
பி ஸ்டுடியோஸ், கம்பெனி புரடக்ஷன்ஸ், ஐங்கரன் இன்டர்நேஷனல் தயாரிப்பில் எம். சசிகுமார், வரலக்ஷ்மி சரத்குமார், ஸ்டுடியோ 9 சுரேஷ் நடிக்க, பாலா எழுதி இயக்கி இருக்கும் படம் தாரை தப்பட்டை . படம் பட்டையைக் கிளப்புதுதா ? பட்டையைப் போட்டுட்டுக் கவுருதா? பார்க்கலாம் .
கிராமத்துக் கரகாட்டக் குழு நடத்தும் சன்னாசி (சசிகுமார்) , அதன் முக்கிய ஆட்டக்காரியும் சன்னாசியை அதி தீவிரமாய்க் காதலிப்பவளுமான சூறாவளி (வரலக்ஷ்மி சரத்குமார்),இதில் இருந்து விலகி நின்று தனது பாடல் இசைக் கலையை உயர்ந்த ஸ்தானத்தில் வைத்துப் பார்ப்பவரும் சன்னாசியின் அப்பனுமான சாமிப் புலவன் (ஜி எம் குமார்)……
மற்றும் வாத்திய மற்றும் நடனக் கலைஞர்கள் அடங்கிய குழுவின் தினசரி வாழ்க்கை , அவர்கள் படும் கஷ்டம் , புறக்கணிக்கப்படும் விதம் , அதையும் மீறி அந்தக் கலையை அவர்கள் நேசிக்கும் விதம் பற்றி சொல்லும் படமாக வீரியமாக விரியத் துவங்குகிறது தாரை தப்பட்டை .
சூறாவளியின் ஒருதலைக் காதல் ஒரு நிலையில் சன்னாசியின் மன மாற்றத்தால் இருமனக் காதலாகவும் மாறுகிறது
அப்பாவி, நல்லவன், எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாதவன், யாருமில்லாத அநாதை, ஆனால் கலெக்டரின் டிரைவராக இருந்து மாசம் நாற்பதாயிரம் சம்பளம் வாங்குபவன் என்று சொல்லிக் கொண்டு வரும் கருப்பையா என்பவன் (ஸ்டுடியோ 9 சுரேஷ்) , சூறாவளியை விரும்புவதாக சொல்லி , சூறாவளியின் அம்மாவிடம் பெண் கேட்க,
தான் சூறாவளியிடம் பேசினால் சரி வராது என்று அறியும் அந்தப் பெண்மணி ” என் மகளுக்கு வந்திருக்கும் நல்ல சம்மந்தத்தை நிறைவேற்றிக் கொடுத்து அவளை நல்லபடியாக வாழ வை ” என்று சன்னாசியை வற்புறுத்த ,
சன்னாசியும் மனசைக் கல்லாக்கிக் கொண்டு சூறாவளியை வார்த்தைகளால் குத்திக் கிழித்து அசிங்கப்படுத்தி கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்க , திருமணம் நடக்கிறது .
ஆனால் கருப்பையா அதுவரை தன்னை வெளிப்படுத்திக் கொண்டதற்கு நேர் மாறாக , உண்மையில் மிகக் கொடூர அயோக்கிய நபராக இருக்க…… அப்புறம் என்ன என்பதே தாரை தப்பட்டை .
இளையராஜாவின் ஆயிரமாவது படம் என்று டைட்டிலில் வரும்போது , இனி உலகத்தில் யாரும் செய்ய முடியாத சாதனையை செய்திருக்கும் அந்த மகா கலைஞனை எண்ணி பெருமிதத்தில் மனம் பூரிக்கிறது . வாழிய எங்கள் மண்ணின் கலைஞனே !
தமிழ் சினிமாவின் காட்டுக் கூச்சல் சத்தங்களுக்கு நடுவே, எப்போதும் திட்ட தீர்மானமான நடையுடன் கூடிய லயமாக ஒலிக்கும் இளையராஜாவின் இசை, சுகமோ சுகம் !
எதை எதையோ ரீமிக்ஸ் பண்ணி எரிச்சல்படுத்தும் தொல்லைகளுக்கு நடுவில் பாட்டுக்கோட்டையான மக்கள் கவிஞன் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் ”ஆரம்பம் ஆவதும் மண்ணுக்குள்ளே…..” பாடலை இளையராஜா ரீமிக்ஸ் செய்திருப்பது பாலாவையும் சேர்த்து போற்றுதலுக்குரிய விஷயம் !
இது போன்ற ரத்தினங்களை இந்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்துங்க இசை கணவான்களே !
கிளைமாக்ஸ் காட்சியின் போது புயல் பறக்கும் அந்த பின்னணி இசையில் நாதஸ்வர ஒலியின் துண்டுகளை, மின்னல் மின்னும் கால அளவுக்குள் பயன்படுத்தி இருக்கும் பாண்டித்யத்திலும் ராஜாவின் இசைக் கொடி பட்டொளி வீசிப் பறக்கிறது..
தாரை தப்பட்டையில் நிஜமாகவே பட்டையைக் கிளப்பி இருப்பது வரலக்ஷ்மி சரத்குமார்தான் .
அதிரடியாக ஆடுவது, படபடவென பேசுவது…. உடல்மொழி , கண்கள் , குரல் பேச்சு என்று சகலவிதத்திலும் சன்னாசி மீதான காதலை ஆர்ட்டிஷியன் ஊற்றுப் போல பீய்ச்சி அடித்துக் கொண்டே இருப்பது , சன்னாசியின் கேவலமாக வார்த்தைகளால் உடைவது , கல்யாண மேடையில் நொறுங்குவது ,
தாலி கட்டும் போது நடைப் பிணமாய் இருப்பது , மணக் கோலத்தில் இருக்கும் தன்னை உற்றுப் பார்க்கும் சன்னாசியை, ஒரு நொடி மீண்டும் உயிர்த்துப் பார்த்து விட்டு , அவன் பார்வையை திருப்பியதும் மீண்டும் நடைப் பிணமாவது ….
சபாஷ் வரூ…!
இது வரலட்சுமியின் படம் .
ஆரம்பத்தில் உணர்ச்சிகளை வெளிக்காட்டிக் கொள்ளாத கேரக்டராக இருந்து மெல்ல மெல்ல உணர்ச்சிப் பிழம்பாக மாறும் சன்னாசி பாத்திரத்தை செய்த விதத்தில் மகாராஜாவாக இருக்கிறார் சசிகுமார் . முகத்தில் விழும் முடியை சட்டை அலட்சியமாய் புறக்கணித்து நடந்து கொள்ளும் விதம் கேரக்டரின் தன்மையை உணர்த்துகிறது .
குரல் நடிப்பில் அடுத்த கட்டத்துக்குப் போயிருக்கிறார் உதடுகள் பேசாத வார்த்தைகளைக் கூடாத அந்த முட்டைக் கண்கள், உள்ளம் தைக்கும் வகையில் பேசுகின்றன. சூப்பர் சசிகுமார் .
கருப்பையாவாக நடித்து இருக்கும் ஸ்டுடியோ 9 சுரேஷ் . !
புதிய வார்ப்புகள் பாக்யராஜ் பாணியில் காட்டும் ஆரம்ப அப்பாவித்தனம், கண்ணியம், மென்மை எல்லாம் மாறி….. முற்றிலும் சம்மந்தம் இல்லாத வேறு மனிதராக தோன்றும் அந்த முதலிரவுக் காட்சியில் விதிர்விதிர்க்க வைக்கிறார் .
பொதுவாக சினிமாவின் வேறு துறைகளில் பிரபலமாகி விட்டு பிறகு நடிக்க வருபவர்கள் முதல் இரண்டு படங்களில் நடிகராக மாறாமல் , என்னவாக பிரபலம் ஆனோமோ அப்படியே நிற்பார்கள். ஆனால் அப்படி எல்லாம் எரிச்சல் படுத்தாமல் முதல் காட்சியிலேயே முழு நடிகராக நிற்கிறார் .
தவிர பழகிய நடிகர்கள் பலரே நடிக்க தயங்கும் ஒரு கதாபாத்திரத்தில் மிக அனாயசமாக நடித்துள்ளார் . வாழ்த்துகள் .
அதே நேரம், இந்த பாரட்டுகளுக்கான ராயல்டியில் பாலவுக்கு பெரும்பங்கு உண்டு.
தொடை தெரிய ஆடுபவள்தான்… கெட்டவார்த்தை பேசுபவள்தான்… குடிகாரிதான் .. ஆனால் தன்னை ஒருவன் தவறான நோக்கத்தில் நெருங்கினால் அவன் தோலை உரித்துத் தோரணம் கட்டி விடுபவள் என்ற வகையில் சூறாவளி கேரக்டரை வடிவமைத்து இருக்கும் இடத்தில் பாலா ஜொலிக்கிறார் .
ஆனால் இதெல்லாம் முதல் பாதியில் மட்டுமே !
கருப்பையா இப்படி ஒரு லுச்சா வில்லனா ? தவிர வழக்கமான பழகிய வில்லத்தனம் ! குறைவான வார்த்தைகள் பேசுகிற ஆனால் வேறு மாதிரியான விபரீத நபராக அவன் இருந்திருக்கலாமோ ?
அப்பச்சிகளின் தத்துப் பிள்ளைகளின் பின்னால் உள்ள சிதம்பர ரகசியத்தை கொண்டு வருவது ஒரு பக்கம் இருக்கட்டும் . அதற்கு இப்படி ஒரு பிரம்மப் பிரயத்தனத்துடன் மிக அழகாக உருவாக்கி இருக்கும் ஆட்டக்கார்களின் பின்புலம் எதுக்கு ?
இரண்டாம் பகுதியில் சாமிப்புலவன் ஜெயித்து சரியும் காட்சிகளை வைப்பதாலும் அடுத்தடுத்த ஆட்டக்காரிகளைத் தேடும் சன்னாசிக்கு கிடைக்கும் ‘சினிமா நடிகை’ அனுபவங்களைக் காட்டுவதாலும் மட்டுமே அது அவர்களின் கதையாக ஆகி விடுமா ?
அண்ணன் தங்கை கூட பிழைப்புக்காக இரட்டை அர்த்த வசனம் பேசி ஆடும் அவலத்தை சொல்வது கூட , முதல் பாதியில் பாலா காட்டி இருக்கும் ஆட்டக்காரர்களின் வாழ்வியல் என்ற யானைப் பசிக்கு, ஜஸ்ட் சோளப் பொறியாக மட்டும்தானே இருக்கிறது ? தலை வாழை இலையைப் போட்டு கூட்டுப் பொரியலை மட்டும் வைத்தால் எப்படி பாலா ?
ஜோசியக்காரன் சொன்னபடி, நாள் நட்சத்திரம் பார்த்து ராஜாவாக வாழ்வதற்காக பிறக்க வைக்கப்பட்ட குழந்தை, ஒரு பதினைந்து வருடம் கழித்து கச்சை கட்டி ஆடத்தான் வந்தது . சன்னாசி இன்னொரு சாமிப் புலவனாக ஆனான் என்பது போன்ற ஒரு சுமாரான முடிவை நோக்கியாவது படம் போயிருந்தால்,
அது முதல் பாதிக்குப் பொருத்தமான இரண்டாம் பகுதியாகவும் இருந்திருக்கும் . மூட நம்பிக்கையின் முட்டியை உடைதததாகவும் இருந்திருக்கும் .
எடுத்துக் கொண்ட கதையின் சூழலுக்கு உள்ளேயே ஒரு முடிவு, மூடநம்பிக்கைகான சாடல் என்ற இரண்டு விசயங்களிலும் வழக்கமாக ஜெயிக்கும் பாலா , இதில் இரண்டு விசயத்திலும் கோட்டை விட்டிருக்கிறார்.
எனினும் அந்த முதல் பாதி , ஓர் அச்சு அசலான வாழ்வியல் பதிவு .
தாரை தப்பட்டை ….. தாரை இங்கே ? தப்பட்டை எங்கே ?
மகுடம் சூடும் கலைஞர்
——————————————-
வரலக்ஷ்மி