ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் உதயநிதி ஸ்டாலினை பார்த்து சந்தானம் அடிக்கடி சொல்லும் வார்த்தை… ”நீயெல்லாம் நல்லா வருவடா” .

இப்போது எஸ் ஜி பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிக்க , விமல் , சமுத்திரக்கனி , அமிர்தா என்று பெயர் மாற்றம் செய்து கொண்ட புன்னகைப் பூ கீதா ஆகியோர் நடிக்க சீமானின் தம்பியும் சுசி கணேசனிடம் உதவியாளராகப் பணியாற்றியவருமான நாகேந்திரன் இயக்கும் படத்துக்கு பெயர்…. அதே, ‘நீயெல்லாம் நல்லா வருவடா ‘
‘ஓஹோ… இது முழுக்க காமெடிப் படமோ…?’ என்று பார்த்தால் அதுக்கு நேர் மாறான படம் என்பது படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் தெரிந்தது . ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவில் கே.எல்.பிரவீணின் ஒளிப்பதிவில் ஒரே ஷாட்டில் வரும் அந்த அதிரடி அதகள டிரைலர், ‘இது பக்கா ஆக்ஷன் படம்’ என்று துப்பாக்கி புல்லட் மீது சத்தியம் செய்தது.
இன்டோர் ஸ்டுடியோ, புளூ மேட், மோஷன் கண்ட்ரோல் என்று சுமார் ஐம்பது லட்ச ரூபாய் செலவில் எடுக்கப்படவேண்டிய டிரைலரை அது எதுவுமே இல்லாமல் குறைந்த செலவில் எடுத்து இருக்கிறார்களாம் நம்ம ஊர் தொழில் நுட்பக் கில்லிகள்.
படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் படம் சம்மந்தப்பட்டவர்களோடு லிங்குசாமி, ஜன நாதன் , கரு.பழனியப்பன், மலையன் கோபி, பாண்டியன் , ராமகிருஷ்ணன் போன்ற இயக்குனர்களும் ஜெயம் ரவியும் விருந்தினர்களாக…. நாகேந்திரனுடன் கொண்ட நட்புக்காக வந்திருந்து, நாகேந்திரனை கிண்டல் செய்வது போல ஆரம்பித்து மனதார பாராட்டி பேசினார்கள் .

”இவன்லாம் எங்க படம் எடுக்க போறான்னு நினைச்சேன் . அருமையா எடுத்து இருக்கான்… ” என்பதுவும் ” இவன்லாம் ஒரு ஷாட் கூட ஒழுங்கா வைக்கமாட்டான்னு நினைச்சேன். ஆனா ஒரே ஷாட்டில் அட்டகாசமான டீசரை கொடுத்து அசத்தி இருக்கான் ” என்பதுவும்…ஜஸ்ட் இரண்டு சாம்பிள்கள் .

சமுத்திரக்கனி ஒரு படி மேலே போய் “இவன் வந்து ‘என் படத்துல நீங்கநடிக்கணும்’னு என்கிட்டே சொன்னபோது ‘போடா காமெடி பண்ணாத’ன்னு அனுப்பி வச்சுட்டேன்.
பல தடவை இவன் வந்தும் நான் சம்மதிக்கல .
ஒரு தடவை பேசும்போது ‘அண்ணே.. முன்னலாம் மதுரைல நட்புக்காக கொலை செய்வாங்க . திருநெல்வேலியில் ஜாதிக்காக கொலை செய்வாங்க . கோயமுத்தூர்ல தொழிலுக்காக கொலை செய்வாங்க . திருச்சியில ரவுடியிசத்துகாக கொலை செய்வாங்க . விழுப்புரத்துல அரசியல் கொலை செய்வாங்க. சென்னையில மட்டும்தான் பணத்துக்காக கொலை செய்வாங்க.
ஆனா இப்ப எல்லா ஊருலயும் பணத்துக்காக கொலை செய்ய ஆரம்பிச்சுட்டானுங்க.

முன்னல்லாம் கொலை செய்யப்படுபவனுக்கு நாம எதுக்காக கொலை செய்யப்படுறோம்னு தெரியும்.
இப்போ சாகறவன் எதுக்காக சாகறோம்னு தெரியாமலே சாகறான்.
வீட்ல ஒருத்தன் போலீஸ் அதிகாரியா இருந்தா அந்த வீட்ல உள்ள பலரும் அதிகார மையமா ஆகி குற்றங்கள் பண்றாங்க.
நாட்டில் நடக்கிற பல குற்றங்களுக்கு பின்னால் ஒரு போலீஸ்காரன் இருக்கான் .
இதை அடிப்படையா வச்சுதான் கதை எழுதி இருக்கேன்’ன்னு சொன்னான் .
‘எப்படா ஷூட்டிங் போலாம்?’னு கேட்டேன் ” என்றார் .
ஒரு போலீஸ் அதிகாரி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமான கதாபாத்திரத்தில் சமுத்திரகனியும்,
எப்படி இருக்கக் கூடாது என்பதற்கான கதாபாத்திரத்தில் நானும் நடித்து இருக்கிறேன் என்றவர் … எம். எஸ். பாஸ்கர் !
ஜனநாதன் சார் கடைசிவரை என்கிட்டே கதை சொல்லவே இல்ல . ஆனா பேராண்மை என்ற அற்புதமான படத்தை கொடுத்தாரு . அது மாதிரி நாகேந்திரனும் நல்ல படம் கொடுப்பார்” என்றே ஜெயம் ரவி . (நீங்கள்லாம் நல்லா வந்துட்டீங்க பாஸ் !)