ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே . ஈ. ஞானவளே ராஜா, மற்றும யூ வி கிரியேஷன்ஸ் சார்பில் வம்சி கிருஷ்ணா ரெட்டி, பிரமோத் உப்பலப்பாடி மற்றும் கே வி என் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில்,
சூர்யா, திஷா பதனி , யோகி பாபு , ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்தராஜ், கே எஸ் ரவிக்குமார் , கே ஜி எஃப் அவினாஷ் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கும் படம் கங்குவா . கங்கு என்றால் நெருப்புக் கட்டி . கங்குவா என்றால் நெருப்பின் சக்தி கொண்ட மனிதன் என்பது பொருளாம்
தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவில் நிஷாத் யூசுப் படத்தொகுப்பில் வெளிவரும் இந்தப் படம் சூர்யா கதாநாயகனாக நடிக்கும் 42வது படம் .
சென்னை, கோவா, கேரளா, கொடைக்கானல், இலங்கை , பாங்காக் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ள நிலையில் வரும் நவம்பர் மாதத்திற்குள் படப்பிடிப்பு முடிந்து , அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் படம் வெளியாக உள்ளது. கோவாவில் பெரிய செட் போட்டு படப்பிடிப்பு நடந்து உள்ளது .
இன்றைய நிலையில் இந்தியாவின் ஐந்தாவது பெரிய பட்ஜெட் படம் இது என்கிறார்கள் . அலெக்சா சூப்பர் 35 என்ற நவீன கேமராவை பயன்படுத்தும் இரண்டாவது படம் இது. முதல் படம் லியோ.
அரதர், வெங்காடர், மன்டானகர், முகாதர், பெருமனத்தார் என்று ஐந்து வேடங்களில், மொத்தம் பதி மூன்று தோற்றங்களில் சூர்யா இந்தப் படத்தில் நடிக்கிறார் படத்துக்காக சிக்ஸ் பேக் வைத்துள்ளார்.
பாகுபலி, பொன்னியின் செல்வன் போல கங்குவாவும் இரண்டு பாகங்களாக வர வாய்ப்பிருக்கிறது என்று ஒரு தகவல். 2D மற்றும் 3Dயில் வரும் இந்தப் படம் 350 கோடியில் தயாராகும் நிலையில் இப்போதே ஐநூறு கோடி ரூபாய்க்கு வியாபாரம் ஆகி விட்டதாகவும் , இந்த தொகையைத் தொட்ட முதல் தமிழ்ப் படம் இதுதான் என்றும்ஒரு தகவல் .
இந்த நிலையில் இன்று சூர்யாவின் பிறந்த நாளையொட்டி
கங்குவா படத்தின் சில துளிகள் வெளியிடப்பட்டுள்ளது . இது நேற்று பத்திரிக்கையாளர்களுக்கு திரையிடப்பட்டது .
புகையும் நீரும் வழிந்து நிரம்பி இருக்கும் இடத்தில் மனித உடல்கள் மிதந்து கொண்டிருக்க, புலிகள் நடமாட, அந்தரத்தில் இருந்து நிலமதிரக் குதித்து நெருப்பு அம்புகளின் பின்னணியில் கையில் நெருப்பு ஈட்டி ஏந்தி சுழற்றி எறிந்து, எதிர்த்து வரும் நபரைத் துளைத்து , 1500 ஆண்டுகள் முந்தைய தமிழ் பாடி கடைசியில் நலமா என்கிறார் சூர்யா
பன்மொழிகளில் இந்த காட்சித் தொகுப்பு திரையிடப்பட்டது .
“இது தனது ரசிகர்களுக்கு சூர்யாவின் அன்புப் பரிசு ” என்றார் தனஞ்செயன்.
தமிழ் , தெலுங்கு, மலையாளம் கன்னடம், இந்தி, பெங்காலி, குஜராத்தி , அசாமி, ஒரியா , ஆங்கிலம் என்று பத்து மொழிகளில் படம் வெளியாகும் என நீங்கள் பார்க்கும் முன்னோட்டம் சொன்னாலும் , “இப்போது அது பனிரெண்டு மொழிகள் ஆகி இருக்கிறது சார். சீன மொழியும் கொரியன் மொழியும் சேர்கிறது “என்றார் சிவா
“நீங்கள் இங்கே பார்ப்பதில் மூன்று ஷாட்கள்தான் படத்தில் இருக்கும் . மற்றது எல்லாம் புரமோஷனுக்காக எடுக்கப்பட்டது. படம் எல்லோரையும் அசத்தும் ” என்றார் 2D என்டர்டைன்மென்ட் ராஜசேகர்