ஸ்டுடியோ கிரீன் புரடக்ஷன்ஸ் சார்பில் கே.ஈ. ஞானவேல் ராஜா மற்றும் ஆதனா ஞானவேல் ராஜா தயாரிப்பில் ஆர்யா , சாயீஷா, இயக்குனர் மகிழ் திருமேனி, சதீஷ் , கருணாகரன் நடிப்பில் சக்தி சவுந்தரராஜன் இயக்கி டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வெளியாகி இருக்கும் இருக்கும் படம் டெடி.
இந்தப் படத்தின் கதையைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பு இன்னொரு படத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
மார்க் லெவி என்பவர் எழுதிய ‘ஈஃப் ஒன்லி இட் வேர் ட்ரூ’ என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு, ரீஸ் விதர் ஸ்பூன் என்ற நடிகையும் மார்க் ரஃப்ஃபலோ என்ற நடிகரும் இணையராக நடிக்க, மார்க் வாட்டர்ஸ் என்பவர் இயக்கி, 2005 ஆம் ஆண்டு வெளிவந்த ஹாலிவுட் படம் ‘ஜஸ்ட் லைக் ஹெவன்’.
மேற்படி’ஈஃப் ஒன்லி இட் வேர் ட்ரூ நாவலை படமாக்கும் உரிமையை ஸ்பீல் பெர்க் வாங்கி வைத்திருக்க அவரிடம் இருந்து உரிமையை பெற்று இதை படமாக்கினார் மார்க் வாட்டர்ஸ் .
செத்துப் போனவர்கள்தான் ஆவியாக வரவேண்டும் என்று இல்லை , கோமா ஸ்டேஜில் உள்ளவர்களும் ஆவியாக ஆன்மாவாக நடமாடலாம் என்ற கதை இந்தப் படம் மூலம் சினிமாவுக்கு அறிமுகம் ஆனது
லாஜிக் இல்லை என்று சொல்லப்பட்டாலும் படமாக்கப்பட்ட விதத்துக்காகவும் நடிகர்களின் நடிப்புக்காகவும் மிகவும் சிலாகிக்கப்பட்ட படம் இந்த ஜஸ்ட் லைக் ஹெவன் .
இந்த ஜஸ்ட் லைக் ஹெவன் படத்தை எடுத்துக் கொண்டு என்றென்றும், இருக்கு ஆனா இல்லை என்பது உட்பட இதுவரை தமிழில் மூன்று படங்கள் வந்துள்ளன .
ஆனால் அவை எல்லாம் சிறிய தயாரிப்பாளர் , இயக்குனர், நடிக நடிகையர் படங்கள் என்பதால் வெளிச்சத்துக்கு வரவில்லை .
அதே ஐடிவை வைத்து , அந்த ஆவி ஒரு டெடி பொம்மையில் புகுந்து பொம்மை நடமாடினால்? கரடி பொம்மை பேசும் படங்களும் ஆங்கிலத்தில் நிறைய உண்டு. மிகப் புகழ் பெற்ற படங்களே முப்பதுக்கும் மேல் உண்டு .
அப்புறம் இருக்கவே இருக்கிறது கிட்னி இதயம் திருட்டுக் கதை . அதில் ஒரு சின்ன இணைப்பு.
அதுதான் டெடி.
மருத்துவமனைக்கு வரும் பின்புலம் இல்லாத நோயாளிகள் மற்றும் விபத்தில் சிக்கியவர்களை குணப் படுத்தாமல் அப்படியே கோமா ஸ்டேஜுக்கு கொண்டு போய்,
உயிரோடு துடிக்கும் அந்த உடலில் இருந்து உயிர்ப்போடு இயங்கும் இதயம், கிட்னி உட்பட உறுப்புகளை அறுத்து எடுத்து கள்ள மார்க்கெட்டில் விற்று சம்பாதிக்கும் சட்ட விரோத மருத்துவக் கும்பலிடம் இளம் பெண் ஒருத்தி சிக்க ,
அவள் உடல் உறுப்புகளை தகுந்த நேரத்தில் அறுத்தெடுத்து விற்க, அவளை கோமா ஸ்டேஜுக்கு கொண்டு போய் விட . அவளது ஆன்மா/ ஆவி/ ஆத்மா ஒரு கரடி பொம்மைக்குள் நுழைந்து , அதீத அறிவாளி இளைஞன் ஒருவனை அடைய ,
கரடி பொம்மை மீது பாசம் வைக்கும் அவன் , இளம் பெண்ணை மீட்க முயல , அதற்குள் அவள் உடலை அசர்பைஜான் நாட்டில் உள்ள பக்கு என்ற ஊருக்கு சமூக விரோதிகள் கடத்தி விட , அப்புறம் என்ன ஆனது என்பதே இந்த இந்த படம்
அட்டகாசமான ஃபிரேம்களில் ஷாட்களில் கவர்கிறார் இயக்குனர் சக்தி சவுந்தரராஜன்.
படத்தில் ஒரு இடத்தில் கூட முகமே காட்டாமல் கரடி பொம்மையாக நடித்து இருக்கும் கோகுலன் உடல் மொழிகளில் அசத்தி இருக்கிறார் . டெடி மூலம் சரியான உணர்வுள்ள பாவனைகளைக் கொண்டு வந்ததற்காகவும் இயக்குனரைப் பாராட்டலாம் .
வரை கலை நிபுணர்கள், கலை இயக்குனர் படத் தொகுப்பாளர் சிவ நந்தீஸ்வரன் ஆகியோர்க்கும் அந்தப் பாராட்டில் பங்கு உண்டு.
குழந்தைகளை ஈர்க்கும் காட்சிகள் படத்தில் உண்டு .
யுவாவின் ஒளிப்பதிவு படத்துக்கு ஒரு மேம்பட்ட தோற்றத்தைத் தருகிறது.
அருமையான பின்னணி இசை கொடுத்துள்ளார் டி. இமான் . பாடல்களும் சிறப்பு
கதாநாயகன் வேடத்துக்கு மிக இயல்பாக நியாயம் செய்கிறார் ஆர்யா. வேலை குறைவு என்றாலும் சாயீஷா மனம் கவர்கிறார் .
வில்லனாக வரும் இயக்குனர் மகிழ் திருமேனி கொடுக்கும் ஆரம்ப பில்டப்புக்கு ஏற்ப காட்சிகள் அவருக்கு அதன்பின் இல்லை . எனினும் குரலும் நடிப்பும் நேர்த்தி
சதீஷ் கிச்சு கிச்சுவுக்கும் கீழே. கருணாகரன் ஜஸ்ட் லைக் தட் .
டெடி அறிமுகக் காட்சி இன்னும் சிறப்பாக இருந்திருக்க வேண்டும். டெடியை வைத்து இன்னும் குழந்தைகளைக் கவரும் காட்சிகள் இருந்திருக்க வேண்டும். டெடியை இன்னும் உயிர்ப்போடு காட்டி இருக்க வேண்டும்..
படத்தில் குழந்தைகளைக் கவரும் காட்சிகள் , சஸ்பென்ஸ், ஆக்ஷன் எதற்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்ற தெளிவிலும் போதாமை தெரிகிறது . கலவைதான் நோக்கம் என்பதிலும் தெளிவு இல்லை
டெடியின் வசனங்கள் எல்லாம் டப்பிங்கில் சும்மா போட்டது போல இருக்கிறது. கவனம் செலுத்தி இன்னும நகைச்சுவை அல்லது குழந்தைமை கொண்டு வந்திருக்கலாம் .
இரண்டாம் பகுதியில் சில பகுதிகள் சும்மா கடமைக்கு நகர்கிறது . மேக்கிங்கில் காட்டிய நேர்த்தியை திரைக்கதையிலும் காட்டி இருக்கலாம்.
எனினும் டெடி குழந்தைகளைக் கவரும்