லக்ஷ்மி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணன் தயாரித்து, எழுதி, இயக்க, சேரன், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, ஸ்ரீ பிரியங்கா, லால், அருள் தாஸ், துருவா, தீப்ஷிகா , எஸ் ஏ சந்திரசேகர், நடிப்பில் வெளிவந்திருக்கும் படம்.
இடு/சுடுகாட்டில் பிணைத்து கடைசிச் சடங்குகளும் செய்யும் சலவைத் தொழிலாளி சமூகத்தில் வந்த ஒருவர்( சேரன்) தனது கடைசி வாய்ப்பாக , கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான தேர்வுக்குப் போக வேண்டிய நாளில் ஊரில் ஒருவர் இறந்து விட,
சடங்கு செய்து முடி. தேர்வுக்கு அனுப்புகிறோம் என்று நம்ப வைத்து சடங்கு முடிந்ததும் கை கழுவுகிறது ஆதிக்க சாதிச் சமூக(ம்)ங்கள். மனம் நொந்து சமாதானம் ஆகி பால் மாடு வாங்கி பால் வியாபாரம் ஆரம்பித்தால் எல்லா ஊருக்கும் ‘கீழ் சாதிக்காரனிடம் பால் வாங்க வேண்டாம்’ என்று சொல்லி பிழைப்பைக் கெடுக்கிறது அதே சமூகங்கள்.
இந்த வேலைகளில் தீவிரமாக ஈடுபடும் ஆதிக்க சாதி நபர்களில் முக்கியமானவர் ஒரு ஆதிக்க சாதி நபரும் (லால்) அவரது சகோதரி கணவரும் (அருள்தாஸ்) . ஆனால் ஆதிக்க சாதி நபரின் மகன் ( துருவா) மேற்படி சலவைத் தொழிலாளியின், டாக்டருக்குப் படிக்கும் தங்கையை ( தீப்ஷிகா) காதலிக்கிறான் .
விசயம் அறிந்து ஆதிக்க சாதி நபர்கள் இருவரும் அந்த பெண்ணை நடுத் தெருவில் வைத்து அடித்து நொறுக்கி குற்றுயிரும் குலை உயிரும் ஆக்க, நொறுங்கிப் போகிறார் சலவைத் தொழிலாளி
இந்த நேரத்தில் அந்த ஆதிக்க சாதி நபரின் தந்தை இறந்து விட , அவருக்கு சடங்கு செய்ய முடியாது என்று மறுத்து விடுவதோடு , பக்கத்து ஊர்களில் உள்ள தனது சமூக நபர்களுக்கும் தகவல் சொல்லி விடுகிறார் . எல்லோரும் மறுக்க, கொந்தளிக்கும் ஆதிக்க சாதிக் குடும்பம் போலீஸ் உதவியோடு ஊரில் ஒற்றை வீடாக இருக்கும் சலவைத் தொழிலாளி, அவரது மனைவி ( ஸ்ரீ பிரியங்கா) , அம்மா, தம்பி எல்லோரையும் அடித்து நொறுக்க,
ஒரு காலத்தில் சாதி வெறியராக இருந்து மகளையே கொன்று ஜெயிலுக்குப் போய் வந்த நிலையில் கறுப்புச் சட்டை நபராக மாறும் நபர் ( வேல. ராமமூர்த்தி) , போலீஸ் எஸ் பி ( சுரேஷ் காமாட்சி), வக்கீல் ஒருவர் ( எஸ் ஏ சந்திரசேகரன்) ஆகியோர் உதவ வர,
ஆதிக்க சாதி பொங்கி எழ , நடந்தது என்ன என்பதே படம்.
சாதி ஆதிக்கத்தை ஒழித்து தமிழராக ஒன்று கூட வேண்டும் என்று சொல்லும் நல்ல கதை .
சிறப்பான கிராமிய லொக்கேஷன்கள் அருமை.
எல்லோருமே நன்றாக நடித்துள்ளனர்
கிராமத்தில் கேட்க ஆளில்லாத நிலையில் ஒரு பெண்ணை நடுத் தெருவில் அடித்து வீழ்த்தும் காட்சி பதைபதைக்க வைக்கிறது .
ஆனால் திரைக்கதையில்தான் நேர்த்தி இல்லை. பெரும்பான காட்சிகள் உணர்வாக இல்லாமல் செய்தியாக நகர்கின்றன .
ஒரு மருத்துவக் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டதற்கு மாணவ சமுதாயத்தின் ரியாக்ஷன் என்ன? ஒரு காட்சியில் வீறு காட்டும் சலவைத் தொழிலாளிகள் சங்கம் பிரச்னை பெரிதான போது என்ன செய்தது?
இப்படி யாதார்த்தத்தை தொடர்புப்படுத்தி யோசித்தால் காட்சிக்கு காட்சி கேள்வி கேட்க முடியும் . அதுதான் பெரிய குறை
ஒரு ஊரை எதிர்த்து ஒரு தனி மனிதன் போராடுகிறான் என்ற இரண்டாம் பகுதிக்கு உரிய சரியான காட்சிகள் அமைக்கப்படவில்லை .
கிளைமாக்சில் வரும் காட்சிகளில் உணர்வும் இல்லை அழுத்தமும் இல்லை . அதனால் இந்தப் படத்துக்கு திரையரங்க வெற்றி கிடைக்குமா என்பது கேள்விக் குறியே
தேவையற்ற ஷாட்கள் படம் முழுக்க நிறைய .
சாதி ஒழிப்பு என்ற பெயரில் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான கருத்து வெளிப்படும் கடைசிக் காட்சியாக வருவது கண்டிக்க வேண்டிய விஷயம்
சாதி ஆதிக்கத்துக்கு எதிரான ஒரு படத்தைக் கொடுத்து இருப்பதோடு, தமிழ்நாடு தெலுங்கு மன்னர்களிடம் வீழ்ந்த போதுதான் தமிழர்களின் நிலம் பறிபோனதோடு, சாதிய ஏற்றத் தாழ்வுகளும் வளர்க்கப்பட்டு நிலை நிறுத்தப்பட்டது என்று நேரடியாக உண்மையைச் சொன்ன விதம் பாராட்டுக்குரியது