ஈரானிய அரசால் தடை செய்யப்பட்ட முற்போக்கு இயக்குனர் Jafar Panahi இயக்கிய டாக்சி படம் என்னைப் பொறுத்தவரை ஒரு ஜஸ்ட் ஒகே படம்தான்.
டெஹ்ரான் நகரில் ஒரு நாள் வாடகைக்கார் ஓட்டுனர் என்ற போர்வையில் தன் காரை ஒட்டிச் செல்கிறார் இயக்குனர் பனாஹி. அந்தக் காரில் ஏறும் மனிதர்களின் குணாதிசயம் மற்றும் நிகழ்வுகளே படம் .
கார் டயர் திருடும் ஒருவனை தூக்கில் போடச் சொல்லும் ஒருவன் , அப்படி எல்லாம் செய்யக் கூடாது குற்றத்துக்கான வேர்களைக் கண்டு பிடித்து சரி செய்ய வேண்டும் என்று சொல்லும் ஒரு பெண்மணி, அவளை கேலி செய்யும் அந்த நபர், விபத்தில் சிக்கிய ஒரு நபர், வினோத செண்டிமெண்ட் நம்பிக்கையில் படபடக்கும் மூதாட்டிகள், இயக்குனரின் உறவுக்காரச் சிறுமி, சொந்த ஊர்க்கார நண்பர் , நெருங்கிய தோழியான ஒரு சமூக சேவைப் பெண்மணி இவைகளே அந்தக் கதாபாத்திரங்கள் .
மூதாட்டி தவற விட்ட பர்சை கொடுக்க முயலும் இயக்குனர் மிகப்பெரிய இழப்புக்கு ஆளாவதே படம் . அதன் மூலம் தான் விரும்பும் அளவுக்கு தன் தேசம் நேர்மையாக இல்லை என்பதை உணர்த்துகிறார் இயக்குனர்.
காரின் டேஷ் போர்டில் கேமரா பொருத்தப்பட்ட நிலையில் படம் துவங்க , கடைசிவரை கேமரா அங்கேயே இருக்கிறது என்பது படத்தின் சிறப்பம்சம் .
வசனங்கள் மூலம் ஆங்காங்கே கருத்துள்ள விவாதம் இருக்கிறது .
உள்ளூர் படைப்பாளிகளுக்கு உலகப் படங்களை கொடுக்கும் ஒரு கேரக்டர் படத்தில் வருகிறது . அதில் இருந்து கதை தேடும் இளம் இயக்குனர் ” நான் எல்லா படங்களையும் பார்க்கிறேன் . எல்லா புத்தகங்களையும் படிக்கிறேன் . ஆனால் என் படத்துக்கான கதையை எங்கே எடுப்பது என்றே தெரியவில்லை ” என்று கூற “எழுதிய புத்தகங்கள் எழுதப்பட்டு விட்டன . எடுத்த படங்கள் எடுக்கப்பட்டு விட்டன . நமக்கான கதையை நாம்தான் எழுத வேண்டும் ” என்று கூறுவது கிளாஸ் .
சொந்த ஊர்க்காரரின் அனுபவம் , உறவுக்காரச் சிறுமியின் குறும்பட முயற்சி எல்லாம் அருமை .
ஆனால்….
விபத்தில் சிக்கி காரில் ஏறும் ஒருவனுடன் அவன் மனைவியும் காரில் ஏறும் அந்த எபிசொட்….
மருத்துவமனை போவதற்குள் தான் இறந்து விடுவோம் என்ற நம்பிக்கையில் , இயக்குனரோடு பயணிக்கும் உலகப்பட விற்பனையாளனின் செல் போன் கேமராவில் தனது மரண வாக்குமூலத்தை கணவன் பதிவு செய்கிறான்., “என் மரணத்துக்குப் பிறகு என் சொத்துக்கள் யாவும் என் மனைவிக்கே . என் சகோதரர்கள் அவளை தொந்தரவு செய்யக் கூடாது ” என்று !
மருத்துவமனை அருகே கணவனை ஸ்ட்ரெட்சரில் கொண்டு போகும் போதும் , கணவன் மருத்துவமனையில் உடனடி உயிராபத்து இன்றி பிழைத்துக் கொண்ட பிறகும் , கணவனின் மரண வாக்குமூலப் பதிவை வாங்கி வைத்துக் கொள்வதில் அந்த மனைவி ரொம்ப ஆர்வமாக இருக்கிறாள்.
ஆனால் இந்த விசயத்தை நகைச்சுவையாகவும் , அந்தப் பெண்ணை ஏதோ பணத்தாசை பிடித்தவள் போலவும் இயக்குனர் காட்டுகிறார் . எனக்கு என்னவோ அந்தப் பெண்ணின் செய்கை மிக நியாயமாகவும் புத்திசாலி த்தனமாகவுமே படுகிறது .
ஈரானில் புரட்சி இயக்குனர்கள் கூட பெண்களை பார்க்கும் பார்வையை அந்த கேரக்டர் அப்பட்டமாகக் காட்டியது பெரும் சோகம் . அதனால்தான் .. என்னைப் பொறுத்தவரை டாக்சி .. ஓகேதான் .
டிரைலர் உங்கள் பார்வைக்கு
https://www.youtube.com/watch?v=eM2tblIkL4g
ஒரு கிளிப் உங்கள் பார்வைக்கு
https://www.youtube.com/watch?v=Pl0UJLTtWjE