விழாவில் பேசிய பேரவையின் நிறுவனர்-தலைவர் கவிஞர் வைரமுத்து
தமிழும் ஆட்சி மொழியாக வேண்டும்; தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்; திருக்குறள் தேசியப் பெருமை பெறவேண்டும் என்ற கோரிக்கைகள் புதியவை அல்ல. இன்று அதைச் சொல்கிற குரல்தான் புதியது. உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்; இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர். இவர் இந்தக் கோரிக்கைகளை உயர்த்திப் பிடித்துக் குரல் கொடுக்கிறார் என்பதுதான் தமிழ்நாட்டுக்கு ஆனந்தம் கலந்த ஆச்சரியம்.
வடக்கு என்றாலே தமிழை மறுப்பது; இந்தியை ஆதரிப்பது என்ற கருத்து தருண் விஜய் அவர்களால் இன்று உடைக்கப்படுகிறது. எல்லாவற்றிலும் விதிவிலக்கு உண்டு. எல்லா ரத்தமும் சிவப்பல்ல, வெட்டுக்கிளிக்கு வெள்ளை ரத்தம் என்பதுபோல வடநாட்டார் எல்லாம் தமிழுக்கு விரோதிகள் அல்லர். விதி விலக்காக வாய்த்திருக்கிறார் தருண் விஜய்.
நம்முடைய முன்னோடிகளும், தலைவர்களும் மொழியை ஏன் முன்னிறுத்திப் போராடினார்கள் என்று சிந்தித்துப் பாருங்கள். மொழி இருக்கும் நீளம் வரைக்கும்தான் நிலம் நமக்குச் சொந்தம். ஒரு காலத்தில் தமிழ்பேசும் நிலப்பரப்பு குமரி முனைக்குத் தெற்கே 700 மைல் நீண்டிருந்ததாக அடியார்க்கு நல்லார் தெரிவிக்கிறார். ‘வடவேங்கடம்’ வரைக்கும் நீண்டு கிடந்த தமிழ் நிலம் இன்று வெறும் 50,216 சதுர கிலோமீட்டராகச் சுருங்கிவிட்டது. மொழியை இழந்தால் இருக்கும் சின்னப் பரப்பையும் இழந்துபோவோம்.
இலங்கையில் இனம் அழிக்கப்பட்டு தமிழ்நாட்டில் மொழியும் நசுக்கப்பட்டால் தமிழர்கள் நிலம்-முகம் இரண்டையும் இழந்து போவார்கள். அதிகார மையங்களிலும், கல்வி நிலையங்களிலும், ஊடகங்களிலும் தமிழ் நிலை பெற்றால்தான் நாம் இருக்கும் நிலத்தை இழக்காமல் இருப்போம். இந்த தொலைநோக்கு பார்வைக்கு தோள்கொடுக்க வந்திருக்கும் தருண் விஜய் அவர்களைத் தமிழ் உலகம் பாராட்டுகிறது. அவரது கோரிக்கைகளுக்கு இந்த கூட்டம் கைதட்டிக் கைகொடுக்கிறது. தெற்கே இருந்து வருவது தென்றல், வடக்கே இருந்து வருவது வாடை என்பார்கள். இன்று வடக்கே இருந்து தென்றலாய் வந்தவரை வாழ்த்துகிறோம்” என்றார்
விழாவில் ஏற்புரை வழங்கிய தருண் விஜய் “உத்திரகாண்ட் மாநிலம் டேராடூனில் பிறந்தாலும், தமிழ் அன்னையின் மகனாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இலக்கியங்கள், காப்பியங்கள் நிறைந்த தமிழ் மொழியில் திருக்குறள் ஒரு பொக்கிஷமாகும். திருக்குறளையும், திருவள்ளுவரையும் தெரியாதவர்கள் இந்தியாவை பற்றி தெரிந்திருக்க முடியாது. ஆனால் வட இந்தியர்களான நாங்கள் திருவள்ளுவரின் பெருமை விந்திய மலைக்கு வடக்கே தெரியாமல் மறைத்தோம் . தமிழ் மொழி இனத்தின் பெருமைகள் தடுக்கப்பட்டன . அதை சரி செய்து உரிய அங்கீகாரம் வாங்கித்தருவதே எனது பணி
அதே நேரம் உலக அளவில் பெருமைப்படும் தமிழ் மொழி பிறந்த தமிழ்நாட்டிலேயே, தமிழ் மொழி பேச மறுக்கின்றனர்.
குறிப்பாக சென்னை ஐகோர்ட்டில் தமிழ் வழக்காடு மொழியாக இல்லாதது வருத்தமளிக்கிறது. பாமர மக்களுக்கு புரியாத மொழியான ஆங்கிலத்தில் தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. இமயமலையை விட உயரமான தமிழ்மொழியை நாடு முழுவதும் எடுத்து செல்வதற்காக, முதல் கட்டமாக வடமாநிலங்களில் 500 இடங்களில் தமிழ்மொழி கற்பிக்கும் மையங்கள் வரும் ஜனவரி மாதத்திற்குள் தொடங்கப்பட உள்ளன. அதுவும் டேராடூனில் இருந்து தொடங்கப்படும்” என்றார் .