல் பிரவீனின் படத்தொகுப்பில், ராஜீவனின் கலை இயக்கத்தில், … அப்புறம் .. அப்புறம் … ஆங் ..! வாசுகி பாஸ்கரின் உடை வடிவமைப்பில்….
வெங்கட் பிரபு இயக்கி இருக்கும் படம் மாஸ்ஸ்ஸ்ஸ்ஸ். !
இதை ஒட்டி பத்திரிக்கையாளர்களை சந்தித்தது படக் குழு .
படத்தில் சூர்யாவுக்கு இரட்டை வேடம் . அதில் ஒரு வேடத்தை கொஞ்சம் ரகசியமாக வைத்துள்ளார்கள்.
கருணாசின் முதல் படமான நந்தாவில் ஹீரோ சூர்யா . மீண்டும் சூர்யாவோடு இந்தப் படத்தில் இணையும் கருணாசுக்கு, மாஸ் 101 ஆவது படமாம் .
படத்தின் சில பாடல்களை கம்போடியாவில் படமாக்கி இருக்கிறார்கள் .
பாடல் காட்சி முழுக்க கண் கவர் வண்ணங்களை வாரி இறைத்துள்ளது வெங்கட் பிரபு, ஆர் டி ராஜசேகர் , ராஜீவன் , வாசுகி பாஸ்கர் கூட்டணி.
ஒரு பாடலில் டிராகுலா மாதிரி இரண்டு கோரைப் பற்களை வைத்துக் கொண்டு மிரட்டுகிறார் சூர்யா . ஆனாலும் இது முழுக்க முழுக்க பேய்ப்படம் இல்லையாம் .
முன்னோட்டத்தின் ஆரம்பத்தில் “நான் இப்படி மீண்டு வருவேன்னு எதிர்பார்க்கல இல்ல ? அதுவும் இப்படி வருவேன்னு எதிர்பார்க்கல இல்ல ?” என்று ஒரு வசனத்தை பேசுகிறார் சூர்யா (அஞ்சான் ஹேங் ஓவர்?)
பின்னணி இசையில் பின்னி எடுத்திருக்கிறாராம் யுவன் ஷங்கர் ராஜா .
அதே போல ராஜ சேகரின் ஒளிப்பதிவு இந்தப் படத்துக்கு கூடுதல் பலம் என்றார் வெங்கட் பிரபு . ராஜசேகரின் 25 ஆவது படம் இது .
“குழந்தைகளும் விரும்பும் பெரியவர்கள் படமாகவும் பெரியவர்களும் விரும்பும் குழந்தைகள் படமாகவும் இது இருக்கும் ” என்றார் சூர்யா .
“மாஸ் என்ற ஆங்கில வார்த்தைக்கு வரி விலக்கு கிடைக்குமா?” என்றால் மாஸ் என்பது ஆங்கில வார்த்தை அல்ல . மாசிலாமணி என்ற பெயரின் சுருக்கம் மாஸ் ஆச்சு என்கிறார்கள் .
மாஸ் படம் வரும் 29 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது .