
எஸ் எஸ் எஸ் மூவீஸ் சார்பில் ஏ எஸ் டி சலீம் மற்றும் அனு மூவீஸ் சார்பில் பி.ரவிகுமார் இருவரும் வழங்க, இயக்குனர் திருப்பதி இயக்கி இருக்கும் படம் திருட்டு ரயில் .
தூத்துக்குடியைச் சேர்ந்த ஐந்து இளைஞர்களுக்கும் ஒரு போலீஸ் அதிகாரிக்கும் பிரச்னை வருகிறது .
தங்கள் பக்கம் எந்த தவறும் இல்லாத நிலையிலும், ‘ எதற்கு வம்பு…..? சென்னைக்கு போய் நிம்மதியாக பிழைத்துக் கொள்ளலாம்’ என்று அந்த ஐந்து இளைஞகர்களும் திருட்டு ரயில் ஏறி சென்னைக்கு வருகிறார்கள்.
வந்த இடத்தில் ‘தூத்துக்குடி விவகாரமாவது பரவாயில்லை’ என்று நினைக்கும் அளவுக்கு சென்னையில் மீண்டும் போலீசுக்கும் அவர்களுக்கும் ஒரு பெரிய பிரச்னை ஏற்படுகிறது . ஒரு நிலையில் தூத்துக்குடியில் பிரச்னை செய்த அதே அதிகாரியே இங்கும் அவர்களை துரத்துகிறார் .
புதிய இடம் .. முன்னிலும் பெரிய சிக்கலான பிரச்னை என்று சிக்குக்கொள்ளும் அந்த ஐந்து இளைஞர்களின் கதி என்ன ஆனது என்பதுதான் படத்தின் கதை என்கிறார் இயக்குனர் .
சமூகத்தில் இன்றைய நிலையில் பொதுவாக தனி மனிதர்கள் எப்படி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று இந்தப் படம் பேசுமாம் .
சென்ட்ராயன், சண்முகராஜன், மயில்சாமி, பசங்க சிவகுமார், பிளாக் பாண்டி, தீப்பெட்டி கணேசன் உட்பட ஒரு நட்சத்திரக் கூட்டத்தையே கொண்ட இந்தப் படத்தில் ஹீரோவாக அறிமிகமாகும் ரக்ஷன் , மு.க.ஸ்டாலினின் மனைவியான துர்கா அம்மையாரின் தம்பி மகன்.
ஜெயப்பிரகாஷின் இசையில் பிரபல கவிஞர் காமகோடியன் ஒரு இடைவெளிக்கு பிறகு இந்தப் படத்துக்கு பாட்டு எழுதி இருப்பதோடு எல்லா பாடல்களையும் அவரே எழுதி இருக்கிறார் .
பொதுவாக உதவி இயக்குனர்கள் இயக்குனராக புரமோஷன் ஆவார்கள் . ஆனால் இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ரவிக்குமார் உதவி இயக்குனராக இருந்து தயாரிப்பாளராக புரமோஷன் ஆகி இருக்கிறார் .
வாழ்த்துகள்!